கேரளாவில் பாஜ ஆட்சியமைத்தால் முந்தைய அரசுகளின் ஊழல்களை வெளிச்சத்திற்கு கொண்டு வருவோம்: பாலக்காட்டில் பிரதமர் மோடி பேச்சு

திருவனந்தபுரம்: கேரள மாநில சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி நேற்று பாலக்காடு மற்றும் திருச்சூரில் பாஜ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். நேற்று மதியம் பாலக்காடு கோட்டை மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: கேரளாவில் இம்முறை ஒரு மாற்றம் ஏற்படப்போவது உறுதி. இந்த மாநிலத்தில் நம்முடைய எத்தனையோ தொண்டர்கள் அரசியல் தாக்குதல்களில் தங்களது உயிரை இழந்துள்ளனர். அவர்களுக்கு நான் என்னுடைய மரியாதையை செலுத்துகிறேன்.

வேலையில்லாத காரணத்தால் கேரளாவில் இருந்து பெருமளவு இளைஞர்கள் வெளியேறிக் கொண்டிருக்கின்றனர். கடந்த 10 வருடங்களாக இங்கு ஆட்சி செய்யும் அரசு இளைஞர்களுக்கு எந்தத் தொழில் வாய்ப்புகளையும் உருவாக்கவில்லை. காங்கிரசும், கம்யூனிஸ்டும் எங்கெல்லாம் ஆட்சி செய்ததோ அங்கெல்லாம் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இவர்களுடைய சக்கர வியூகத்தில் கேரளாவும் சிக்கிவிட்டது. கண்டிப்பாக கேரளாவில் பாஜ கூட்டணி ஆட்சியமைக்கும். இங்கு ஆட்சிக்கு வந்தால் இதுவரை காங்கிரஸ், கம்யூனிஸ்ட் அரசுகள் செய்த ஊழல்களை வெளிச்சத்திற்கு கொண்டுவந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.

காங்கிரஸ் பாஜவின் பி டீம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கூறுகின்றனர். ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பாஜகவின் பி டீம் என்று காங்கிரஸ் கூறுகிறது. ஆனால் உண்மையில் கேரளாவில் ஏ டீமாக செயல்படுவது பாஜ மட்டும் தான் என்று அவர்கள் இருவரும் சம்மதிக்கின்றனர். காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கூட்டணியினர் பாஜவை மட்டும்தான் குறி வைக்கின்றனர். அவர்கள் இருவரும் பாஜவை பார்த்து மட்டும் தான் பயப்படுகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.
இதன் பிறகு திருச்சூர் சென்ற பிரதமர் மோடி அங்கு நடந்த ரோடு ஷோவில் கலந்துகொண்டார்.

Related Stories: