×

திருச்சியில் உடைந்த விஜய் பிம்பம்; தவெக வேட்பாளர்களுக்கு ஓட்டு கேட்காததால் அதிருப்தி: கூட்டமும் இல்ல பிரசாரமும் எடுபடல

தவெக தலைவர் விஜய் திருச்சி கிழக்கு தொகுதியில் நேற்று முன்தினம் வேட்புமனு தாக்கல் செய்தார். பின்னர் மரக்கடையில் பிரசாரம் செய்தார். இதில் எதிர்பார்த்த அளவு கூட்டம் இல்லை. விஜய் பிரசாரமும் மக்களிடம் எடுபடவில்லை என்று தெரியவந்துள்ளது. கடந்த முறை விஜய் திருச்சி வந்த போது விமான நிலையத்தில் இருந்து மரக்கடைக்கு வர 5 மணி நேரத்துக்கு மேல் ஆனது. தொண்டர்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது. விஜய் வாகனமே கூட்டத்தில் ஊர்ந்து தான் வந்தது. ஆனால் நேற்று முன்தினம் கூட்டம் அவ்வளவாக இல்லை.

முதல் முறை வந்த கூட்டத்தில் நான்கில் ஒரு பங்கு கூட இல்லை. இதனால் விஜய் சுமார் 50 நிமிடத்தில் வேட்புமனு தாக்கல் செய்யும் அலுவலகத்துக்கு வந்து விட்டார். அதேபோல் விஜய்யின் பேச்சிலும் சுவாரஸ்யம் எதுவும் இல்லை. 2 தொகுதிகளில் ஏன் போட்டியிடுகிறேன் என்பது பற்றி விஜய் விளக்கம் அளிப்பார் என மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் விஜய் அதுபற்றி பேசவே இல்லை. ஜனநாயகன் படம் பற்றி மட்டும் பேசி விட்டு, தேர்தல் வாக்குறுதியை ரிபீட் செய்தார். அப்போது, தவெக ஆட்சிக்கு வந்தால் வருடத்துக்கு 6 காஸ் சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும் என்றார்.

முறையாக பதிவு செய்து ஒரு சிலிண்டர் வாங்குவதே இப்போது பெரும்பாடாக உள்ளது. இதில் எங்கிருந்து 6 சிலிண்டர் இலவசமாக கொடுப்பார். காதில் பூ சுற்றுகிறார் என்று பெண்கள் வெளிப்படையாகவே பேசுவதை கேட்க முடிந்தது. திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 9 வேட்பாளர்கள் உள்ளனர். இதில் கிழக்கு தொகுதியில் போட்டியிடும் தனக்கு மட்டும் அவர் வாக்கு சேகரித்தார். மற்ற 8 தொகுதிகளின் வேட்பாளர்களை அவர் கண்டுகொள்ளவே இல்லை. இத்தனைக்கும் 8 வேட்பாளர்களும் பிரசாரத்துக்கு வந்திருந்தனர்.

அவர்களையும் அருகில் நிற்க வைத்து வாக்கு சேகரித்திருக்க வேண்டும். ஏனெனில் மற்ற தொகுதிகளுக்கெல்லாம் விஜய் இனி வருவாரா என்பதே கேள்விக்குறிதான். இதனால் மற்ற 8 வேட்பாளர்களும் அதிருப்தியுடன் திரும்பி சென்றதை காண முடிந்தது. திருச்சி கிழக்கில் விஜய் போட்டியிடுவதே கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் 50 சதவீதம் இந்த தொகுதியில் இருப்பது தான். தனக்கு இவர்களின் ஆதரவு கிடைக்கும் என்று விஜய் மலைபோல் நம்புகிறார். ஆனால் சிறுபான்மை இனத்தவர்கள் எந்த சலனமும் இல்லாமல் அமைதியாக உள்ளனர்.

விஜய்யின் பிரசாரத்தில் கூட சிறுபான்மையினரை பார்க்க முடியவில்லை. அவர்கள் வாக்குகள் சிதறி விடக்கூடாது, நாம் அளிக்கும் வாக்குகளால் அதிமுக-பாஜ அணிக்கு சாதகம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் தெளிவாக இருப்பதை காண முடிகிறது. விஜய் செல்லும் ஒரு பிரசாரத்துக்கும் தமிழ்நாடு முழுக்க இருந்து ஆட்கள் திரட்டி வர நிர்வாகிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறதாம்.

அதுபோல், ஒவ்வொரு கூட்டத்துக்கு விஜய் வருவதற்கு முன்பே, கூட்டம் எப்படி இருக்கு என கேட்டு தாமதமாக கிளம்பிறாராம். முதன்முதலில் திருச்சியில் அவர் தொடங்கிய பிரசாரத்துக்கும் தமிழ்நாடு முழுக்க இருந்து ஆட்கள் திரட்டி வரப்பட்டது. இதனால்தான் அவ்வளவு கூட்டத்தை காட்ட முடிந்தது. ஆனால், இந்த முறை விஜய்க்கு கூட்டமே கூடவில்லை. பிரசாரமும் எடுபடவில்லை. மொத்தத்தில் விஜய்யின் திருச்சி பிரசாரம் பிசுபிசுத்து விட்டது. விஜய்யின் பிம்பமும் உடைந்து விட்டது என்பதே உண்மை என்று நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

Tags : Vijay ,Trichy ,Tevaga ,Trichy East ,Marakade ,Trichy… ,
× RELATED சொல்லிட்டாங்க…