தேர்தல் விதிமுறைகளை மீறிய விவகாரம் ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் மீதான வழக்குகள் ரத்து: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கடந்த 2024ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் நீலகிரி தொகுதியில் பாஜ சார்பில் எல்.முருகன் போட்டியிட்டார். அப்போது, தேனாடுகம்பை கடநாடு கிராமத்தில் அனுமதியின்றி பொதுமக்கள் மத்தியில் கூட்டம் நடத்தியதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு உதகமண்டலம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இதேபோல், சத்தியமங்கலத்தில் உள்ள பள்ளியில் விதிகளை மீறி தேர்தல் கலந்தாய்வு கூட்டம் நடத்தியதாக எல்.முருகனுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு ஈரோடு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

இந்த நிலையில், தன்மீதான இரு வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும் எனக்கோரி எல்.முருகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தபோது, குறித்த கால அவகாசத்துக்குள் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை என்பதால் இரு வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும் என்று அமைச்சர் முருகன் தரப்பில் வக்கீல் ஏ.ஆர்.சக்திவேல் வாதிட்டார். இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, அமைச்சர் எல்.முருகன் மீதான இரு தேர்தல் விதிமீறல் வழக்குகளையும் ரத்து செய்து உத்தரவிட்டார்.

Related Stories: