தவெக தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். விஜய் தனது வேட்பு மனுவை கடந்த மார்ச் 30ம் தேதி சென்னை பெரம்பூர் தேர்தல் அலுவலர் கீதாவிடம் தாக்கல் செய்தார். அந்த மனுவில் தன் பெயர் ஜோசப் விஜய், வயது 52 என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில், திருச்சி கிழக்கு தொகுதியில் நேற்று முன்தினம் உதவி தேர்தல் அலுவலர் முத்து முருகேச பாண்டியனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். தொடர்ந்து, சொத்து மதிப்பு உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய உறுதிமொழி பத்திரத்தை (அபிடவிட்) இணைத்திருந்தார்.
இதில், மார்ச் 30ம் தேதி பெரம்பூர் தொகுதியில் தாக்கல் செய்திருந்த அதே மதிப்பிலான சொத்து மதிப்பு குறித்த தகவல்களை திருச்சி கிழக்கிலும் தெரிவித்து இருந்தார். ஆனால், பெரம்பூரில் வழக்கு ஏதுவும் இல்லை என்று கூறியிருந்தவர், திருச்சி கிழக்கில் தாக்கல் செய்த அபிடவிட்டில் 2 குற்ற வழக்கு இருப்பதாக தெரிவித்து உள்ளார். கடந்த 30ம் தேதி வேட்புமனு தாக்கலை தொடர்ந்து கொளத்தூரில் நடந்த பிரசாரத்தில் அனுமதியை தாண்டி கூட்டத்தை கூட்டி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக எழுந்த புகாரின் பேரில் விஜய் மற்றும் 5000 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதவிர, கடந்த 2025 ஆகஸ்ட் மாதம் மதுரை தவெக மாநாட்டில் விஜய் நடைமேடையில் நடந்து வரும் போது ஆர்வத்தில் நடைமேடை மீது ஏறிய நபரை 10 பவுன்சர்கள் இடித்து தள்ளி அவதூறாக திட்டியது தொடர்பாக அந்த நபர் புகார் அளித்திருந்தார். அது தொடர்பாக வழக்கு இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். ஆனால் இந்த வழக்கு குறித்து பெரம்பூர் வேட்புமனு பிரமாண பத்திரத்தில் விஜய் எதுவும் குறிப்பிடவில்லை. இதேபோல், பெரம்பூரில் வேட்பு மனு தாக்கலில் விஜய் தனக்கு 52வயது என குறிப்பிட்டு இருந்தார்.

திருச்சி கிழக்கு தொகுதி வேட்பு மனுவின் போது, 51 வயது என குறிப்பிட்டு உள்ளார். அதில், ‘‘எஸ்.ஏ.சந்திரசேகரன் என்பவரின் மகன் 51வயதுடைய ஜோசப் விஜய் என்றும், சென்னை நீலாங்கரையில் வசித்து வருவதாகவும் முகவரியை தெரிவித்துள்ளார். மார்ச் 30ம் தேதி சென்னை பெரம்பூரில் 52வயது என குறிப்பிட்டு விட்டு, 3 நாளில் ஒரு வயது குறைந்தது எப்படி எனவும், சினிமாவில் டபுள் ஆக்ஷன் நடித்ததுபோல் அரசியலிலும் விஜய் டபுள் ஆக்ஷன் நடிக்கிறார் போல எனவும் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.
வேட்புமனுவில் வயது வரம்பு, குற்றப் பின்னணி மறைத்தாலோ, பிரமாணப் பத்திரங்களில் தவறான தகவல்கள் அளித்தாலோ அல்லது முழுமையான தகவல்களை கொடுக்கவில்லை என்றாலோ, கையொப்பமில்லை என்றாலோ தேர்தல் ஆணையத்தால் வேட்புமனு நிராகரிக்கப்படலாம்.
பெரம்பூரில் தாக்கல் செய்த வேட்புமனுவில் குற்ற வழக்குகளை விஜய் மறைத்திருக்கிறார். ஆனால் திருச்சி கிழக்கில் குற்ற வழக்குகளை காட்டி இருக்கிறார். அதேபோல், வயதையும் மாற்றி தெரிவித்து உள்ளார். 2 தொகுதிகளில் தாக்கல் செய்யப்பட்ட விஜய்யின் வேட்பு மனுவில் முரண்பாடுகள் உள்ளதால் அவரது மனு நிராகரிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்து உள்ளது.
* ஜான் ஆரோக்கியசாமி காரணமா?
தவெகவில் தேர்தல் வியூக வகுப்பாளராக இருப்பவர் ஜான் ஆரோக்கியசாமி. இவரது பூர்வீகம் திருச்சி கிழக்கு தொகுதியில் உள்ள இருதயபுரம். கிழக்கு தொகுதியில் கிறிஸ்தவர்களின் வாக்குகளை மொத்தமாக நான் பெற்றுத்தருகிறேன் என்று விஜய்யிடம் அவர் கூறினாராம். இதை நம்பித்தான் விஜய் திருச்சி கிழக்கில் களமிறங்கினாராம். ஆனால் நிலைமை அவ்வாறு இல்லை என்பதால், விஜய் அப்செட்டில் இருக்கிறாராம்.
* தேர்தலில் போட்டியிடாமல் இருக்க குளறுபடியா?
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்த பிறகு, தமிழக வெற்றிக் கழகத்தினர் செய்யும் செயல்கள் ஒவ்வொன்றும் தனி ரகம் என்ற ரீதியில்தான் உள்ளது. குறிப்பாக, பரப்புரைக்கு அனுமதி பெற செயலியில் 48 மணி நேரத்திற்கு முன்னதாக விண்ணப்பிக்க வேண்டும் என்பது கூட தெரியாமல் நேரில் சென்று கடிதம் கொடுத்து அனுமதி கேட்டுள்ளனர். அதேபோல், சிடிஆர் நிர்மல்குமார் தவெக தலைவர் விஜய்க்கு பாதுகாப்பு குறைபாடு உள்ளதாக ஒன்றிய உள்துறைச் செயலாளருக்கு கடிதம் எழுத நினைத்து முன்னாள் உள்துறைச் செயலாளருக்கு தவறுதலாகக் கடிதம்
எழுதினார்.
மேலும், அவிநாசி சட்டமன்றத் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடும் கமலி வேட்புமனுவே இல்லாமல் வேட்புமனுத் தாக்கல் செய்யச் சென்று அலுவலர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார். தவெக நிர்வாகிகளின் இந்த செயல்களை விஞ்சும் வகையில் 3 நாட்கள் இடைவெளியில் 2 தொகுகளில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுவில் வயசு மாற்றி சிறப்பான சம்பவம் செய்துள்ளார் அக்கட்சியின் தலைவர் விஜய்.
ஒரு கட்சியின் தலைவர் தான் போட்டியிடும் தொகுதிகளில் தாக்கல் செய்யும் வேட்புமனுவைக் கூடச் சரிபார்த்து தாக்கல் செய்யாமல் இருப்பது கேள்விக்கும் விமர்சனத்திற்கும் உள்ளாகியுள்ளது. தவறான தகவல்களைக் கொடுத்தால் வேட்புமனு நிராகரிக்கப்படும் பட்சத்தில் அதைக் காரணமாக வைத்து தேர்தலில் நிற்காமல் ஒதுங்கிக்கொள்ளலாம் என்ற திட்டத்தில்தான் இவ்வாறு முரணான தகவல்களை கொடுக்கிறார்களோ என்ற சந்தேகத்தைச் சமூகவலைதளங்களில் எழுப்பி வருகிறார்கள்.
