போளூர் சட்டமன்ற தொகுதி தவெக வேட்பாளர் அபிஷேக் நேற்று முன்தினம் போளூர் தாலுகா அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் சதீஷ்குமாரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். பின்னர் தொண்டர்களுடன் வெளியே வந்து ஓட்டு சேகரித்தார். அப்போது நெடுஞ்சாலையில் அதிக சத்தம் எழுப்பும் வகையில் பட்டாசுகள் வெடித்து தேர்தல் விதிகளை மீறினார். இதை போலீசார் மற்றும் தேர்தல் அதிகாரிகள் கண்டும் காணாமல் இருந்தனர்.
இதைத்தொடர்ந்து தவெக வேட்பாளர் அபிஷேக் கட்சி அலுவலகத்தில் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: போளூர் தொகுதி வேட்பாளராக தளபதி விஜய் என்னை அறிமுகப்படுத்தினார். இத்தொகுதியை தொடர்ந்து கவனித்து வருகிறேன். இங்கு இளைஞர்கள் அதிகம் உள்ளனர். நானும் இளைஞன் என்பதால் அவர்களின் ஆதரவு கிடைக்கும். போளூரில் திமுக மற்றும் அதிமுக நேரடியாக போட்டியிடவில்லை. நாங்கள் ஏற்கனவே வெற்றி பெற்றுள்ளோம். வரும் 24ம் தேதி அனைவரும் வாக்களித்து வெற்றியை உறுதி செய்ய வேண்டும் என்று கூறினார்.
தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளது. ஆனால், தவெக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள அபிஷேக் எந்த தேதியில் வாக்குப்பதிவு நடக்கிறது என்பதை கூட தெரியாமல் போட்டியிடுகிறார். இதைக்கேட்டதும் அங்கிருந்தவர்கள், தொகுதியின் அடிப்படை விவரங்களே தெரியாமல் பேசும் தவெக வேட்பாளர் அபிஷேக், மக்கள் பிரச்னைகளை எப்படி தீர்ப்பார்? இப்போதெல்லாம் தற்குறிகள் அதிகமாகிவிட்டனர் என்று கூறியபடி சென்றனர்.
இதேபோல், கோபி அருகே உள்ள குள்ளம்பாளையத்தில் நேற்று காலை தேர்தல் பரப்புரையை தவெக வேட்பாளர் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கினார்.அதைத்தொடர்ந்து வாகன பரப்புரையில் ஈடுபட்ட செங்கோட்டையன், அடுத்தமாதம் 23ம் தேதி நடைபெற உள்ள தேர்தல் நாளின் போது விசில் சின்னத்திற்கு வாக்களியுங்கள் என்றார். அப்போது உடன் இருந்த நிர்வாகிகள், தேர்தல் இந்த மாதம் தான் என்று கூறியதும், உடனே திருத்திக்கொண்ட செங்கோட்டையன் ஏப்ரல் 23ம் தேதி அன்று அனைவரும் விசில் சின்னத்தில் வாக்களியுங்கள் என்றார்.
