*மே மாதத்தில் நடைபெறுவதாக டிஎம்பி தலைமை செயல் அதிகாரி தகவல்
நெல்லை : வங்கிகளில் பணியை பெறும் நோக்கில் நடத்திய திறன் மேம்பாட்டு பயிற்சி முடித்த ெநல்லை, தென்காசி கல்லூரி மாணவர்களுக்கு மே மாதத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது என்று டிஎம்பி தலைமை செயல் அதிகாரி முத்தையா தெரிவித்தார்.
தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி அறக்கட்டளை (டிஎம்பி பவுண்டேஷன்) மற்றும் ஐஐடி சென்னையுடன் இணைந்து நெல்லை, தென்காசி மாவட்ட கலை, அறிவியல் கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கு, வங்கி மற்றும் வங்கி சார்ந்த நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற்று தரும் நோக்கில் திறன் மேம்பாட்டு பயிற்சியானது கடந்த டிச.10ம் தேதியன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக வளாகத்தில் தொடங்கி வைக்கப்பட்டது. நெல்லை, தென்காசி மாவட்டங்களை சேர்ந்த 9 கல்லூரிகளில் இருந்து 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ- மாணவியர் இப்பயிற்சியில் சேர்வதற்கு இணைய வழி தேர்வு எழுதினர்.
இதில் 350 மாணவ- மாணவியர் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு 40 மணி நேர வகுப்பறை பயிற்சி, 2 மாத இணையவழி பயிற்சியும் வழங்கப்பட்டது.
இப்பயிற்சியின் நிறைவாக சான்றிதழ் வழங்கும் விழா, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரசேகரன் முன்னிலையில் நடைபெற்றது. இப்பயிற்சியில் கலந்துகொண்டு வெற்றிகரமாக பயிற்சி பெற்று நிறைவு செய்த மாணவ- மாணவியருக்கு சிறப்பு அழைப்பாளர் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் தலைமை நிர்வாக இயக்குநரும், டிஎம்பி பவுண்டேஷனின் நிர்வாக அறங்காவலருமான சாலி எஸ்.நாயர் சான்றிதழ் வழங்கினார்.
டிஎம்பி அறக்கட்டளையின் தலைமை செயல் அதிகாரி முத்தையா, ஐஐடி மெட்ராஸ் பிரவர்த்தக் டெக்னாலஜி பவுண்டேஷன், டிஜிட்டல் ஸ்கில்ஸ் அகாடமியின் நிறுவனரும், ஆலோசகருமான மங்களா சுந்தர கிருஷ்ணன், பல்கலைக்கழக பதிவாளர் சாக்ரடீஸ், ஐஐடி மெட்ராஸ் – பிரவர்த்தக் டெக்னாலஜிஸ் பவுண்டேஷனின் புதிய திட்ட தலைவர் ராஜேந்திர மூத்தா, இன்பெக்ட் ப்ரோ ட்ரெய்னர்ஸ் நிர்வாக இயக்குநருமான பாலாஜி ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இத்திட்டத்தின் அடுத்த கட்டமாக கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்ட மாணவர்கள் பயன்பெறும் வகையில் விரைவில் அங்கு பயிற்சி தொடங்கப்பட உள்ளது எனவும், இத்திட்டத்தில் பயிற்சி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் ஐஐடி சென்னையுடன் இணைந்து வேலைவாய்ப்பு பெறுவதற்கான வேலைவாய்ப்பு முகாம் வரும் மே 2026ல் நடத்தப்படும் என டிஎம்பி அறக்கட்டளையின் தலைமை செயல் அதிகாரி முத்தையா தெரிவித்தார்.
