இல்லம்தோறும் நுழைந்து ஆல்ரவுண்டராக வலம் வரும் திமுக தேர்தல் அறிக்கை: இளைஞர்கள், பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பு

கோவை: தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், கொங்கு மண்டலத்தில் தேர்தல் களம் தற்போது சூடு பிடிக்க துவங்கியுள்ளது. ஆளுங்கட்சியான திமுக தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ள நிலையில், பிரதான எதிர்கட்சியான அதிமுகவும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. கோவையில் உள்ள 10 தொகுதிகளில் 7 இடங்களில் திமுகவும், அதிமுகவும் நேரடியாக மோதுகிறது. மீதமுள்ள 3 இடங்களை தனது கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியுள்ளது. இதில், குறிப்பாக, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தனது சொந்த மண்ணான கரூரை விடுத்து, கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுவது கோவை அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில், ஒரு இடத்தைக்கூட திமுக கைப்பற்ற முடியாமல் போனது. ஆனால், இந்த முறை அந்த தோல்வியை துடைத்தெறிய வேண்டும் என்ற முனைப்பில் திமுக செயல்பட்டு வருகிறது.

கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜியை எதிர்த்து அதிமுக சார்பில் அம்மன் கே.அர்ஜுனன் களம் காண்கிறார். தன்னை எதிர்த்து செந்தில் பாலாஜி போட்டியிடுகிறாரே? அவரை எப்படி சமாளிப்பது? என்கிற தோல்வி பயம் அம்மன் கே.அர்ஜூனனிடம் நிறையவே காணப்படுகிறது. திமுகவின் மற்ற வேட்பாளர்களாக மேட்டுப்பாளையத்தில் கவிதா கல்யாணசுந்தரம், சூலூரில் தளபதி முருகேசன், கோவை வடக்கில் துரை.செந்தமிழ் செல்வன், தொண்டாமுத்தூரில் என்.ஆர்.கார்த்திகேயன், கிணத்துக்கடவில் சபரி கார்த்திகேயன் வால்பாறையில் குட்டி என்கிற சுதாகர் ஆகியோர் களம் காண்கின்றனர். திமுக கூட்டணியில் கொமதேக சார்பில் பொள்ளாச்சியில், அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் நித்யானந்தன் போட்டியிடுகிறார். காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட சிங்காநல்லூர் மற்றும் கவுண்டம்பாளையம் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளனர்.

பிரதான எதிர்க்கட்சியான அதிமுக கூட்டணியில், கோவை வடக்கு தொகுதி மட்டும் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மற்றொருபுறம், தவெக மற்றும் நாம் தமிழர் கட்சிகள் தங்களது 10 வேட்பாளர்களையும் இம்மாவட்டத்தில் களம் இறக்கியுள்ளது. அனைத்து தரப்பினரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். நான்கு முனை போட்டி நிலவினாலும், கோவை மாவட்டத்தை பொறுத்தவரை, பழைய நிலைமை மாறி, தற்போது திமுகவின் புதிய வியூகம் நிறைய பலன் கொடுக்க துவங்கியுள்ளது. அதிமுக கோட்டை என கருதப்படும் கோவை மாவட்டம், இம்முறை திமுக பக்கம் சாய்கிறது. காரணம், அரசின் சாதனை திட்டங்களை நினைவுபடுத்தி, திமுகவுக்கு ஆதரவாக மக்கள் நிற்பது அனைத்து தொகுதிகளிலும் கண்கூடாக தெரிகிறது.

அத்துடன், ‘சூப்பர் ஸ்டார்’ எனப்படும் திமுகவின் தேர்தல் அறிக்கையும் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கொங்கு மண்டலத்தில் உள்ள டெக்ஸ்டைல், இன்ஜினியரிங், ஆட்டோமொபைல், வெட்கிரைண்டர், பவுண்டரி என பல்வேறு தொழில் முனைவோர், மாணவ, மாணவிகள், இளைஞர்கள், பட்டதாரிகள், விவசாயிகள், சிறுபான்மையின மக்கள், நெசவாளர்கள், குடும்ப தலைவிகள் என அனைத்து தரப்பினருக்குமான தேர்தல் அறிக்கை, ஆல்ரவுண்டராக வலம் வருவதால், இல்லம்தோறும் நுழைந்து, திமுகவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை மக்களிடம் ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: