×

நச்னு நாலு கேள்வி: தவெகவுடன் எங்களுக்கு போட்டி கிடையாது: – பெரம்பூர் தொகுதி திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகர்

1. பெரம்பூர் தொகுதியில் விஜய் வந்து நிற்பதால், இந்த தொகுதி ஸ்டார் அந்தஸ்தை பெறுகிறதா? அல்லது ஏற்கனவே உங்களது பணிகளின் காரணமாக உங்களுக்கான பிரகாசம் இந்த தொகுதியில் ஸ்டாராக மின்னுகிறதா? பெரம்பூர் தொகுதியை பொறுத்தவரையில் குறிப்பிட்ட கால கட்டத்திற்குள் முடிக்கப்பட்ட மக்கள் நலப்பணிகள் தான் இங்கே தாரக மந்திரமே தவிர, வேற எதுவும் இல்லை. அதிலும் அரசியலைப் பொறுத்தவரை தமிழ்நாட்டு அரசியல் மட்டுமல்ல, இந்திய அரசியலைப் பொறுத்தவரையில் ஸ்டார் என்றால் தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் சூப்பர் ஸ்டார்.

2. எந்த கணக்கை மனதில் கொண்டு விஜய், பெரம்பூர் தொகுதியில் நிற்கிறார் என நினைக்கிறீர்கள்? அந்த சூழலை எப்படி நீங்கள் எதிர்கொள்வீர்கள்? தேர்தல் களத்தில் எல்லா வேட்பாளர்களையும் போலவே விஜய் எனக்கு ஒரு வேட்பாளர் தான். பெரம்பூர் தொகுதி என்பது காலம் காலமாக திமுகவின் கோட்டை. அரசின் திட்டங்கள் மற்றும் மக்கள் நலப்பணிகள் இந்தத் தொகுதியில் மிகச்சிறப்பாகச் சென்றடைந்துள்ளன. அந்த நம்பிக்கை எங்களுக்கும் இருக்கிறது, மக்களுக்கும் இருக்கிறது.

3. மற்ற தொகுதிகளில் எப்படியோ. ஆனால், பெரம்பூரை பொறுத்தவரை, விஜய் சொன்னது போல், திமுக-தவெக இடையேதான் போட்டியா? பெரம்பூரில் மட்டுமல்ல, தமிழகம் முழுவதுமே போட்டி என்பது திமுகவிற்கும் டெல்லியில் உள்ள பாஜ கூட்டணியான என்டிஏ இடையேதான் போட்டியே. தமிழகத்தில் தவெகவுடன் எங்களுக்கு போட்டி கிடையாது.

4. எந்தெந்த விஷயங்கள் உங்களுக்கான வெற்றி யை பெரம்பூர் தொகுதியில் சாத்தியமாக்கும்? 2 முறை என்னைத் தேர்ந்தெடுத்த மக்களுக்கு, இந்த அரசின் மூலம் என்னென்ன பணிகள் செய்து கொடுக்க முடியுமோ அத்தனை பணிகளும் செய்துமுடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கடந்த ஐந்து ஆண்டுகளில் பெரம்பூர் தொகுதியில் முன்னெப்போதும் இல்லாத வகையில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. மேலும், நான் எப்போதும் மக்களால் எளிதில் அணுகக்கூடிய ஒரு எம்.எல்.ஏ.வாகவே இருந்து வருகிறேன். மக்கள் எந்நேரமும் என்னை நேரடியாகச் சந்திக்கலாம் அல்லது தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம். இந்த அணுகுமுறைதான் எனது மிகப்பெரிய பலம்.

Tags : Nachnu Nalu ,Perampur ,R. D. Chekar ,Vijay ,
× RELATED சொல்லிட்டாங்க…