அனல் பறக்கும் புதுச்சேரி; ஏப்.3ல் மோடி பிரசாரம்; 5ம் தேதி விஜய் ரோடு ஷோ: 6ல் அமித்ஷா வருகை

புதுச்சேரி மாநில சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 9ம் தேதி நடக்கிறது. இதற்காக ஒவ்வொரு கட்சி வேட்பாளர்களும் தினமும் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று (30ம் தேதி) மாலை 5.30 மணிக்கு தேஜ கூட்டணி கட்சியினருடன் எனது வாக்குச்சாவடி, வலிமையான வாக்குச்சாவடி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் பங்கேற்று உரையாற்றுகிறார்.

இதன் பின்னர் ஏப்.3ம் தேதி புதுச்சேரிக்கு வரும் மோடி, ரோடு ஷோவில் பங்கேற்று பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். இதுபோல், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் ஏப்ரல் 6ம் தேதி புதுச்சேரியில் பிரசாரம் செய்கிறார். புதுச்சேரி மாநிலத்தில் 28 தொகுதிகளில் தவெக வேட்பாளர்களும், உருளையன்பேட்டை, தட்டாஞ்சாவடி ஆகிய 2 தொகுதிகளில் சுயேச்சை எம்எல்ஏ நேருவின் நேயம் மக்கள் கழகமும் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.

இவர்களை ஆதரித்து வரும் ஏப்ரல் 5ம் தேதி புதுச்சேரியில் தவெக தலைவர் விஜய் ரோடு ஷோ பிரசாரம் நடத்த, கட்சியின் மாநில தலைமை முடிவெடுத்துள்ளது. இதற்கான அனுமதி கேட்டு, சட்டம் ஒழுங்கு சீனியர் எஸ்பியிடம் நிர்வாகிகள் நேற்று முன்தினம் மனு அளித்துள்ளனர்.

இதற்கிடையில் புதுவையில் உள்ள 23 தொகுதியிலும் பிரதான வேட்பாளர்கள் முதல் அனைத்து வேட்பாளர்களும் வீதி வீதியாக நடந்து சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர். திரும்பும் திசையெல்லாம் வாக்கு கேட்கும் பிரசாரம் ஒலித்துக் கொண்டு இருக்கிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் 9 நாட்கள் உள்ள நிலையில் கோடை வெயிலையும் தாண்டி அனல் பறக்கும் பிரசாரம் தீவிமடைந்துள்ளது.

Related Stories: