- வீரபாண்டியன்
- அஇஅதிமுக
- பாஜக
- கம்யூனிஸ்ட்
- இந்தியா
- மாநில செயலாளர்
- கோவில்பட்டி
- திமுக
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- முதல் அமைச்சர்
இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் கோவில்பட்டியில் அளித்த பேட்டி: நாங்கள் செல்லும் இடங்களில் எல்லாம் திமுக தலைமையிலான மதசார்ப்பற்ற கூட்டணிக்கு மக்கள் ஆதரவு தெரிவிக்கின்றனர். பாஜ ஆட்சி அதிகாரத்தில் உள்ள மாநிலங்களில் ஜனநாயகம் தோற்கடிக்கப்பட்டுள்ளன. மாநில உரிமைகளுக்காக தமிழ்நாடு முதல்வர் போராடினார். அதனை அரசியலாக எதிர்கொள்வதற்கு மாறாக ஒரு மத உணர்வை தூண்டும் அளவுக்கு பாஜ அறிக்கை வெளியிட்டுள்ளது நல்லதல்ல.
தமிழ்நாடு மக்கள் பதற்ற அரசியலையும், சாதி, மத அரசியலையும் வெறுப்பார்கள். அதற்கு திருப்பரங்குன்றமே சாட்சி. நாங்கள் பிரமாண்ட வெற்றியை பெறுவோம். இது இந்தியாவுக்கு திருப்புமுனையாக அமையும். தற்போது ஒன்றிய அரசு மக்களின் வாழ்வியல் பிரச்னையில் கவனம் செலுத்த வேண்டும். ஆனால், பிரதமர் தொடங்கி அமைச்சர்கள் வரை கேரளம், தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்காக படையெடுக்கின்றனர். பிரதமர் உள்ளிட்ட அமைச்சர்கள் தமிழ்நாட்டில் முகாமிட்டு பேசட்டும்.
அவர்கள் பேசினால் எங்கள் கூட்டணிக்கு ஒரு லட்சம் வாக்குகள் கூடுதலாக கிடைக்கும். அதிலும், பிரதமரும், உள்துறை அமைச்சரும் பேசினால் லட்சக்கணக்கான வாக்குகள் கூடுதலாக கிடைக்கும். உள்துறை அமைச்சர் இங்குள்ளவர்களை டெல்லிக்கு வரவழைத்து தான் கூட்டணி பேசினார். மிரட்டியது உள்துறை அமைச்சர். மிரண்டுபோனவர்கள் அந்த கூட்டணியில் சேர்ந்தனர்.
மிரட்டப்பட்டவர்களும், மிரண்டுபோனவர்களும் அமைத்த கூட்டணி அது. அந்த கூட்டணியில் ஜனநாயக கட்சி அதிமுக. அதன் மீது எங்களுக்கு மரியாதை உள்ளது. ஆனால், பாஜவின் கரம்பற்றியதன் மூலம் நிகழ்கால அரசியல் தீமைகளுக்கு அதிமுக துணை போய் விட்டது என குற்றம்சாட்டுகிறோம். எங்கள் கூட்டணியில் கருத்துச் சொல்லும் ஜனநாயகம் உள்ளது. கருத்து சுதந்திரம் உள்ளது.
ஆனால், இவை எல்லாவற்றையும் கடந்தது ஒரே புள்ளி பாஜவை வீழ்த்துவது. அந்த புள்ளியில் திமுக, இடதுசாரிகள் போல் திருமாவளவனும் உறுதியாக உள்ளார். இந்தியாவின் அடிப்படை மதச்சார்பின்மை. அதை பாஜ வெறுக்கிறது. மக்களின் ஒற்றுமையை மதத்தின் பெயரில் சிதைக்கிறது. அதனால் பாஜ தோற்கடிக்கப்பட வேண்டும். அது தமிழ் மண்ணில் இருந்து தோற்கடிக்கப்பட வேண்டும். திமுகவின் தேர்தல் அறிக்கை பேசு பொருளாகி உள்ளது. அதனால் கண்டிப்பாக நாங்கள் வெற்றி பெறுவோம். இவ்வாறு அவர் கூறினார்.
