தாராபுரம் நல்லதங்காள் அணைக்கட்டு திட்டப் பணி ஆய்வறிக்கை நகல் வழங்க ஒப்புதல்

*தேர்தல் புறக்கணிப்பை வாபஸ் பெற்ற விவசாயிகள்

தாராபுரம் : தாராபுரம் நல்லதங்காள் அணைக்கட்டுக்கு திட்டப் பணி ஆய்வறிக்கை நகலை விவசாயிகளுக்கு வழங்குவதாக அதிகாரிகள் ஒப்புதல் தெரிவித்தால் தேர்தல் புறக்கணிப்பை விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் வாபஸ் பெற்றனர்.

தாராபுரத்தை அடுத்த பொன்னிவாடி கிராமம் கோனேரிப்பட்டி அருகே உள்ளது நல்லதங்காள் அணைக்கட்டு. இந்த அணைக்கட்டுக்கு திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம், பழனி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரதமா நதி, குதிரையாறு போன்ற அணைகளின் இருந்து உபரி நீர், நல்லதங்காள் நீரோடை வழியாக திறந்து விடுபட்டு அமராவதி ஆற்றில் கலந்து வந்தது.

இதனால் தாராபுரம், மூலனூர், வெள்ளக்கோயில் பகுதிகளில் 4260 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தது.இருப்பினும் மழைக்காலங்களில் மட்டுமே இந்த அணைக்கட்டில் தண்ணீர் தேக்கி வைக்கப்படுவதால் ஆண்டு முழுவதும் பாசன நீர் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டு வருவதாகவும், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குதிரையாறு அணை நிரம்பும் பொழுது அணையின் மழைக்கால உபரி நீரை தனியாக கால்வாய் அமைத்து நல்லதங்காள் அணைக்கட்டுக்கு வழங்க வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.இக்கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தமிழ்நாடு அரசு ரூ.60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டப் பணிகளை துவக்கியது.

இந்நிலையில் குதிரையாறு அணையில் இருந்து நல்லதங்காள் அணைக்கட்டுக்கு உபரி நீரை கொண்டு வரும் கால்வாய் வெட்டும் பணி குறித்த தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை என்றும், அமராவதி ஆற்றில் வீணாகச் சென்று கடலில் கலக்கும் தண்ணீரை நல்லதங்காள் அணைக்கு நிரம்பும் வரை தண்ணீர் விட வேண்டும் என்று விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் அப்பகுதி விவசாயிகளுடன் இணைந்து ரூ.60 கோடி ரூபாய் திட்டத்திற்கான திட்ட வரைவுகளையும் ஆய்வு அறிக்கை நகலை தங்களுக்கு வழங்க வேண்டும் இல்லாவிட்டால் சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்போம் என அறிக்கை வெளியிட்டனர்.

இந்த நிலையில் நேற்று தாராபுரம் வட்டாச்சியர் அலுவலகத்தில் தாசில்தார் ராமலிங்கம் தலைமையில் முத்தரப்பு பேச்சு வார்த்தை நடந்தது. இதில் திட்ட வரைவுகளையும் ஆய்வு அறிக்கை நகலை வழங்கப்பட்டதையடுத்து தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தை விவசாயிகள் வாபஸ் பெற்றனர்.

Related Stories: