தஞ்சை: வேட்பாளர் பட்டியல் வெளியாகும் முன்பே தஞ்சையில் வேட்புமனு தாக்கல் செய்த பாஜக நிர்வாகியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மயிலாப்பூர், தளி, மொடக்குறிச்சி, உதகை, அவிநாசி, திருப்பூர் தெற்கு, கோவை வடக்கு, கந்தர்வகோட்டை, புதுக்கோட்டை, திருப்பத்தூர், மதுரை தெற்கு, சாத்தூர், திருச்செந்தூர், வாசுதேவநல்லூர், ராதாபுரம், நாகர்கோவில், விளவங்கோடு, ஆவடி, திருவண்ணாமலை, தஞ்சாவூர், திருவாரூர், அறந்தாங்கி, ராசிபுரம், ராமநாதபுரம், பத்மநாபபுரம், மானாமதுரை, குளச்சல் ஆகிய தொகுதிகளில் பாஜ போட்டியிடுகிறது.
பாஜவுக்கு ஒதுக்கப்பட்ட 27 தொகுதிகளில் யாரை வேட்பாளராக நிறுத்துவது தொடர்பாக கட்சி தலைமை ஆலோசித்து வந்தது. பாஜ மாநில தலைவர் மட்டும் தான் இந்த முறை சாத்தூர் தொகுதியில் போட்டியிட போவதாக அறிவித்துள்ளார். இதே போல மயிலாப்பூர் தொகுதியில் எடப்பாடி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட போது அவருடன் தமிழிசை சவுந்தரராஜனும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதனால், அவர் தான் மயிலாப்பூரில் வேட்பாளராக போட்டியிட போகிறார் என்ற தகவல் வெளியானது. ஆனால் அதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை. இந்த தொகுதியை யாருக்கு ஒதுக்குவது என்பதில் கடும் போட்டி நிலவி வருகிறது.
தொடர்ந்து ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளில் பலர் போட்டியிட ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் கடும் குழப்பம் நிலவி வருகிறது. வேட்பு மனு தாக்கலுக்கு ஓரிரு நாட்கள் தான் இருக்கிறது. அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களையும் அறிவித்தும், தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு தேர்தல் பிரசாரத்தில் மும்முரமாக இறங்கி வருகின்றனர். ஆனால், பாஜ இதுவரை வேட்பாளர் பட்டியலை அறிவிக்கவில்லை. இதனால், பாஜவுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் யாரை ஆதரித்து பிரசாரம் செய்வது என்று தெரியாமல் பாஜ தொண்டர்கள் விழிபிதுங்கி வருகின்றனர்.
இந்நிலையில் வேட்பாளர் பட்டியல் வெளியாகும் முன்பே தஞ்சையில் வேட்புமனு தாக்கல் செய்த பாஜக நிர்வாகியால் பரபரப்பு நிலவி வருகிறது. தஞ்சை மாவட்ட பாஜக துணைத் தலைவர் முரளிதரன் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். கட்சித் தலைமை வேட்பாளர் பட்டியலை வெளியிடும் முன்பே பாஜக நிர்வாகி மனு தாக்கல் செய்துள்ளார். தனது ராசிக்கு நல்ல நாள் என்பதால் மனு தாக்கல் செய்ததாக விளக்கம் அளித்துள்ளார். மற்ற கட்சி வேட்பாளர்கள் பிரச்சாரத்துக்கு சென்ற நிலையில் பாஜக வேட்பாளர்கள் அறிவிக்கப்படாதது வேதனை அளிப்பதாக அவர் கூறியுள்ளார்.
