திருவனந்தபுரம் மாவட்டத்திலுள்ள வட்டியூர்க்காவு கேரளாவில் நட்சத்திர தொகுதியாக கருதப்படுகிறது. இந்தத் தொகுதியில் இடதுசாரி கூட்டணி சார்பில் கடந்த இரு முறை வெற்றி பெற்ற பிரசாந்தும், காங்கிரஸ் சார்பில் ஒருமுறை எம்எல்ஏவாக இருந்த கேரள முன்னாள் முதல்வர் கருணாகரனின் மகன் முரளீதரனும், பாஜ சார்பில் முதல் முறையாக களம் காணும் மாஜி டிஜிபியான ஸ்ரீலேகாவும் போட்டியிடுகின்றனர்.
நேற்று சாஸ்தமங்கலம் பகுதியில் நடந்த ஒரு கூட்டத்தில் ஸ்ரீலேகா பேசிய சில கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. அந்தக் கூட்டத்தில் அவர் பேசியது: கேரளாவில் கடந்த 2021 முதல் இந்த ஆண்டு வரை 5 வருடங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 5 மடங்கு அதிகரித்துள்ளன. இத்தகைய குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு அரசின் ஆதரவு கிடைப்பது தான் இதற்கு காரணமாகும். பெண்களுக்கு எதிராக என்ன குற்றம் செய்தாலும் அதில் எந்தப் பிரச்னையும் கிடையாது என்று கருதும் அளவுக்கு சமூகம் மாறிவிட்டது.
ஒரு போலீஸ் அதிகாரியாக இருந்த எனக்கு ஏதாவது பிரச்னை ஏற்பட்டால் கூட நான் தனியாகத்தான் அதை சமாளிக்க வேண்டிய நிலை இருக்கிறது. புகார் கூறினால் டிஜிபி கூட அதை கண்டு கொள்ள மாட்டார். எனக்கு ஆதரவு தரவேண்டும் என்றால் அரசியல் ரீதியாக அவருக்கு அனுமதி தேவைப்படுகிறது. கேரள காவல்துறையில் அரசியல் தலையீடு மிக அதிகமாக இருப்பதால்தான் பெண்களுக்கு இங்கு பாதுகாப்பு இல்லாத நிலை நிலவுகிறது. சமீபத்தில் ஒரு அமைச்சரின் மனைவிக்கு ஆபத்து ஏற்பட்டபோது அவர் அவசர போலீசுக்கு தகவல் தெரிவித்தும் எந்த உதவியும் கிடைக்கவில்லை. எதிர் தரப்பில் அவரின் கணவரான அமைச்சர் இருந்ததது தான் இதற்கு காரணமாகும்.
கேரளாவில் அரசியலுக்குத் தான் விலை இருக்கிறது. லவ் ஜிகாத் போன்ற கொடூர குற்றங்கள் நடைபெறும் போது அதை அரசு கண்டு கொள்வதில்லை. கடவுள் நம்பிக்கை இல்லாத அரசும், அமைச்சர்களும் ஆட்சியில் இருக்கும் போது அவர்கள் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு 100 சதவீதம் எந்த முக்கியத்துவமும் அளிக்க மாட்டார்கள். இவ்வாறு அவர் பேசினார். ஸ்ரீலேகாவின் இந்தப் பேச்சுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
