சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் 9 போலீசாருக்கான தண்டனை விவரம் ஏப்ரல் 2ம் தேதி அறிவிக்கப்படும்: மதுரை மாவட்ட நீதிமன்றம்

 

மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் 9 போலீசாருக்கான தண்டனை விவரம் ஏப்ரல் 2ம் தேதி அறிவிக்கப்படும் என்று மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ் (59). வியாபாரி. இவரது மகன் பென்னிக்ஸ் (31). இவர்கள் இருவரும் சாத்தான்குளம் பஜாரில் செல்போன் விற்பனை கடை வைத்திருந்தனர். கடந்த 19.6.2020ல் அதிமுக ஆட்சி காலத்தில், கொரோனா ஊரடங்கு அமலில் இருந்தது. அப்போது இரவில் நீண்ட நேரம் கடையை திறந்து வைத்திருந்ததாக, சாத்தான்குளம் போலீசார் தந்தை, மகன் இருவரையும் விசாரணைக்காக காவல்நிலையம் அழைத்துச் சென்றனர். அன்றிரவு போலீசார் விசாரணையில் இருவரையும் கடுமையாக தாக்கியுள்ளனர்.

இதில் படுகாயம் அடைந்த தந்தை, மகன் இருவரும் மறுநாள் கோவில்பட்டி கிளைச்சிறையில் அடைக்கப்பட்டு உயிரிழந்தனர். இது தொடர்பாக கோவில்பட்டி கிழக்கு காவல்நிலையம் சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. பின்னர் ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவின் பேரில், கடந்த 29.6.2020ல் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.

சிபிஐ போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து அப்போதைய சாத்தான்குளம் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்ஐக்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ். சிறப்பு எஸ்ஐ பால்துரை, போலீஸ்காரர்கள் முருகன், முத்துராஜ், சாமத்துரை, செல்லத்துரை, தாமஸ் பிரான்சிஸ், வெயிலுமுத்து ஆகிய 10 பேரை கைது செய்து, மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். விசாரணையின்போது பால்துரை இறந்தார். இதனால் மற்ற 9 பேர் மீதான வழக்கின் விசாரணை மதுரை முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கில் பெண் போலீஸ்காரர்கள் பியூலா, ரேவதி மற்றும் எஸ்ஐ ரவிச்சந்திரன் ஆகியோரின் சாட்சியம் முக்கியமானதாக கருதப்பட்டது. 100க்கும் மேற்பட்ட சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர்.

இந்த வழக்கில் சிபிஐ தரப்பில் முதற்கட்டமாக 2,027 பக்கங்கள், இரண்டாம் கட்டமாக 400 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. வழக்கில் கைதானவர்கள் ஜாமீன் கோரி மதுரை மாவட்ட நீதிமன்றம், ஐகோர்ட், சுப்ரீம் கோர்ட் வரை சென்றனர். ஆனால், அனைத்தும் தள்ளுபடியாகின. இந்த வழக்கை இறுதியாக விசாரித்த நீதிபதி ஜி.முத்துக்குமரன், கடந்த மார்ச் 23ம் தேதி மாலை தீர்ப்பளித்தார்.

அதில், உயிரிழந்த தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் இருவர் மீதும் போடப்பட்ட வழக்கு பொய் வழக்கு என விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த வழக்கில் சிபிஐ தரப்பு முன்வைத்த குற்றச்சாட்டுகள் உண்மை என்பதை இந்த நீதிமன்றம் உறுதி செய்கிறது. இதன் மூலம் 9 பேரின் மீதான கொலை குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே 9 பேரும் கொலை குற்றவாளிகள் என தீர்மானிக்கப்படுகிறது. காவல்துறையைச் சேர்ந்த 9 பேருக்கும் தண்டனை விபரங்கள் வரும் 30ம் தேதி தெரிவிக்கப்படும் என கூறி ஒத்திவைத்திருந்தார்.

இதையடுத்து குற்றம்சாட்டப்பட்ட போலீஸ்காரர்கள் அனைவருக்கும் மதுரை அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் மன நல பரிசோதனை செய்யப்பட்டது. இந்நிலையில், மதுரை முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் இன்று காலை இந்த வழக்கை எடுத்த நீதிபதி ஜி.முத்துக்குமரன், ‘9 போலீஸ்காரர்களின் தண்டனை விபரம் பிற்பகலில் அறிவிக்கப்படும்’ என்று தெரிவித்தார்.

தற்போது 9 போலீஸ்காரர்களின் தண்டனை விபரம் ஏப்ரல் 2ம் தேதி அறிவிக்கப்படும் என்று வழக்கை ஒத்திவைத்து. போலீசாரின் முந்தைய நடத்தை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டிருந்தது. ஒன்றிய, மாநில அரசுகள் அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டதால் தாமதம். அறிக்கை தாக்கல் செய்தபின் தண்டனை விபரம் அறிவிக்கப்படும். சாத்தான்குளம் வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை அறிவிப்பு இன்னும் தாமதமாகலாம் எனத் தகவல். சாத்தான்குளம் வழக்கில் ஏப்.2ம் தேதி தண்டனை விபரம் அறிவிக்கப்படும் என்று கூறி ஒத்திவைத்து மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது.

Related Stories: