தேவாரம், ஏப்.6: தேவாரம் பகுதியில், மல்லி சாகுபடி பரப்பை அதிகரிக்க வேளாண் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உத்தமபாளையம் வட்டாரத்தில் கோம்பை, பண்ணைப்புரம், தேவாரம், போடி பகுதிகளில் சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பில் மல்லி சாகுபடி நடந்து வந்தது. இதில் சுமார் 900 ஏக்கர் வரை பண்ணைப்புரம், கோம்பை பகுதியில் சாகுபடி நடந்தது. இடைக்காலங்களில் குறிப்பாக கடந்த சிலவருடங்களுக்கு முன்பு மழை இல்லாத நிலையில் இதன் சாகுபடி பரப்பு குறைந்து விட்டது. மல்லி சாகுபடியைப் பொறுத்தவரை தண்ணீர் மிகவும் அவசியம். இந்த வருடம் தென்மேற்கு பருவமழை, முன்கூட்டியே பெய்தும் பலனில்லாமல் போனது. இதனால் கோடைமழையாவது பலனைக் கொடுக்குமா என விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர். பருவமழை தொடர்ந்து பெய்யும்போது நிலத்தடி நீர்மட்டம் உயரும். இதனால் மல்லித்தழை விவசாயம் பரவலாக இருக்கும் என்பதால், இதனை ஊக்குவிக்க வேளாண்மைதுறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
