234 தொகுதியிலும் வேட்புமனு தாக்கல் துவங்கியது; கொளத்தூரில் மு.க.ஸ்டாலின் மனுதாக்கல்: தமிழகம் முழுவதும் அமைச்சர்கள், சீமான், விஜய் உட்பட 572 பேர் வேட்புமனு

 

சென்னை, மார்ச் 31: தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. அதன்படி, காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை தேர்தல் நடத்தும் அதிகாரி அல்லது உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்யலாம். முதல் நாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மனு தாக்கல் செய்தார். அதேபோன்று பெரும்பாலான அமைச்சர்கள், நடிகர் விஜய், சீமான் உள்ளிட்ட 572 பேர் மனு தாக்கல் செய்தனர். தமிழ்நாட்டில் 17வது சட்டப்பேரவைக்கான பொதுத்தேர்தல் வருகிற ஏப்ரல் 23ம் தேதி நடைபெறுகிறது. அதன்படி, மொத்தமுள்ள 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் நேற்று (30ம் தேதி) முதல் ஏப்ரல் 6ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

வேட்புமனுக்கள் மீது பரிசீலனை மே 7ம் தேதி நடைபெறும். ஏப்ரல் 9ம் தேதி மாலை 3 மணி வரை வேட்புமனுக்களை திரும்ப பெறலாம். வேட்புமனு தாக்கல் செய்யும் நேரம் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை ஆகும். தமிழகத்தில் 30ம் தேதி முதல் ஏப்ரல் 6ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டாலும், மார்ச் 30, ஏப்ரல் 2, 4, 6 ஆகிய 4 நாட்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய முடியும். மற்ற நாட்கள் அரசு விடுமுறை ஆகும். தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியதையொட்டி அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தது. வேட்புமனு தாக்கல் செய்ய வரும்போது வேட்பாளர் உள்பட 5 பேர் மட்டுமே மனு தாக்கல் செய்யும் இடத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். வேட்புமனு தாக்கலுக்காக நேரில் வரும் வேட்பாளருடன் 3 கார்கள் மட்டுமே வர அனுமதிக்கப்பட்டன.

அதேநேரம் ஊர்வலமாக வர அனுமதி இல்லை. வேட்புமனு தாக்கல் செய்யும் இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு, அனைத்து நடவடிக்கைகளும் பதிவு செய்யப்பட்டது. வேட்புமனு தாக்கல் செய்யும் இடங்களில் துணை ராணுவம் உள்பட தமிழ்நாடு போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வேட்புமனு தாக்கல் தொடங்கிய முதல் நாளிலேயே திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். அதன்படி நேற்று மதியம் 12.10 மணிக்கு கொளத்தூர் பேப்பர் மில்ஸ் சாலையில் உள்ள பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலகம் சென்று அங்கிருந்த தேர்தல் நடத்தும் அதிகாரி சாந்தியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். அங்கு ஏராளமான திமுக தொண்டர்கள் குவிந்திருந்தனர். மனு தாக்கல் செய்த பிறகு தொண்டர்களை பார்த்து கையசைத்தவாறு சென்றார்.

அதேபோன்று, தவெக தலைவர் விஜய் நேற்று மதியம் சென்னை, வியாசர்பாடியில் உள்ள அம்பேத்கர் கலைக்கல்லூரியில் தேர்தல் நடத்தும் அலுவலர் கீதாவிடம் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட மனு தாக்கல் செய்தார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காரைக்குடி தொகுதியில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் 234 வேட்பாளர்களும் நேற்று மனு தாக்கல் செய்தனர். திருச்சி மேற்கு தொகுதியில் திமுக சார்பில் அமைச்சர் கே.என்.நேரு வேட்புமனு தாக்கல் செய்தார். சென்னை, சைதாப்பேட்டை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட அமைச்சர் மா.சுப்பிரமணியன் மனு தாக்கல் செய்தார். ஆதவ் அர்ஜுனா வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட மனு தாக்கல் செய்தார்.

இதேபோன்று திமுக சார்பில் பலர், அதிமுக வேட்பாளர்கள், தவெக உள்ளிட்ட பல்வேறு சுயேச்சை வேட்பாளர்களும் தமிழகம் முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்தனர். முதல் நாளான நேற்று மட்டும் 561 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். வேட்புமனு தாக்கல் செய்யும் இடங்களில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்ததால், எந்த அசம்பாவித சம்பவமும் நடைபெறாமல் அமைதியான முறையில் மனு தாக்கல் நடந்தது. நேற்று தொடங்கி வருகிற 6ம் தேதி வரை 8 நாட்கள் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தாலும், 4 நாட்கள் அரசு விடுமுறை ஆகும். அதாவது, மார்ச் 31ம் தேதி (இன்று) மகாவீர் ஜெயந்தி, ஏப்ரல் 1ம் தேதி வங்கி ஆண்டு கணக்கு முடிவு, ஏப்ரல் 3ம் தேதி புனிதவெள்ளி, ஏப்ரல் 5 ஞாயிறு ஆகிய 4 நாட்கள் அரசு விடுமுறை ஆகும். மற்ற நாட்களான இன்று, ஏப்ரல் 2, 4, 6 ஆகிய 4 நாட்கள் மட்டுமே மனு தாக்கல் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

வேட்பாளர்களுக்கான விதிமுறைகள்
அங்கீகரிக்கப்பட்ட தேசிய அல்லது மாநில கட்சி வேட்பாளராக இருந்தால் அவரை, அவர் போட்டியிடும் தொகுதியை சேர்ந்த ஒரு வாக்காளர் முன்மொழிய வேண்டும். பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்சி வேட்பாளர் அல்லது சுயேச்சை வேட்பாளர் என்றால் அந்த தொகுதியை சேர்ந்த 10 வாக்காளர்கள் அவரை முன்மொழிய வேண்டும். ஒருவர் 2 தொகுதிகளுக்கு மேல் வேட்புமனு தாக்கல் செய்யக்கூடாது. 2க்கும் மேலான தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்தால், அவரது அனைத்து வேட்புமனுக்களும் நிராகரிக்கப்பட்டு, தேர்தலில் நிற்க முடியாத நிலை ஏற்படும். https://suvidha.eci.gov.in என்ற இணையதளம் மூலமும் வேட்புமனு தாக்கல் செய்யலாம்.

ஆனால் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனு தாக்கலின்போது நேரில் ஒப்படைக்க வேண்டும். வேட்பாளர்கள், வேட்புமனு தாக்கல் தேதியில் இருந்து 3 மாதத்துக்குள் எடுக்கப்பட்ட வேட்பாளரின் போட்டோவையே வேட்புமனுவில் இணைக்க வேண்டும். வேட்பாளர்கள், வேட்புமனு தாக்கல் நிறைவுநாளான வருகிற 6ம் தேதி மாலை 3 மணிக்குள் உறுதிமொழி பத்திரத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

Related Stories: