மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் 9 பேரின் தண்டனை விபரங்களை ஏப். 2க்கு நீதிபதி தள்ளி வைத்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரிகளான தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகியோர், கடந்த 2020ல் அதிமுக ஆட்சி காலத்தில் கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறி செல்போன் கடையைத் திறந்து வைத்திருந்ததாக கூறி, சாத்தான்குளம் காவல் நிலையத்துக்கு விசாரணைக்காக போலீசார் அழைத்துச் சென்றனர். அப்போது கடுமையாக தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர்.
இந்த வழக்கை சிபிஐ விசாரித்து, இன்ஸ்பெக்டர் உள்பட 10 போலீசாரை கைது செய்தனர். இதில் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்தார். மீதமுள்ள 9 பேர் மீதான வழக்கு மதுரை முதலாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், நீதிபதி முத்துக்குமரன் 9 பேரும் கொலைக்குற்றவாளிகள் என்றும், இவர்களுக்குரிய தண்டனை விபரம் மார்ச் 30ல் தெரிவிக்கப்படும் என்றும் கூறியிருந்தார். மேலும், இவர்களுக்கு என்ன தண்டனை வழங்கலாம், இவர்களின் முந்தைய நடத்தை என்ன என்பது குறித்து ஒன்றிய, மாநில அரசுகளின் தொடர்புடைய அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்யுமாறும் உத்தரவிட்டிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி முத்துக்குமரன் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. அப்போது தண்டனை குறித்த விபரங்கள் தொடர்பாக இறுதி விவாதம் நடந்தது. அப்போது ஒன்றிய அரசு தரப்பில் இருந்து அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதைக்கேட்ட நீதிபதி முத்துக்குமரன், ‘‘பரவலாக கவனிக்கப்பட்டு வரும் இந்த வழக்கில் தண்டனை விபரத்தை நீதிமன்றம் முடிவு செய்திருக்கிறது. இருந்த போதிலும், ஒன்றிய, மாநில அரசுகளின் அறிக்கையை கேட்டால் ஏன் தாமதம் ஆகிறது. அறிக்கை வந்தால் தான் குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுளா, ஆயுளா, தூக்குத் தண்டனையா என முடிவு செய்ய முடியும். அறிக்கை தாக்கல் செய்வதில் என்ன தாமதம்? நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்க வேண்டாம். நீதிமன்றத்திற்கு மதிப்பளிக்க வேண்டும்’’ எனக்கூறி தண்டனை விபரத்தை வரும் ஏப். 2ம் தேதி தெரிவிப்பதாகக் கூறி தள்ளிவைத்தார்.
