திருமணமானவருடன் விவாகரத்து பெறாமல் ‘லிவ்-இன்’ உறவு ஜோடிக்கு பாதுகாப்பு அளிக்க முடியாது: அலகாபாத் உயர் நீதிமன்றம் அதிரடி

அலகாபாத்: திருமணமான நபர்கள் தங்களது வாழ்க்கை துணை உயிருடன் இருக்கும்போது, விவாகரத்து பெறாமல் மற்றொருவருடன் சேர்ந்து வாழ்வது சட்டப்படி செல்லாது என்று நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒரு ஆணும், பெண்ணும் வெவ்வேறு நபர்களை திருமணம் செய்திருந்தனர். பின்னர் இருவரும் தங்களது சட்டபூர்வமான வாழ்க்கை துணையை பிரிந்து, ஒருவருக்கொருவர் கணவன் – மனைவியாக ‘லிவ்-இன்-ரிலேஷன்ஷிப்’ முறையில் ஒன்றாக வசித்து வந்தனர். தங்களது இந்த உறவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களால் உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி, தங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கக் கோரி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் அவர்கள் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி விவேக் குமார் சிங், ‘மனுதாரர்கள் ஏற்கனவே திருமணம் ஆனவர்கள். அவர்களது கணவன் அல்லது மனைவி உயிருடன் இருக்கும்போது, முறையான நீதிமன்றத்தின் மூலம் விவாகரத்து பெறாமல் மூன்றாவது நபருடன் சேர்ந்து வாழ்வதற்கு சட்டப்படி அனுமதி அளிக்க முடியாது. சுதந்திரத்திற்கான உரிமை அல்லது தனிநபர் சுதந்திரம் என்பது முழுமையானது அல்ல. ஒருவரின் சுதந்திரம் என்பது மற்றொருவரின் சட்டபூர்வமான உரிமை தொடங்கும் இடத்தில் முடிந்துவிடுகிறது.

திருமணமான ஒருவருக்கு தனது துணையின் இல்லற சுகத்தைப் பெறும் சட்டபூர்வ உரிமை உள்ளது. தனிநபர் சுதந்திரம் என்ற பெயரில் அந்த உரிமையை பறிக்க முடியாது. சட்டத்திற்கு விரோதமான செயல்களுக்கு பாதுகாப்பு கோரி ‘மேண்டமஸ்’ உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்க முடியாது. எனவே, முறையான விவாகரத்து இன்றி இவ்வாறு ‘லிவ்-இன்-ரிலேஷன்ஷிப்’ முறையில் வாழ்பவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க நீதிமன்றம் விரும்பவில்லை’ என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.

2 நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட கருத்து
அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, சமீபத்தில் வேறொரு வழக்கில் மாறுபட்ட கருத்தை பதிவு செய்தது. ஷாஜகான்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் மற்றும் ஏற்கனவே திருமணமான ஒரு ஆண் ஆகியோர் தங்களுக்கு பாதுகாப்பு கோரி மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜே.ஜே.முனீர் மற்றும் தருண் சக்சேனா ஆகியோர் அடங்கிய அமர்வு, ‘சட்டத்தையும் ஒழுக்கத்தையும் தனித்தனியாக பார்க்க வேண்டும். ஒரு திருமணமான ஆண், மற்றொரு வயது வந்த பெண்ணின் சம்மதத்துடன் அவருடன் வசிப்பது குற்றமாகாது. மக்களின் சமூக மற்றும் தார்மீக கருத்துகளின் அடிப்படையில் நீதிமன்றம் செயல்பட முடியாது’ என்று தெரிவித்தனர். மேலும், அந்த ஜோடியை கைது செய்ய இடைக்கால தடை விதித்த நீதிபதிகள், அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது ஷாஜகான்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டின் தனிப்பட்ட பொறுப்பு என்றும் உத்தரவிட்டனர். ஒரே நீதிமன்றத்தில் தனி நீதிபதி மற்றும் இரு நீதிபதிகள் அமர்வு வழங்கிய இந்த மாறுபட்ட தீர்ப்புகள் தற்போது சட்ட வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: