பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு குன்றத்தூர் முருகன் கோயிலில் பக்தர்கள் தரிசனம்: படிக்கட்டுகளில் பச்சை பந்தல்

 

பூந்தமல்லி: குன்றத்தூரில் மலைக்குன்றின்மீது வரலாற்று பிரசித்தி பெற்ற அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இக்கோயில் நேற்று பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு குவிந்தனர். இதில் பலர் அலகு குத்தியும், காவடிகள் எடுத்தும் தங்களின் நேர்த்திக்கடன் செலுத்தினர். கோயில் வளாகத்தில், 108 கிலோ சந்தன காப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானை சமேதராக முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

தற்போது சென்னை உள்பட புறநகர் பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், குன்றத்தூர் மலைக்குன்றின் வழியாக கோயிலுக்கு பக்தர்கள் சிரமமின்றி வந்து செல்வதற்கு வசதியாக, கோயில் நிர்வாகம் சார்பில் வழிநெடுகிலும் பச்சை பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும், கோயிலின் சுற்று பிரகாரத்தில் பக்தர்களின் கால்களை வெயில் சுடுவதை தவிர்க்க, தேங்காய் நாரிலான தரை விரிப்புகள் போடப்பட்டிருந்தது.

இதுதவிர, கோயில் வளாகத்தில் பக்தர்களின் தாகம் தணிக்கும் வகையில் குடிநீர், குளிர்பானம், மோர் உள்பட பல்வகை குளிர்பானங்கள் வழங்கப்பட்டன.இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தாமரைக்கண்ணன், அறங்காவலர்கள் சரவணன், குணசேகர், சங்கீதா கார்த்திகேயன், ஜெயக்குமார் மற்றும் கோயில் செயல் அலுவலர் பிரகாஷ் உள்பட பலர் சிறப்பாக செய்திருந்தனர்.

Related Stories: