தமிழகத்தில் வரும் ஏப்.23ம் தேதி சட்டமன்ற பொது தேர்தல் நடக்கிறது. வேட்புமனு தாக்கல் வரும் 6ம் தேதி முடிகிறது. வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க தமிழகம் முழுவதும் பறக்கும் படையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், திருச்சி மாவட்டம் லால்குடி சட்டமன்ற தொகுதியில் தவெக சார்பில் முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் போட்டியிடுகிறார். லால்குடி அருகே உள்ள மளவனூர் கிராமத்தை சேர்ந்த கு.ப.கிருஷ்ணனின் மைத்துனரான நீலமேகம் மகன் அரவிந்த் வீட்டில் வாக்காளர்களுக்கு கொடுக்க பணம் பதுக்கி வைத்து இருப்பதாக தேர்தல் பறக்கும்படைக்கு தகவல் வந்தது.
இதையடுத்து தேர்தல் பறக்கும்படை அலுவலர் ரமேஷ் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் அரவிந்த் வீட்டுக்கு சென்று கதவை தட்டினர். அப்போது வீட்டிலிருந்த தந்தை, மகன் கதவை திறக்கவில்லை. இதனால் கோபமடைந்த அதிகாரிகள் கதவை திறக்க முடியுமா, முடியாது என ஆவேசமாக கேட்டனர். பின்னர் கதவு திறக்கப்பட்டது. பறக்கும்படையினர் வீட்டுக்குள் சென்று சோதனையிட்டபோது அறையில் ஒரு பையில் கட்டுக்கட்டாக ரூ.50 லட்சம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ரூ.10 லட்சம் வரை மட்டுமே பறிமுதல் செய்ய தேர்தல் பறக்கும் படைக்கு அதிகாரம் உள்ளதால் இதுகுறித்து வருமான வரித்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து திருச்சியிலிருந்து வருமான வருமான வரித்துறை அதிகாரிகள் லால்குடி தேர்தல் நடத்தும் அலுவலரும் ஆர்டிஓவுமான ஸ்ரீதர், உதவி தேர்தல் நடத்து அலுவலரும் தாசில்தாருமான தமிழ்செல்வனுடன் சென்றனர்.
பின்னர் பணம் எண்ணும் இயந்திரத்தை எடுத்து சென்று அந்த பணத்தை எண்ணியபோது ரூ.50 லட்சம் இருந்தது தெரியவந்தது. இந்த பணத்தை எதற்காக வைத்துள்ளீர்கள், உரிய ஆவணங்கள் இருக்கிறதா என தந்தை, மகனிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் சரமாரி கேள்வி கேட்டனர். ஆனால் அவர்கள் முன்னுக்குபின் முரணாக பதிலளித்தனர். இதையடுத்து அதிகாரிகள் பையுடன் பணத்தை பறிமுதல் செய்து வாகனத்தில் எடுத்து சென்றனர்.
* விஜய் கொடுத்த பணமா?
லால்குடி தவெக வேட்பாளர் கு.ப.கிருஷ்ணனின் உறவினர் வீட்டில் ரூ.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் விஜய் திருச்சி வந்து வேட்புமனு தாக்கல் செய்து விட்டு, பிரசாரம் மேற்கொண்ட பின் சென்னை புறப்பட்டு சென்றார். எனவே விஜய் நேற்று முன்தினம் திருச்சியில் வேட்பாளர்களுக்கு தேர்தல் செலவுக்கு பணம் கொடுத்திருக்கலாம், அந்த பணம் வேட்பாளரின் உறவினர் வீட்டில் சிக்கியிருக்கலாம் என்று லால்குடி தொகுதி முழுவதும் பரபரப்பாக பேசப்படுகிறது.
