சென்னை: தமிழகத்தில் கரூர், வேலூர் மாவட்டங்களில் நேற்று அதிகரித்த வெப்பம் காரணமாக 102 டிகிரி வெயில் கொளுத்தியது. இதையடுத்து, 6ம் தேதி வரையில் தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவி்த்துள்ளது. வளி மண்டலத்தில் சுமார் 0.9 கிமீ உயரத்தில் உள் தமிழக மாவட்டங்களில் இருந்து மத்திய கொங்கன் வரை உள் கர்நாடகா வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வுப்பாதை (Trough) நிலவுகிறது. அதன் காரணமாக தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை நேற்று பெய்துள்ளது. தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்றும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. மேலும், 4ம் தேதி முதல் 6ம் தேதி வரையிலும் மேற்கண்ட சூழ்நிலை நிலவும். பின்னர் 8ம் தேதி வரையிலும் நீடிக்கவும் வாய்ப்புள்ளது. படிப்படியாக வெப்பநிலை உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
