தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான முதல்நாள் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது: 600க்கு மேற்பட்டோர் வேட்புமனு தாக்கல்

 

சென்னை: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான முதல்நாள் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது. காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்புமனு தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்றது. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் இதுவரை வெளியான தகவலின்படி 600க்கு மேற்பட்டோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

234 தொகுதிகள் கொண்ட தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு ஏப்ரல் 23ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. முதல்நாள் முடிந்ததால் ஏப்.6 வரையான 7 நாட்களில் 3 நாட்களே வேட்புமனு தாக்கல் செய்ய முடியும். அடுத்து ஏப்.2, 4, 6ம் தேதிகளில் மட்டுமே வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய முடியும். அரசு விடுமுறை நாட்களான மார்ச் 31, ஏப்.1, 3, 5ம் தேதிகளில் வேட்புமனு தாக்கல் செய்ய இயலாது.

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. அதன்படி, காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை தேர்தல் நடத்தும் அதிகாரி அல்லது உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் வேட்புமனு தாக்கல் செய்தனர். முதல் நாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொளத்தூரில் வேட்பு மனு தாக்கல் செய்தார். அதேபோன்று தவெக தலைவர் விஜய் உள்ளிட்ட பலரும் மனு தாக்கல் செய்தனர்.

தமிழ்நாட்டில் 17வது சட்டப்பேரவைக்கான பொதுத்தேர்தல் வருகிற ஏப்ரல் 23ம் தேதி நடைபெறுகிறது. அதன்படி, மொத்தமுள்ள 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. அதன்படி, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று (30ம் தேதி) முதல் ஏப்ரல் 6ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேட்புமனுக்கள் மீது பரிசீலனை ஏப்ரல் 7ம் தேதி நடைபெறும். ஏப்ரல் 9ம் தேதி மாலை 3 மணி வரை வேட்புமனுக்களை திரும்ப பெறலாம். வேட்புமனு தாக்கல் செய்யும் நேரம் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை ஆகும்.

தமிழகத்தில் 30ம் தேதி முதல் ஏப்ரல் 6ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டாலும், மார்ச் 30, ஏப்ரல் 2, 4, 6 ஆகிய 4 நாட்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய முடியும். மற்ற நாட்கள் அரசு விடுமுறை ஆகும்.

தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குவதையொட்டி அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தது. வேட்புமனு தாக்கல் செய்ய வரும்போது வேட்பாளர் உள்பட 5 பேர் மட்டுமே மனு தாக்கல் செய்யும் இடத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். வேட்புமனு தாக்கலுக்காக நேரில் வரும் வேட்பாளருடன் 3 கார்கள் மட்டுமே வர அனுமதிக்கப்பட்டனர்.

அதேநேரம் ஊர்வலமாக வர அனுமதி இல்லை. வேட்புமனு தாக்கல் செய்யும் இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு, அனைத்து நடவடிக்கைகளும் பதிவு செய்யப்பட்டது. வேட்புமனு தாக்கல் செய்யும் இடங்களில் துணை ராணுவம் உள்பட தமிழ்நாடு போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மேலும், அங்கீகரிக்கப்பட்ட தேசிய அல்லது மாநில கட்சி வேட்பாளராக இருந்தால் அவரை, அவர் போட்டியிடும் தொகுதியை சேர்ந்த ஒரு வாக்காளர் முன்மொழிய வேண்டும். பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்சி வேட்பாளர் அல்லது சுயேச்சை வேட்பாளர் என்றால் அந்த தொகுதியை சேர்ந்த 10 வாக்காளர்கள் அவரை முன்மொழிய வேண்டும். ஒருவர் 2 தொகுதிகளுக்கு மேல் வேட்புமனு தாக்கல் செய்யக்கூடாது.

2க்கும் மேலான தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்தால், அவரது அனைத்து வேட்புமனுக்களும் நிராகரிக்கப்பட்டு, தேர்தலில் நிற்க முடியாத நிலை ஏற்படும். டெபாசிட் தொகையாக ரூ.10 ஆயிரம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி வேட்பாளர்கள் ரூ.5 ஆயிரம் செலுத்தினால் போதும். https://suvidha.eci.gov.in என்ற இணையதளம் மூலமும் வேட்புமனு தாக்கல் செய்யலாம். ஆனால் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனு தாக்கலின்போது நேரில் ஒப்படைக்க வேண்டும்.

வேட்பாளர்கள், வேட்புமனு தாக்கல் தேதியில் இருந்து 3 மாதத்துக்குள் எடுக்கப்பட்ட வேட்பாளரின் போட்டோவையே வேட்புமனுவில் இணைக்க வேண்டும். வேட்பாளர்கள், வேட்புமனு தாக்கல் நிறைவுநாளான வருகிற 6ம் தேதி மாலை 3 மணிக்குள் உறுதிமொழி பத்திரத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

வேட்புமனு தாக்கல் தொடங்கிய முதல் நாளிலேயே திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். அதன்படி இன்று மதியம் 12.30 மணிக்கு கொளத்தூர் பேப்பர்மில்ஸ் சாலையில் உள்ள பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலகம் சென்று அங்கிருந்த தேர்தல் நடத்தும் அதிகாரி சாந்தியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து அங்கு ஏராளமான திமுக தொண்டர்கள் குவிந்தனர்

இதேபோன்று திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு சுயேட்சை வேட்பாளர்களும் தமிழகம் முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்தனர். வேட்புமனு தாக்கல் செய்யும் இடங்களில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்ததால், எந்த அசம்பாவித சம்பவமும் நடைபெறாமல் அமைதியான முறையில் மனு தாக்கல் நடைபெற்றது. இந்நிலையில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான முதல்நாள் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது.

 

Related Stories: