வாஷிங்மிஷின், பிரிட்ஜ் போன்ற வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க இல்லத்தரசிகளுக்கு ரூ.8000 கூப்பன்: அனைத்து மக்களுக்கும் பயனளிக்கும் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் மு.க.ஸ்டாலின்

* மகளிருக்கு ரூ.2000, மாணவர்களுக்கு ரூ.1500, முதியோருக்கு ரூ.2000, மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2500 ஆக உதவித்தொகை உயர்வு

* 10 லட்சம் புதிய வீடுகள், முதல்வர் மருத்துவக் காப்பீட்டுத்தொகை ரூ.10 லட்சமாக உயர்வு, 20 லட்சம்
விவசாயிகளுக்கு இலவச பம்ப்செட், காலை உணவுத் திட்டம் 8ம் வகுப்பு வரை விரிவாக்கம்

* ஒவ்வொரு மாவட்டத்திலும் டைடல் பார்க், ஒவ்வொரு மண்டலத்துக்கும் சிறப்பு வளர்ச்சி திட்டம், 50 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு

* அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு தொழில் தொடங்க ரூ.5 லட்சம்

சென்னை: தமிழக சட்டப்பேரவை தேர்தலையொட்டி, திமுக தேர்தல் அறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார். இல்லத்தரசிகளுக்கு வாஷிங் மிஷின், பிரிட்ஜ் போன்ற வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க ரூ.8 ஆயிரம் கூப்பன் வழங்கப்படும். மகளிருக்கு ரூ.2000 உதவித்தொகை, மாணவர்களுக்கு ரூ.,1500, முதியோருக்கு ரூ.2000, மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2500 ஆக உயர்த்தப்படும், புதிதாக 10 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும். 20 லட்சம் விவசாயிகளுக்கு இலவச பம்ப்செட் மற்றும் 8ம் வகுப்பு வரை காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என்பது உள்ளிட்ட 50 தலைப்புகளில் 525 அறிவிப்புகளை முதல்வர் வெளியிட்டார்.

தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் வரும் 23ம் தேதி நடக்கிறது. இதற்காக வேட்புமனு தாக்கல் இன்று தொடங்க உள்ளது. தேர்தலை சந்திக்கும் வகையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன. இந்த தேர்தலில் ஆளுங்கட்சியான திமுக மெகா கூட்டணியை அமைத்துள்ளது. இந்த கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதேபோல தேமுதிகவுக்கு 10 தொகுதி, விசிகவுக்கு 8 தொகுதி, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு தலா 5 தொகுதி, மதிமுகவுக்கு 4 (3 உதயசூரியன் சின்னம்), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி 2 தொகுதி (ஏணி சின்னம்), மனித நேய மக்கள் கட்சி 2 தொகுதி (உதயசூரியன் சின்னம்), கொமதேகவுக்கு 2 தொகுதி (உதயசூரியன் சின்னம்) ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் எஸ்டிபிஐ கட்சி, மஜக, முக்குலத்தோர் புலிப்படை, தமிழர் தேசம் ஆகிய 4 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

திமுக தனது கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு 70 தொகுதிகளை வழங்கியுள்ளது. இதன் மூலம் திமுக 164 இடங்களில் போட்டியிடுகிறது. மதிமுக 3 இடங்கள், மனிதநேய மக்கள் கட்சி- 2, கொமதேக- 2, எஸ்டிபிஐ, மஜக, முக்குலத்தோர் புலிப்படை, தமிழர் தேசம் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 11 இடங்களில் ‘உதயசூரியன்’ சின்னத்தில் போட்டியிடுகின்றன. அந்த வகையில் 175 தொகுதிகளில் ‘உதயசூரியன்’ சின்னம் களம் காண்கிறது. இந்நிலையில், கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் எவை என்பது தொடர்பான பட்டியலை திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் வெளியிட்டார்.

தொடர்ந்து திமுக போட்டியிடும் 164 தொகுதிகளுக்கான வேட்பாளர் பெயர் பட்டியலையும் வெளியிட்டார். இந்நிலையில் தேர்தல் கதாநாயகனாக விளங்கும் தேர்தல் அறிக்கையை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் வெளியிட்டார். இதனை பொதுச்செயலாளர் துரைமுருகன், திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு தலைவரும், துணை பொதுச்செயலாளருமான கனிமொழி எம்பி ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

அப்போது பொருளாளர் டி.ஆர்.பாலு, துணை பொதுச்செயலாளர்கள் திருச்சி சிவா, ஆ.ராசா, அமைச்சர் மு.பெ.சாமிநாதன், இளைஞர் அணி செயலாளர் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினர், அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தி தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் உடனிருந்தனர். தேர்தல் அறிக்கையை வெளியிட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

தந்தை பெரியார்-அண்ணா- கலைஞர் ஆகியோர் உருவாக்கித் தந்த பாதையில், கொள்கைத் தடம் மாறாமல், திமுகவை தலைமைப் பொறுப்பிலிருந்து, வழிநடத்தி, ஆறாவது முறையாகக் கழகத்தை ஆட்சியில் அமர வைத்து, ‘திராவிட மாடல்’ எனப் பெயரிட்டு, தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் நடைபோட வைத்து, தமிழ்நாட்டை முதன்மை இடத்திற்கு நான் கொண்டு வந்திருக்கிறேன். இந்தப் பெருமித உணர்வோடு 2026ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்தின் 17வது சட்டப்பேரவைத் தேர்தலுக்கான எங்கள் வாக்குறுதியை நான் வெளியிடுகிறேன்.

நடைபெற இருக்கும் தேர்தலில் வெற்றிபெற்று ஏழாவது முறையாக ஆட்சியமைக்க இருக்கிறது, திமுக. இந்த நம்பிக்கை, திமுகவினருக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டு மக்களுக்கும் இருக்கிறது! ஏனென்றால், இதுவரையில் எந்த மாநில அரசும் இந்த அளவிற்கு மாபெரும் சாதனைகளை நிகழ்த்தியதில்லை என்று பெருமையோடு சொல்லும் அளவிற்கு, ஏராளமான சாதனைத் திட்டங்களைத் திராவிட மாடல் ஆட்சியில் உருவாக்கிக் கொடுத்திருக்கிறோம். பல மேடைகளில் அந்தத் திட்டங்களையெல்லாம் பட்டியலிட்டுச் சொல்லியிருந்தாலும், ஒரு சிறிய ரீவைன்ட் போன்று, தலைப்புச் செய்தியாகச் சில திட்டங்களை மட்டும் நான் சொல்ல விரும்புகிறேன்.

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், விடியல் பயணம், காலை உணவுத் திட்டம், புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன், நான் முதல்வன், இல்லம் தேடிக் கல்வி, மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் – நம்மைக் காக்கும் 48, கலைஞர் கனவு இல்லம், தாயுமானவர் திட்டம், கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் திட்டம் என்று, ஒவ்வொரு துறை சார்பிலும் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி, தமிழ்நாட்டை வளர்த்தெடுத்திருக்கிறோம். அதனால்தான், நம்முடைய வளர்ச்சியை யாராலும் தடுக்கவும் முடியவில்லை; மறைக்கவும் முடியவில்லை.

நாட்டிலேயே டபுள் டிஜிட் வளர்ச்சியில் சொல்லும் ஒரே மாநிலமாக இன்றைக்கு நம்முடைய தமிழ்நாடு இருக்கிறது. 2021ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போதே, பத்தாண்டுகளுக்கான இலக்குகளை நிர்ணயித்துதான் இந்தப் பயணத்தை நாங்கள் தொடங்கினோம். அதற்கான-தொலைநோக்குத் திட்டங்களை வகுத்தோம். ஒவ்வொரு தனிமனிதரும் பயனடையும் திட்டங்களை உருவாக்கினோம்.

கொடுத்த வாக்குறுதியின்படி, ஒரு கோடியே 31 லட்சம் மகளிர்க்கு ஆயிரம் ரூபாயை உரிமைத்தொகையாக கொடுக்கத் தொடங்கினோம். தேர்தலைக் காரணம் காட்டி, அதை தடுக்கலாம் என்று பா.ஜ.க. நினைத்தது! ஆனால், அந்தச் சதியை முன்கூட்டியே உணர்ந்து, மூன்றாயிரம் ரூபாயையும் – கோடைக்காலச் சிறப்புத்தொகையாக இரண்டாயிரம் ரூபாயையும் சேர்த்து, ஐந்தாயிரம் ரூபாயை ஒரு கோடியே 31 லட்சம் மகளிரின் வங்கிக் கணக்கில் பிப்ரவரி மாதத்தில் செலுத்தினோம்.

அரசு ஊழியர்களின் 22 ஆண்டுகாலக் கோரிக்கையான, பழைய ஓய்வூதியத் திட்டத்தை நிறைவேற்றும் வகையில், தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை நிறைவேற்றி, அரசு ஊழியர்களின் மனங்களை மகிழ வைத்தோம். இப்படி, ஒவ்வொரு சாதனையையும் புள்ளிவிவரத்துடன் என்னால் சொல்ல முடியும். தமிழ்நாட்டின் வளர்ச்சியைக் கெடுக்க நினைக்கும் கூட்டம்தான், திமுகவை எதிர்க்கிறது. அவர்களும் ஏராளமான பொய்ச் செய்திகளைப் பரப்பிப் பார்த்தார்கள்.அது எதுவுமே தமிழ்நாட்டு மக்களிடம் எடுபடவில்லை.

இப்போது, ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் எண்ணம் என்ன என்றால், திராவிட மாடல் கட்டமைத்திருக்கும் வளர்ச்சிப் பாதையில் தமிழ்நாடு தொடர்ந்து பயணிக்க வேண்டும். தமிழ்நாடு, தலைநிமிர்ந்த தமிழ்நாடாக – தலைசிறந்த தமிழ்நாடாக எப்போதுமே இருக்க வேண்டும். தமிழ்நாட்டைக் காக்க-கல்வியையும், உட்கட்டமைப்பையும் வளர்க்க-சமூகநீதி தழைக்க-இதுவரை அடைந்திருக்கும் முன்னேற்றத்தைப் பாதுகாக்க-திமுக ஆட்சி தொடர வேண்டும். திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைய வேண்டும். இதுதான், தமிழ்நாட்டு மக்களின் உறுதியான எண்ணம்.

சொன்னதை மட்டுமல்ல-சொல்லாததையும் செய்து காட்டிய கடந்த ஐந்தாண்டுகால திராவிட மாடலின் சாதனைகளை விஞ்சும் அளவிற்கு, திராவிட மாடல் 2.0 இருக்கும். அதற்கு அடித்தளமாக இருக்கப் போகும் தேர்தல் அறிக்கையைத்தான் இப்போது உங்களிடம் பகிர்ந்து கொள்ளப் போகிறேன். எங்களின் கொள்கைகள்-தொலைநோக்குத் திட்டங்கள் மட்டுமல்ல, இதற்காக அமைக்கப்பட்ட குழு, தமிழ்நாடு முழுவதும் பலமுறை பயணம் செய்து, மக்களின் கனவுகளையும் – கருத்துகளையும் – கோரிக்கைகளையும் கேட்டு, இதைத் தயாரித்திருக்கிறார்கள்.

இந்தத் தேர்தல் அறிக்கை தயாரிக்கத் தலைமையேற்ற திமுக துணைப் பொதுச்செயலாளர் என்னுடைய தங்கை கனிமொழிக்கும், துணை நின்று பணியாற்றியிருக்கும் உறுப்பினர்கள்-டி.கே.எஸ். இளங்கோவன், கோவி.செழியன், பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், டி.ஆர்.பி. ராஜா, எம்.எம். அப்துல்லா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், மருத்துவர் எழிலன் நாகநாதன், கார்த்திகேய சிவசேனாபதி, தமிழரசி ரவிக்குமார், ஓய்புவெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஜி.சந்தானம், தொழில் முனைவோர் சுரேஷ் சம்பந்தம் ஆகியோர் அடங்கிய குழுவிற்கு, என்னுடைய பாராட்டுகள்.

எங்களை நம்பும் மக்களுக்கு நான் நிச்சயமாகச் சொல்கிறேன். உங்களை அனைவரின் நம்பிக்கையையும் நாங்கள் நிச்சயம் காப்பாற்றுவோம். இந்த உறுதியோடு, தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கும் வாக்குறுதிகள் அனைத்துமே முக்கியமான வாக்குறுதிகள்தான். நேரத்தின் அருமை கருதி, முக்கியமான சிலவற்றை மட்டும், சுருக்கமாக-தலைப்புச் செய்திகளாக நான் அறிவிக்கிறேன். வெல்வோம் ஒன்றாக. இவ்வாறு அவர் பேசினார்

* திமுக தேர்தல் அறிக்கையில் 525 அறிவிப்புகள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட திமுக தேர்தல் அறிக்கையில் மொத்தம் 50 தலைப்புகளில் 525 அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. 94 பக்கங்களை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

* காலை உணவுத் திட்டத்தில்…
இதுவரை 1 முதல் 5 வரை படிக்கும் 19 லட்சம் குழந்தைகளுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தில் காலை உணவு வழங்கினோம். திராவிட மாடல் 2.0 ஆட்சியில் கூடுதலாக 15 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் எட்டாம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும். ஒரு கோடியே 31 லட்சம் சகோதரிகள் பெற்று வரும் உரிமைத்தொகையை இனி 2000 ரூபாயாக உயர்த்தி வழங்குவோம். இலவச மின்சாரம் பெறும் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு எவ்வித மீட்டரும் பொருத்தப்படாத நவீன மின்சாரப் பம்பு செட்டுகள் வழங்கப்படும்.

அடுத்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 10 லட்சம் புதிய வீடுகள் கட்டித் தரப்படும். 5. முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்கப்படுவதற்கான ஆண்டு வருமான வரம்பு ரூ.5 லட்சமாகவும், காப்பீட்டுத் தொகை ரூ.10 லட்சமாகவும் உயர்த்தப்படும். உயர்கல்விச் சேர்க்கையை அதிகரிக்க, புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன் திட்டத்தின்படி மாதம்தோறும் வழங்கப்பட்டு வரும் ஆயிரம் ரூபாய், இனி 1500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

* 50 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள்
அரசு அமைப்புகளில் ஏற்படும் 1,50,000 காலிப் பணியிடங்கள் காலதாமதமின்றி நிரப்பப்படும். அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பதவி உயர்வுகள் உரிய நேரத்தில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். உயர்கல்வி பயிலும் 35 லட்சம் மாணவர்களுக்கும் ஐந்து ஆண்டுகளுக்குள் மடிக்கணினி வழங்கப்படும். உயர்கல்வி முடித்த 5 லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையில் நான் முதல்வன் திட்டத்தில் 1500 ரூபாய் மாத உதவித்தொகையுடன் 6 மாதம் பயிற்சி வழங்கப்படும்.

புதிதாக 2 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில், 2030-ஆம் ஆண்டிற்குள் ஒவ்வொரு மாவட்டத்திலும் நியோ டைடல் பூங்காக்கள்; நகரங்களில் தேவைப்படும் இடங்களில் முழு அளவிலான தொழில்நுட்பப் பூங்காக்கள் அமைக்கப்படும். ரூ. 18 லட்சம் கோடி அந்நிய முதலீடு ஈர்க்கப்பட்டு, அதன்மூலம் 50 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

தமிழ்நாட்டின் ஏற்றுமதி 120 பில்லியன் டாலராக உயர்ந்து, உலக வணிக வரைபடத்தில் தமிழ்நாடு இடம் பிடிக்கும் வகையில் திராவிட மாடல் ஆட்சியின் செயல்பாடுகள் அமையும். தகவல் தொழில்நுட்ப ஏற்றுமதி 2.5 லட்சம் கோடி ரூபாயிலிருந்து 5 இலட்சம் கோடி ரூபாயாக இரண்டு மடங்கு ஆக்கப்படும். 5,000 கோயில்களுக்குக் குடமுழுக்கு செய்யப்படும். ஆயிரம் கிராம தெய்வத் திருக்கோவில்கள் மறுசீரமைப்பு செய்யப்படும்.

* நம் இல்லங்களின் அரசிகளான மகளிரை மகிழ்விக்க முக்கியமான வாக்குறுதி
இல்லத்தரசிகள் தங்களின் வீட்டிற்குத் தேவையான வாஷிங் மெஷின், டி.வி., கிரைண்டர், ஃப்ரிட்ஜ், மிக்சி, மைக்ரோவேவ்-அவன் மற்றும் மின் அடுப்புகள் போன்ற வீட்டு உபயோகப் பொருட்களைப் புதிதாக வாங்கவோ அல்லது ஏற்கெனவே பயன்படுத்தி வரும் இத்தகைய பொருட்களுக்கு மாற்றாக வாங்கவோ ‘இல்லத்தரசி’ என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.

இந்தத் திட்டத்தின்கீழ், வருமான வரி செலுத்தாத குடும்பங்களின் இல்லத்தரசிகள் அனைவருக்கும் அவர்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள கடைகளில் இந்தப் பொருட்களை வாங்கிக் கொள்ளும் வகையில், ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா எட்டாயிரம் ரூபாய் மதிப்பிலான கூப்பன் வழங்கப்படும். இப்போது நான் சொல்லியிருக்கும் அனைத்துமே ஹைலைட்ஸ் மட்டும்தான்.

பொதுவாக தமிழ்நாட்டுத் தேர்தல்களைப் பொருத்தவரைக்கும், தி.மு.க.வின் தேர்தல் அறிக்கைதான் ‘ஹீரோ’. இப்போது, ‘திராவிட மாடல் 2.0’-க்கான இந்தத் தேர்தல் அறிக்கை ‘சூப்பர் ஸ்டார்’-ஆக களம் இறங்கி இருக்கிறது. திராவிட மாடல் 2.0-வில் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி… உறுதி… மாபெரும் மக்கள் சாசனமான இந்தத் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள, அனைத்து வாக்குறுதிகளும் சட்டங்களாகவும், மாபெரும் திட்டங்களாகவும் மாறும்.

* அனைத்து மாநகராட்சிகள், முக்கிய நகராட்சிகளில் 50 புதிய செம்மொழிப் பூங்காக்கள் அமைக்கப்படும். திருச்சி, மதுரை, கோயம்புத்தூர், சேலம் மாநகராட்சிகளின் அருகில் நவீன உலகத்தர வசதிகளுடன் புதிய நகரங்கள் அமைக்கப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் 10,000 புதிய பேருந்துகள் இயக்கப்படும். ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை உயர்த்தப்படும்.

மொழிப்போராட்ட வரலாற்றை இளைய தலைமுறையினர் அறிய, நவீன நூலக வசதிகளுடன் கூடிய காட்சிக் கூடம் பொள்ளாச்சியில் அமைக்கப்படும். நிகர சாகுபடிப் பரப்பு 50 லட்சம் ஹெக்டேராக உயர்த்தப்படும். தொழிற்சாலைகள் அதிகமுள்ள நகரங்களில், பெண்கள் வேலைக்குச் செல்வதை எளிதாக்கும் பொருட்டு, குழந்தைகள் காப்பகங்கள் 1000 உருவாக்கப்படும்.

* பல்வேறு துறைகளில் சிறப்புறப் பணியாற்றிடும் திருநர் – திருநங்கையருக்கு விருது வழங்கப்படும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் பள்ளி இடைநிறுத்தம் இல்லா நிலை அடைய நடவடிக்கைகள் எடுக்கப்படும். பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் தொழில் தொடங்க, TABCEDCO மூலம் கடன் பெறும் உச்சவரம்பு 30 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும். கடலூர், தஞ்சாவூர், மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, இராமநாதபுரம், சேலம், திருப்பூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கோவை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் புற்றுநோய்க்கான நவீன சிகிச்சை வசதிகள் ஏற்படுத்தப்படும்.

* சிறுபான்மையினர் தொழில் தொடங்க டாம்கோ மூலம் கடன்பெறும் உச்சவரம்பின் அளவு 30 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும். அனைத்து மாவட்டங்களிலும் உணவு மற்றும் தங்குமிட வசதியுடன் கூடிய தரம் வாய்ந்த விளையாட்டு விடுதிகள் கட்டப்படும்.

மிகவும் வறுமையில் வாடும் நலிவடைந்த குடும்பங்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு வீட்டு வசதி, சமூகப் பாதுகாப்பு, வாழ்வாதாரம், திறன் மேம்பாடு, வங்கிக்கடன் உள்ளிட்ட பல்வேறு உதவிகள் கிடைக்க தாயுமானவர் திட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப்படும். கிராம சாலைத் திட்டத்தின் கீழ் 15 ஆயிரம் கி.மீ நீளமுள்ள சாலைகள் ரூபாய் 10,000 கோடி மதிப்பீட்டில் சீர்செய்யப்படும்.

* மகளிர் சுயஉதவிக்குழு தொழில் தொடங்க ரூ.5 லட்சம்
சுயஉதவிக்குழு உறுப்பினராக இருக்கும் பெண்கள், தொழில் முனைவோராக முன்னேறிடும் வகையில் பிணை எதுவுமின்றி ரூ. 5 லட்சம் வரை மானியத்துடன் வங்கிக் கடனுதவி வழங்கப்படும். பேரிடர் கால இழப்பீடுகளாக இறவைப் பாசனப் பயிர்கள் மற்றும் நெல் பயிர்கள் – ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.25,000, நீண்டகாலப் பயிர்கள்-ரூ.27,000, மானாவாரிப் பயிர்கள்-ரூ.12,000 என உயர்த்தி வழங்கப்படும்.

மாவட்டங்கள் முதல் வட்டங்கள் வரையிலான அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் சிகிச்சைக்கான கருவிகள் இரண்டு மடங்காக்கப்படும். அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்காக அறிவிக்கப்பட்ட தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் சிறப்பாகச் செயல்படுத்தப்படும். ஒன்றிய அரசின் எட்டாவது ஊதியக் குழு அறிக்கையை ஒன்றிய அரசு செயல்படுத்தியதும், அதனை மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கும் செயல்படுத்தக் குழு அமைக்கப்படும்.

* முதியோர் உதவித்தொகை
முதியோர் உதவித்தொகை ரூ. 1,200 லிருந்து ரூ.2000 ஆக உயர்த்தப்படும். மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை ரூ.1500-இல் இருந்து ரூ. 2,500-ஆக உயர்த்தப்படும். மீன்பிடி தடைக்காலச் சிறப்பு நிவாரணத் தொகை 8 ஆயிரம் ரூபாயில் இருந்து 12 ஆயிரம் ரூபாயாகவும், மீன்பிடி குறைவுக் காலச் சிறப்பு நிவாரணத் தொகை 6 ஆயிரம் ரூபாயிலிருந்து 9 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும்.

அன்னைத் தமிழைப் போற்றப் பன்னாட்டுத் தமிழறிஞர்களையும் மொழி வல்லுநர்களையும் கொண்டு ‘செம்மொழி மாநாடு’ சென்னையில் நடத்தப்படும். ஒன்றிய – மாநில உறவுகள் குறித்து ஆராயத் தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதியரசர் குரியன் ஜோசப் தலைமையிலான அறிக்கையை நாடு முழுவதும் விவாதப் பொருளாக்கி, மாநில அரசுகளின் உரிமைகளை நிலைநாட்டும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம்.

* நெல், கரும்பு கொள்முதல் விலை உயர்வு
நெல் கொள்முதல் விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 3,500-ஆக உயர்த்தி வழங்கப்படும். கரும்பு கொள்முதல் விலை டன் ஒன்றுக்கு 4,500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு 5 ரூபாய் உயர்த்தப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* வடமாவட்டங்களுக்கு சிறப்பு வளர்ச்சித் திட்டம்
தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதி வளர்ச்சியையும் உறுதி செய்ய கல்வி மற்றும் சுகாதாரக் குறியீடுகளில் மாநில அளவிலான சராசரி வளர்ச்சியை அடையும் வகையில் “வட மாவட்டங்களுக்கான ஒரு சிறப்பு வளர்ச்சித் திட்டம்”- அதேபோல, தமிழ்நாட்டின் நெற்களஞ்சியத்தில் வேளாண் மற்றும் வேளாண் தொழில்கள் முன்னேற்றத்தை உறுதிசெய்யும் வகையில், டெல்டா மாவட்டங்களுக்கான ஒரு சிறப்பு வளர்ச்சித் திட்டம் -அதுமட்டுமல்ல,

தொழில் வளர்ச்சியில் சாதனை புரிந்து வரும் மேற்கு மாவட்டங்களில் அடுத்தகட்த்ட தொழிற்புரட்சியை உறுதிசெய்திடும் வகையில், மேற்கு மாவட்டங்களுக்கான ஒரு சிறப்புத் தொழில் வளர்ச்சித் திட்டம்-நிறைவாக, கல்வி மற்றும் சுகாதாரக் குறியீடுகளில் உரிய வளர்ச்சியைப் பெற்றிடவும் தென் தமிழ்நாடு தொழில்மயமாவதை உறுதிசெய்திடும் வகையிலும் தென் மாவட்டங்களுக்கான ஒரு சிறப்பு வளர்ச்சித் திட்டம்- இந்த நான்கு சிறப்புத் திட்டங்களும் 20 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

* பத்திரிகையாளர்களின் குழந்தைகள் கல்விக்காக…
பத்திரிகையாளர்களின் குழந்தைகள் கல்விக்காக வழங்கப்படும் பல்வேறு உதவித்தொகைகள் அனைத்தும் இரு மடங்காக உயர்த்தப்படும். தமிழ்நாட்டில் 10 கைத்தறிப் பூங்காக்கள் அமைக்கப்படும். தமிழ்நாட்டின் எம்எஸ்எம்இ நிறுவனப் பொருள்களை உலக அளவில் சந்தைப்படுத்த மெய்நிகர் வணிகத் தளம் உருவாக்கப்படும். கிராமப்புறங்களின் ஆதாரங்களைக் கொண்டு, ஊரகப்பகுதிகளில் 5,000 புத்தொழில்கள் தொடங்கப்படும்.

கூடைப்பந்து, கைப்பந்து, பேட்மிண்டன், தற்காப்புக் கலை, வாள்வீச்சு விளையாட்டுகளுக்கான பல்நோக்கு வசதிகொண்ட உள்விளையாட்டு அரங்குகள் அனைத்து மாவட்டங்களிலும் இருப்பது உறுதி செய்யப்படும். மீனவர்கள் தங்களின் வருவாயைப் பெருக்குவதற்குத் தேவையான நவீன உட்கட்டமைப்பு வசதிகள் மீன்பிடித் துறைமுகங்கள் மற்றும் மீன் இறங்குதளங்களில் ஏற்படுத்தித் தரப்படும். அனைத்து அரசுக் கல்லூரிகளிலும் வை பை வசதியுடன் கூடிய டிஜிட்டல் கற்றல் மையங்கள். அனைத்துச் சட்டமன்றத் தொகுதிகளிலும் முதல்வர் படைப்பகங்கள் அமைக்கப்படும்.

* சட்டமன்றத் தேர்தலின் சூப்பர் ஸ்டார் களமிறங்கி விட்டது முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைத்தளப் பதிவில் கூறியிருப்பதாவது: திமுக தேர்தல் அறிக்கை 2026: சட்டமன்றத் தேர்தலின் சூப்பர் ஸ்டார் களமிறங்கி விட்டது. மகளிர், மாணவர், இளைஞர், விவசாயிகள், மீனவர், நெசவாளர், மாற்றுத்திறனாளிகள், சிறுபான்மையினர் என அனைத்துத் தரப்பினருக்குமான வாக்குறுதிகளையும் கொண்ட ஆல் ரவுண்டர் நமது தேர்தல் அறிக்கைதான். இதனை இல்லந்தோறும் கொண்டு சேர்ப்போம். மே-4 சரித்திர வெற்றியைத் தலைவர் கலைஞரின் நினைவிடத்தில் காணிக்கை ஆக்குவோம். வெல்வோம் ஒன்றாக. இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: