2 நாள் விடுமுறைக்கு பிறகு மீண்டும் வேட்புமனு தாக்கல் தொடங்கியது: இன்னும் 2 நாளே உள்ளதால் கட்சிகள் தீவிரம்

சென்னை: இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பிறகு நேற்று மீண்டும் வேட்புமனு தாக்கல் தொடங்கியதால் அரசியல் கட்சி வேட்பாளர்கள் ஆர்வமுடன் மனு தாக்கல் செய்தனர். வேட்புமனு தாக்கல் செய்ய இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ளது. கடந்த 30ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. ஏப்ரல் 6ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும்.31ம் தேதி (மகாவீர் ஜெயந்தி), 1ம் தேதி (வங்கி விடுமுறை) என 2 நாட்கள் தொடர்ச்சியாக விடுமுறை என்பதால், மனு தாக்கல் செய்யப்படவில்லை. இரண்டு நாட்களுக்கு பிறகு நேற்று காலை 11 மணிக்கு மீண்டும் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. நேற்று அரசியல் கட்சியினர் ஆர்வமுடன் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

நேற்றைய தினம் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி திமுக வேட்பாளாராக காலை 11.30 மணிக்கு திருவல்லிக்கேணியில் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் மனு தாக்கல் செய்தார். அதேபோன்று, ராயபுரம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் காலை 11 மணிக்கு தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். தவெக தலைவர் விஜய் ஏற்கனவே கடந்த 30ம் தேதி சென்னை, பெரம்பூர் தொகுதியில் போட்டியிட மனு தாக்கல் செய்த நிலையில், நேற்று திருச்சி கிழக்கு தொகுதியில் 2வது தொகுதிக்கான வேட்புமனுவை தாக்கல் செய்தார். முதல் நாளில் 573 பேர் மனு தாக்கல் செய்த நிலையில், நேற்றும் 500க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

இன்று (3ம் தேதி) பெரிய வெள்ளி என்பதால் அரசு விடுமுறை. வேட்புமனு தாக்கல் செய்ய முடியாது. அடுத்து 4ம் தேதி (சனி) வேட்புமனு தாக்கல் செய்யலாம். 5ம் தேதி (ஞாயிறு) அரசு விடுமுறை என்பதால், மனு தாக்கல் செய்ய முடியாது. இதை தொடர்ந்து இறுதி நாளான 6ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யலாம். அதன்படி, தமிழகத்தில் இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய முடியும். 7ம் தேதி வேட்புமனுக்கள் மீது பரிசீலனை நடைபெறும். 9ம் தேதி மாலை 3 மணி வரை வேட்புமனுவை வாபஸ் வாங்கலாம்.

அன்றைய தினம் மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். சுயேச்சை வேட்பாளர்களுக்கு 9ம் தேதி மாலையே சின்னம் ஒதுக்கப்படும். இதை தொடர்ந்து தமிழகத்தில் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் பிரசாரம் மேலும் சூடுபிடிக்கும். 21ம் தேதி மாலை 6 மணி வரை பிரசாரம் செய்யலாம். 23ம் தேதி காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி, இடைவிடாமல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். மே 4ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

Related Stories: