தாவரவியல் பூங்காவில் தொட்டிகளில் பூத்து குலுங்கும் மலர்கள்

*சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு

ஊட்டி : தாவரவியல் பூங்காவில் வைக்கப்பட்டுள்ள தொட்டிகளில் மலர்கள் பூக்கத்துவங்கியுள்ளது.கோடை சீசன் களை கட்டியுள்ள நிலையில் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்துக் கொண்டே செல்கிறது.

இம்மாதம் 23ம் தேதி சட்டமன்ற தேர்தல் முடிந்த பின்னர் ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை பல மடங்கு உயர வாய்ப்புள்ளது. இந்நிலையில், மலர் கண்காட்சிக்கான தேதி அறிவிக்கப்படவில்லை என்ற போதிலும், ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மே மாதம் இரண்டாவது வாரத்தில் மலர் கண்காட்சி நடக்கும்.

மலர் கண்காட்சிக்காக பூங்காவை தயார் செய்யும் பணிகள் தற்போது துரித கதியில் நடந்து வருகிறது. 35 ஆயிரம் தொட்டிகளில் வைக்கப்பட்டுள்ள ஒரு சில மலர் செடிகளில் தற்போது மலர்கள் பூத்துள்ளன. குறிப்பாக, பேன்சி, சால்வியா, சைக்ளோமென் போன்ற மலர்கள் பூத்துள்ளன.

இதனை சுற்றுலா பயணிகள் ரசித்து செல்கின்றனர். மலர் கண்காட்சியின் போது, அவை அனைத்தும் மாடங்களில் வைக்கப்படும். இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்லலாம்.

இந்நிலையில், தற்போது பூங்காவில் உள்ள பெரணி இல்லம், கள்ளிச் செடிகள் வைக்கப்பட்டுள்ள கண்ணாடி மாளிகை ஆகியவை திறக்கப்பட்டுள்ள நிலையில், சுற்றுலா பயணிகள் பல்வேறு வகையான பெரணி செடிகளையும், கள்ளிச் செடிகளையும் வியப்புடன் கண்டு ரசித்து செல்கின்றனர்.

Related Stories: