டிட்லாகர்: ஒடிசா மாநிலத்தின் ராம நவமி ஊர்வலத்தில் பாஜக எம்எல்ஏ துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம் பலாங்கிர் மாவட்டம் டிட்லாகரில் நேற்று முன்தினம் ராம நவமி ஊர்வலம் நடைபெற்றது. அப்போது, டிட்லாகர் தொகுதி பாஜக எம்எல்ஏ நவீன் குமார் ஜெயின் (58), தனது பாதுகாப்பு அதிகாரியான பிரேமா சந்த் நாக்கிடமிருந்து கைத்துப்பாக்கியை வாங்கி, சினிமா பாணியில் வானத்தை நோக்கி சுட்டார். குழந்தைகள் மற்றும் முதியவர்கள் என நூற்றுக்கணக்கான பக்தர்கள் கூடியிருந்த பொது இடத்தில், இத்தகைய ஆபத்தான செயலில் அவர் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து எம்எல்ஏ நவீன் குமார் ஜெயின் கூறுகையில்,
‘ஊர்வலத்தில் பங்கேற்றவர்களை உற்சாகப்படுத்தவே அவ்வாறு செய்தேன். நான் பயன்படுத்தியது ஒரு பொம்மை துப்பாக்கி தான். பொதுமக்களை அச்சுறுத்தும் நோக்கம் எனக்கு இல்லை’ என்று தெரிவித்தார்.இருப்பினும், பொது இடத்தில் இத்தகைய விபரீத செயலைத் தடுக்கத் தவறியதற்காக பாதுகாப்பு அதிகாரி பிரேமா சந்த் நாக்கை போலீசார் சஸ்பெண்ட் செய்துள்ளனர். மேலும், எம்எல்ஏ நவீன் குமார் ஜெயின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ததோடு, சம்பந்தப்பட்ட துப்பாக்கியையும் பறிமுதல் செய்துள்ளனர். இதற்கிடையே, ஆளும் பாஜக அரசு சட்ட ஒழுங்கை சீர்குலைப்பதாக எதிர்க்கட்சியான பிஜூ ஜனதா தளம் விமர்சித்துள்ளது.
