தேர்தல் நெருங்கி வரும் வேளையில் தமிழக டிஜிபி திடீர் மாற்றம்: தாம்பரம், மதுரை கமிஷனர்கள், மேற்கு மண்டல ஐஜி, தூத்துக்குடி, சேலம் கலெக்டர்களையும் தேர்தல் ஆணையம் மாற்றியது

* அதிமுக அழுத்தத்தை தொடர்ந்து மாற்றப்பட்டதாக பரபரப்பு தகவல்

சென்னை: தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில், தமிழக டிஜிபி வெங்கட்ராமன், தாம்பரம், மதுரை கமிஷனர்கள், மேற்கு மண்டல ஐஜி மற்றும் 2 கலெக்டர்களை மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதிமுகவின் அழுத்தத்தைத் தொடர்ந்தே அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. தலைமைச் செயலாளர், சென்னை கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகள் இன்று மாற்றம் செய்யப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது. தமிழகத்தில் கடந்த மார்ச் 15ம் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. வருகிற 6ம் தேதியுடன் வேட்பு மனு தாக்கல் முடிகிறது. 23ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

மே 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. தற்போது பாஜ, காங்கிரஸ் தவிர மற்ற அனைத்துக் கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து பிரசாரத்தை தொடங்கிவிட்டன. முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், தவெக தலைவர் விஜய் மற்றும் அக்கட்சிகளின் முன்னணி தலைவர்கள் தமிழகத்தில் தீவிர பிரசாரத்தை தொடங்கி நடத்தி வருகின்றனர். இதனால் அரசியலில் அனல் பறக்கத் தொடங்கியுள்ளது.

இந்தநிலையில், தமிழக பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமனை நேற்று மாலை தேர்தல் ஆணையம் அதிரடியாக மாற்றியது. அவருக்குப் பதில், போலீஸ் பயிற்சிக் கல்லூரி டிஜிபியாக உள்ள சந்தீப் ராய் ரத்தோரை டிஜிபியாக நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. சட்டம் ஒழுங்கு டிஜிபி தான் தமிழக காவல்துறையில் உச்சபட்ச பதவியாகும். இவர், லஞ்ச ஒழிப்புத்துறையைத் தவிர மற்ற அனைத்து பிரிவுகளுக்கும் தலைவராக இருப்பார். இதனால் தேர்தல் காலங்களில் குற்றச்சாட்டுகள் எழுந்தால், தேர்தலை நடத்துவதற்கு மட்டும் புதிய டிஜிபி நியமிக்கப்படுவார்.

ஏற்கனவே இருந்த டிஜிபி, சிபிசிஐடி, தலைமையிடம், ஆயுதப்படை உள்ளிட்ட மற்ற பிரிவுகளை கண்காணிப்பார். ஆனால் தற்போது ரெகுலர் டிஜிபியாகவே சந்தீப் ராய் ரத்தோர் நியமிக்கப்பட்டுள்ளார். வெங்கட்ராமனுக்கு புதிய பணியிடங்கள் வழங்கப்படவில்லை. புதிய டிஜிபி ரத்தோர் இன்று காலை 11 மணிக்குள் பதவியேற்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், நேற்று இரவு 9.10க்கே ரத்தோர் புதிய டிஜிபியாக பதவியேற்றார்.
அதேபோல, தாம்பரம் கமிஷனராக இருந்த அமல்ராஜ் மாற்றப்பட்டு, கடலோர காவல்படை ஏடிஜிபியாக உள்ள சஞ்சய்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

மதுரை கமிஷனராக இருந்த லோகநாதன் மாற்றப்பட்டு, போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு பிரிவு ஐஜியாக உள்ள அபிஷேக் தீட்ஷித் நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கு மண்டல ஐஜியாக இருந்த சரவண சுந்தர் மாற்றப்பட்டு, குற்றப்பிரிவு ஐஜியாக உள்ள ரம்யா பாரதி நியமிக்கப்பட்டுள்ளார். இதில் மாற்றப்பட்டுள்ள போலீஸ் அதிகாரிகள் அமல்ராஜ், லோகநாதன், சரவண சுந்தரம் ஆகியோருக்கு புதிய பணியிடங்கள் வழங்கப்படவில்லை. மேலும், சேலம் கலெக்டர் பிருந்தாதேவி மாற்றப்பட்டு, அப்பதவியில் சுகாதாரத்துறையில் இயக்குநராக உள்ள அருண் தம்புராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி கலெக்டராக இருந்த இளம்பகவத் மாற்றப்பட்டு, அந்தப் பதவியில் விஷ்ணு மகாஜன் நியமிக்கப்பட்டுள்ளார். இரு கலெக்டர்களுக்கும் புதிய பணியிடங்கள் வழங்கப்படவில்லை. மேலும், தமிழக தலைமைச் செயலாளர் முருகானந்தம், உள்துறைச் செயலாளர் தீரஜ்குமார், சென்னை போலீஸ் கமிஷனர் அருண், சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன், லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநரும், ஆயுதப்படை டிஜிபியுமான டேவிட்சன் தேவாசீர்வாதம், உளவுத்துறை ஐஜி செந்தில்வேலன் ஆகியோரும் இன்று அல்லது ஓரிரு நாளில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேர்தல் நேரத்தில் நேர்மையான அதிகாரிகள் மாற்றப்பட்டதின் பின்னணியில் சில வேலைகள் நடந்துள்ளதாக தெரியவந்திருக்கிறது. சில நாட்களுக்கு முன் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றார். அப்போது தமிழகத்தில் நேர்மையான அதிகாரிகள் பணியாற்றுகின்றனர். அவர்களை மாற்றினால்தான், தேர்தலில் நாம் நினைத்ததை செய்ய முடியும். இதனால், அதிகாரிகளை மாற்றம் செய்ய வேண்டும் என்று ஒரு பெரிய பட்டியலை கொடுத்துவிட்டு வந்துள்ளார். அதோடு, ஒவ்வொரு பதவிக்கும் யாரை நியமிக்க வேண்டும் என்ற பட்டியலையும் வழங்கி வந்தார். இந்தப் பட்டியல்தான் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில்தான் மேற்கு வங்கத்தில் பல அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டனர்.

இதை எதிர்த்து மம்தா பானர்ஜி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதில் 2 அதிகாரிகளின் மாற்றத்தை மட்டும் தேர்தல் ஆணையம் ரத்து செய்தது. இந்தநிலையில் இரு நாட்களுக்கு முன்னர் மம்தா பானர்ஜியின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் இதுதான் சரியான சமயம் என்று கருதிய தேர்தல் ஆணையம் தற்போது டிஜிபி உள்ளிட்ட 4 போலீஸ் அதிகாரிகளையும், 2 கலெக்டர்களையும் மாற்றம் செய்துள்ளது. அடுத்த பட்டியல் இன்று அல்லது ஓரிரு நாளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாற்றம் செய்யப்படும் அதிகாரிகளுக்குப் பதில் எடப்பாடி பழனிசாமி பரிந்துரை செய்யும் அதிகாரிகளே நியமிக்கப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது. தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை தமிழக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

* தேர்தல் நேரத்தில் நேர்மையான அதிகாரிகள் மாற்றப்பட்டதில் சில பின்னனி நிகழ்வுகள் நடந்துள்ளது.
* சில நாட்களுக்கு முன்னர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றார். அப்போது தமிழகத்தில் நேர்மையான அதிகாரிகளை மாற்றம் செய்ய பெரிய பட்டியலை கொடுத்துவிட்டு வந்தார்.
* ஒவ்வொரு பதவிக்கும் யாரை நியமிக்க வேண்டும் என்ற பட்டியலையும் வழங்கி வந்தார்.
* இந்தப் பட்டியல்தான் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Related Stories: