திருப்பூர்,ஏப்.6: திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட 8 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தலை முன்னிட்டு வருகிற 23ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்குப்பதிவுக்கு பின்னர் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையமான திருப்பூர் எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கலைக்கல்லூரியில் கொண்டு வரப்பட உள்ளது.
இந்த நிலையில் வாக்கு எண்ணும் மையமான எல்.ஆர்.ஜி. கல்லூரியில் ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் சட்டமன்ற தொகுதி வாரியாக பிரித்து பாதுகாப்பாக வைக்கப்பட உள்ளது.
இதற்கிடையே தாராபுரம் (தனி) மற்றும் காங்கயம் சட்ட மன்றத் தொகுதி தேர்தல் பொதுப் பார்வையாளர் சுதா வர்மா, வாக்கு எண்ணும் மையத்தில் தாராபுரம் (தனி) மற்றும் காங்கயம் சட்டமன்றத் தொகுதிற்குட்பட்ட மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள், பாதுகாப்பு அறைகள், வாக்கு எண்ணும் மையங்கள், தேர்தல் மேற்பார்வையாளர்கள் அறை, ஊடக மையம் ஆகியவை அமைய உள்ள இடங்களின் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
