ஐநா: ஐநா சபையின் ஆறு முக்கிய அமைப்புகளில் ஒன்றான ஐ.நா பொருளாதார மற்றும் சமூக மன்றத்தின் பல்வேறு துணை அமைப்புகளுக்கு இந்தியா தேர்வு செய்யப்பட்டுள்ளது. வளர்ச்சிக்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆணையம், அரசு சாரா அமைப்புகளுக்கான குழு, மற்றும் திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைப்புக் குழு உள்ளிட்ட ஐநா பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார மன்றத்தின் பல்வேறு துணை அமைப்புகளுக்கு, 2027-2030 வரையிலான பதவிக்காலத்திற்கு இந்தியா ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்தியத் தூதர் பிரீத்தி சரண், பொருளாதார, சமூக மற்றும் கலாசார உரிமைகளுக்கான குழுவிற்கும் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஐநா சபையின் வளர்ச்சிக்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆணையம் (சிஎஸ்டிடி), அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் வளர்ச்சியைப் பாதிக்கும் பிரச்னைகள் குறித்த கலந்துரையாடலுக்காக ஆண்டுதோறும் ஒரு அரசுகளுக்கிடையேயான மன்றத்தை நடத்துகிறது. அரசு சாரா அமைப்புகளுக்கான குழு என்பது ஐ.நா பொருளாதார மற்றும் சமூக மன்றத்தின் ஒரு நிரந்தரக் குழுவாகும், மேலும் அரசு சாரா அமைப்புகளால் சமர்ப்பிக்கப்படும் கலந்தாய்வு அந்தஸ்துக்கான விண்ணப்பங்களையும், மறுவகைப்படுத்தலுக்கான கோரிக்கைகளையும் பரிசீலிப்பது அதன் முக்கியப் பணிகளில் அடங்கும்.
