ஐநா: கடந்த 3 ஆண்டுகளில் 1,000-க்கும் மேற்பட்ட மனிதாபிமான உதவி பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர். இது, அதற்கு முந்தைய 3 ஆண்டுகளில் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கையை விட மூன்று மடங்கு அதிகம் என ஐநா தெரிவித்துள்ளது. மனிதாபிமானப் பணியாளர்கள் மீதான தாக்குதல்களை கண்டித்து, அனைத்துப் போராளிகளும் சர்வதேசச் சட்டத்திற்கு இணங்க அவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தி, ஐநாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்தின் மீது ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் விவாதம் நடந்தது.
இதில் ஐநா மனிதாபிமான உதவி தலைவர் டாம் பிளெட்சர் பேசியதாவது: 2023 முதல் 2025 வரை கொல்லப்பட்ட 1,010-க்கும் மேற்பட்ட மனிதாபிமான பணியாளர்களில், 560-க்கும் மேற்பட்டோர் காசா மற்றும் மேற்குக் கரையிலும், 130 பேர் சூடானிலும், 60 பேர் தெற்கு சூடானிலும், 25 பேர் உக்ரைனிலும், 25 பேர் காங்கோவிலும் இறந்தனர். கடந்த 2020 முதல் 2022 வரையிலான காலக்கட்டத்தில் மனிதாபிமான உதவி பணியாளர்கள் 377 பேர் உயிரிழந்தனர்.
2023ல் தொடங்கிய இஸ்ரேல்- ஹமாஸ் போரின்போது உயிரிழப்புகள் திடீரென அதிகரித்தன.
துப்பாக்கிச் சூடுகளும் வான்வழித் தாக்குதல்களும் தொடர்ந்த நிலையில் தற்போது அங்கு போர் நிறுத்தம் அமலில் உள்ளது. கடந்த ஆண்டில் மட்டும், 21 நாடுகளில் குறைந்தது 326 உதவிப் பணியாளர்கள் கொல்லப்பட்டனர். 2024ல் , உணவு, தண்ணீர், மருந்துகளை விநியோகிக்கும் போது, உலகளாவிய நோய்ப் பரவல் மையங்களில் 383 பேர் கொல்லப்பட்டனர். ஏமனில், 73 ஐ.நா. பணியாளர்களும், அரசு சாரா அமைப்புகளில் பணியாற்றும் 10க்கும் மேற்பட்டவர்களும் ஹவுதி போராளிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு டோம் பிளெட்சர் கூறினார்.
