தமிழ்நாடே.. தலைப்புச் செய்திக்கு Ready? இன்னும் சற்று நேரத்தில் திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட உள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு

இன்னும் சற்று நேரத்தில் திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட உள்ள நிலையில், தமிழ்நாடே.. தலைப்புச் செய்திக்கு Ready? என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

திமுக தேர்தல் அறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலின் சற்று நேரத்தில் வெளியிடுகிறார். இதில் மக்களை கவரும் வகையில் பல்வேறு முக்கிய அதிரடி அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரும் 23ம் தேதி நடக்கிறது. இத்தேர்தலில் திமுக சார்பில் 164 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார். அதே நேரத்தில் தேர்தல் கதாநாயகன் என்று சொல்லப்படும் தேர்தல் அறிக்கை தயாரிக்க திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவில் டி.கே.எஸ்.இளங்கோவன், அமைச்சர்கள் கோவி.செழியன், பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், டி.ஆர்.பி.ராஜா, திமுக அயலக அணிச் செயலாளர் எம்.எம்.அப்துல்லா, செய்தி தொடர்பு செயலாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், மருத்துவ அணிச் செயலாளர் எழிலன் நாகநாதன், சுற்றுச்சூழல் அணிச் செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி, மகளிர் தொண்டர் அணி துணைச் செயலாளர் ஆ.தமிழரசி ரவிக்குமார் எம்எல்ஏ, இந்திய ஆட்சிப் பணி அலுவலர் (ஓய்வு) ஜி.சந்தானம், கனவு தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் சம்பந்தம் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

இந்த குழு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து அனைத்து தரப்பினரையும் நேரில் சந்தித்து கருத்துகளைக் கேட்டது. இதில் பொதுமக்கள், வணிகர்கள், அரசு ஊழியர்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பினரும் பங்கேற்று கருத்துக்களையும், பரிந்துரைகளையும் வழங்கினர். தொடர்ந்து தேர்தல் அறிக்கைக்கு இறுதி வடிவம் கொடுக்கும் பணியில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினர் ஈடுபட்டனர். அனைத்து தரப்பினரும் தெரிவித்த கருத்துக்களை அறிக்கையாக தயாரித்து இந்த குழு முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கியது. அதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் சரிபார்த்து தேர்தல் அறிக்கைக்கு ஒப்புதல் வழங்கினார்.

இந்த நிலையில் திமுக போட்டியிடும் 164 தொகுதிகளுக்கான பட்டியலை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார். அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக தேர்தல் அறிக்கை நாளை(இன்று) மாலை வெளியிடப்படும் என்று அறிவித்தார். அதன்படி திமுக தேர்தல் கதாநாயகன் என வர்ணிக்கப்படும் திமுகவின் தேர்தல் அறிக்கையை இன்று மாலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிடுகிறார். இந்த தேர்தல் அறிக்கையில் மக்களை கவரும் வகையில் பல்வேறு முக்கிய அதிரடி அறிவிப்புகள் வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 31ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் சூறாவளி பிரசாரத்தை தொடங்க உள்ளார். அதே போல துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 31ம் தேதி தனது முதல் கட்ட பிரசாரத்தை தொடங்குகிறார். இதே போல திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி 30ம் தேதி(நாளை) முதல் தொடங்க உள்ளார்.

Related Stories: