சட்டமன்ற தேர்தலையொட்டி முதற்கட்டமாக 3,32,231 அலுவலர்களுக்கு பயிற்சி: தேர்தல் ஆணையம் தகவல்

 

சென்னை : சட்டமன்ற தேர்தலையொட்டி முதற்கட்டமாக 3,32,231 அலுவலர்களுக்கு தேர்தல் பயிற்சி வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் நடைபெறுவதையொட்டி, 234 தொகுதிகளிலும், வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி கடந்த 28 மற்றும் 29ம் ஆகிய தேதிகளில் நடந்தது. இந்த பயிற்சி திட்டத்தில், 3,32,231 அலுவலர்களுக்கு வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களின் கடமைகள், பங்களிப்புகள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான பாடங்களில் பயிற்சி அளிக்கப்பட்டது.

தேர்தல் தொடர்பான பணிகளை திறம்பட நிர்வகிப்பதற்கான அவர்களின் திறனை வலுப்படுத்தவும், நடைமுறைகளைச் சரியாகச் செயல்படுத்துவதை உறுதி செய்வதற்கும், சட்டத்திற்கு உட்பட்டு தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலை சுதந்திரமாகவும், நேர்மையாகவும் மற்றும் வெளிப்படையாகவும் நடத்துவதற்கு தங்களை தயார்படுத்திக் கொள்வதை உறுதி செய்வதே பயிற்சித் திட்டத்தின் நோக்கமாகும்.

அதேபோல் தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள், வாக்குப்பதிவு அலுவலர்கள், வாக்கு எண்ணும் மேற்பார்வையாளர், வாக்கு எண்ணும் உதவியாளர் மற்றும் நுண் பார்வையாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதிய விகிதங்களை இந்திய தேர்தல் ஆணையம் உயர்த்தியுள்ளது.

Related Stories: