மேற்கு ஆசியா போரால் உருவாகி உள்ள சவாலான சூழலை எதிர்கொள்ள மக்கள் ஒன்றிணைய வேண்டும்: பிரதமர் மோடி அழைப்பு

புதுடெல்லி: மேற்கு ஆசியா போரால் உருவாகி உள்ள சவாலான சூழலை வெற்றிகரமாக கடந்து வர அனைத்து மக்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டுமென பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார். பிரதமர் மோடி தனது மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான ‘மன் கி பாத்’தில் நேற்று பேசியதாவது: மார்ச் மாதமானது உலகளாவிய அளவில் பல்வேறு கொந்தளிப்புகளும் மாற்றங்களும் நிறைந்த மாதமாக அமைந்திருந்தது. கொரோனா தொற்றின் காரணமாக நீண்ட காலமாக உலகம் முழுவதும் எண்ணற்ற பிரச்னைகள் எதிர்கொண்டதை நீங்கள் நினைவில் வைத்திருப்பீர்கள்.

கொரோனாவிலிருந்து மீண்ட பிறகு, உலகம் முன்னேற்றப் பாதையில் முன்னோக்கிச் செல்லும் என நாம் அனைவரும் எதிர்பார்த்திருந்தோம். ஆனால், உலகின் பல்வேறு பகுதிகளில் போர் ஏற்பட்டுள்ளது. ‘‘உண்மையில், கொரோனா நெருக்கடியிலிருந்து மீண்ட பிறகு, உலகம் புதுப்பிக்கப்பட்ட முன்னேற்றப் பாதையில் முன்னோக்கிச் செல்லும் என்று நாம் அனைவரும் எதிர்பார்த்திருந்தோம்,’’ என்று மோடி கூறினார்.

எனினும், உலகின் பல்வேறு பகுதிகளில் போர் மற்றும் மோதல் சூழல்கள் தொடர்ந்து எழுந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். நமது அண்டை மண்டலத்தில் கடந்த ஒரு மாதமாக கடுமையான போர் நடைபெற்று வருகிறது. அங்கு வசிக்கும் ஒரு கோடிக்கும் அதிகமான இந்தியர்களுக்கு தேவையான அனைத்து வகையான உதவிகளையும் வழங்கி வரும் வளைகுடா நாடுகளுக்கு எனது ஆழ்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேற்கு ஆசியா பிராந்தியமானது இந்தியாவின் எரிசக்தி தேவைகளுக்கான முக்கிய மையமாக திகழ்கிறது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விநியோகம் சீர்குலைவதால் உலகளாவிய அளவில் நெருக்கடி உருவாகி வருகிறது.  நமது உலகளாவிய உறவுகள், பல்வேறு நாடுகளிடமிருந்து நமக்குக் கிடைக்கும் ஆதரவு மற்றும் கடந்த பத்தாண்டுகளில் நாடு ஈட்டியுள்ள வலிமைகள் ஆகியவை, இத்தகைய சவாலான சூழல்களைத் துணிச்சலுடன் எதிர்கொள்ள இந்தியாவிற்குப் பேருதவியாக அமைந்துள்ளன.

இது நிச்சயமாகவே சவால்கள் நிறைந்த காலமாகும். நாட்டு மக்கள் அனைவரையும் நான் மீண்டும் ஒருமுறை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன். நாம் அனைவரும் ஒற்றுமையுடன் இணைந்து இந்த சவாலை வெற்றிகரமாக கடந்து செல்ல வேண்டும். அதே சமயம், இந்த நெருக்கடியை அரசியலாக்க முயல்பவர்கள் அச்செயலிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும். ஏனெனில் இது 140 கோடி மக்களின் நலன் சார்ந்த முக்கிய பிரச்னை. இங்கு சுயநல அரசியலுக்கு எவ்வித இடமும் இல்லை. அனைத்து மக்களும் விழிப்புடன் இருக்க வேண்டும்.

வதந்திகளால் திசைதிருப்பப்படாமல் இருக்க வேண்டும். அரசாங்கம் தொடர்ந்து வழங்கும் அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே நம்புங்கள். அதன் அடிப்படையில் உங்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள். கடந்த காலங்களில் ஏற்பட்ட நெருக்கடிகளை நாம் கூட்டு வலிமையின் துணையோடு வெற்றிகரமாக கடந்து வந்ததைப் போல இம்முறையும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த கடினமான சூழலில் இருந்து வெற்றிகரமாக மீண்டு வருவோம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

* சர்க்கரை பயன்பாட்டை குறைக்க கோரிக்கை
உடல் பருமன் மற்றும் உணவு பழக்கத்தால் ஏற்படும் நோய்களிலிருந்து தற்காத்துக் கொள்ள மக்கள் தங்கள் உட்கொள்ளும் சர்க்கரை அளவையும், சமையல் எண்ணெய் பயன்பாட்டை 10 சதவீதமும் குறைக்க பிரதமர் மோடி மன் கி பாத்தில் வலியுறுத்தினார். இத்தகைய சிறிய முயற்சிகளை மக்களை நோய்களில் இருந்து பாதுகாக்கும் என அவர் அறிவுறுத்தி உள்ளார்.

Related Stories: