ஈரான் போர் பதற்றத்தால் சட்டத்தின் பிடியில் சிக்கும் நெல்லை டீக்கடைக்காரர்கள்

*தொடர் சோதனையில் அடுத்தடுத்து சிக்கும் சிலிண்டர்கள்

நெல்லை : ஈரானில் நிலவும் போர் பதற்றம் காரணமாக வணிக பயன்பாட்டுக்கான காஸ் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் நெல்லை மாவட்டத்தில் கலெக்டர் ஆலோசனைக்கு பிறகு டீக்கடைகளில் வீட்டு உபயோக சிலிண்டர்களை அதிகாரிகள் அதிரடியாக ஆய்வு நடத்தி கண்டறிந்து பறிமுதல் செய்து வருகின்றனர்.ஈரானுக்கும், இஸ்ரேல் மற்றும் அமெரிக்க படைகளுக்கும் இடையே மிகப்பெரிய அளவில் போர் பதற்றம் மூண்டுள்ளது.

இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக வணிக பயன்பாட்டுக்கான காஸ் சிலிண்டர்களின் விலை கிடுகிடுவென உயர்ந்தது மட்டுமில்லாமல் சந்தையில் தட்டுப்பாடும் நிலவி வருகிறது. இந்த உலகளாவிய நெருக்கடி நெல்லை மாவட்டத்தில் உள்ள சிறிய வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை ஆட்டம் காண வைத்துள்ளது.

வணிக சிலிண்டர்கள் சரியாக கிடைக்காததாலும் அதன் விலை கட்டுப்படியாகாததாலும் டீக்கடைகள் பேக்கரிகள் மற்றும் சிறிய உணவகங்களை நடத்தும் வியாபாரிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். தங்களது தொழிலை தொடர்ந்து நடத்த வேறு வழியின்றி அவர்கள் ஒரு குறுக்கு வழியை தேர்ந்தெடுத்தனர்.

கள்ளச்சந்தையில் அதிக விலை கொடுத்து வீட்டு உபயோக காஸ் சிலிண்டர்களை வாங்கி தங்களது கடைகளில் வியாபாரிகள் பயன்படுத்த தொடங்கினர். இதனால் வீடுகளுக்கு செல்ல வேண்டிய காஸ் சிலிண்டர்கள் பெருமளவில் வணிக நிறுவனங்களுக்கு மடைமாற்றம் ஆகின. இந்த முறைகேடு குறித்து அதிகாரிகளுக்கு ரகசிய தகவல்கள் பறந்தன.

இதைத்தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி நெல்லை கலெக்டர் சுகுமார் காணொலி காட்சி மூலம் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தினார். கூட்டத்திற்கு கலெக்டர் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பங்கேற்ற உணவுப்பொருள் வழங்கல் மற்றும் குடிமைப்பொருள் குற்றப் புலனாய்வு அதிகாரிகளிடம் வீட்டு உபயோக சிலிண்டர்கள் முறைகேடாக பயன்படுத்தப்படுவதை தடுக்க வேண்டும் என கலெக்டர் கடுமையாக எச்சரித்து பேசினார்.

கலெக்டரின் உத்தரவை தொடர்ந்து அதிகாரிகள் உடனடியாக களத்தில் இறங்கி அடுத்தடுத்த நாட்களில் தொடர் வேட்டையை நடத்தினர். இதில், குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு சிறப்பு எஸ்ஐ சரவணன் தலைமையிலான போலீசார் மேலப்பாளையம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு டீக்கடையில் அதிரடி சோதனை நடத்தினர்.

அங்கு வணிக நோக்கத்திற்காக பயன்படுத்திய இண்டேன் காஸ் சிலிண்டரை பறிமுதல் செய்த போலீசார். இது தொடர்பாக யூகான் ஆசிக் என்பவரை கைது செய்தனர். இதேபோல், ராதாபுரம் வட்ட வழங்கல் அலுவலர் ராஜலட்சுமி மற்றும் போலீசார் பணகுடி புனித சூசையப்பர் சர்ச் அருகேயுள்ள டீக்கடையில் சோதனை மேற்கொண்டு அங்கு பயன்படுத்திய பாரத் மற்றும் இண்டேன் சிலிண்டர்களை பறிமுதல் செய்தனர்.

இதனிடையே தனி தாசில்தார் பிரபாகர் அருண்செல்வம் மற்றும் குற்றப்புலனாய்வு எஸ்ஐ சரவணக்குமார் தலைமையிலான குழுவினர் நெல்லை டவுன் மற்றும் சுத்தமல்லி பகுதிகளில் மெகா வேட்டையில் ஈடுபட்டனர்.

டவுன் காட்சி மண்டபம் அருகே உள்ள டீ ஸ்டாலில் ஒரு சிலிண்டரையும் பிரபல பேக்கரியில் 2 சிலிண்டர்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் சுத்தமல்லி விலக்கு பகுதியில் உள்ள ஓட்டலில் ஒரு சிலிண்டரையும், டிபன் சென்டரில் 2 சிலிண்டர்களையும், டீ ஸ்டாலில் 2 சிலிண்டர்களையும் என அதிகாரிகள் அடுத்தடுத்து புகுந்து அதிரடி காட்டினர்.

முறைகேட்டில் ஈடுபட்ட நபர்கள் மீது அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் வணிக பயன்பாட்டுக்காக பயன்படுத்தப்பட்ட 11க்கும் மேற்பட்ட வீட்டு உபயோக சிலிண்டர்களை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாகக் கூறப்படுகிறது.

இந்த சோதனை குறித்து குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு அதிகாரி ஒருவர் கூறுகையில் ‘‘சாமானிய மக்கள் வீடுகளில் பயன்படுத்தும் சிலிண்டர்களை கள்ளச்சந்தையில் வாங்கி பதுக்குவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. கலெக்டர் பிறப்பித்த உத்தரவின்பேரில் நெல்லை மாவட்டம் முழுவதும் இந்த சோதனை தொடர்ந்து நடைபெறும்’’ என்றார்.

Related Stories: