கொல்கத்தா: மேற்குவங்க மாநிலத்தின் 294 பேரவை தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 23, 29 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில் கொல்கத்தாவில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த ஒன்றிய அமைச்சர் அமித் ஷா திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சிக்கு எதிரான குற்றப்பத்திரிகையை வௌியிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமித் ஷா, “அசாமில் பாஜ ஆட்சிக்கு வந்த பிறகு ஊடுருவல் முடிவுக்கு வந்து விட்டது. இப்போது மேற்குவங்கம் மட்டுமே ஊடுருவல்காரர்கள் நாட்டுக்குள் நுழையும் வழியாக உள்ளது.
மேற்குவங்க எல்லை வழியாக சட்டவிரோதமாக குடியேறுவது தேசிய பாதுகாப்புக்கு மிகப்பெரிய கவலையாக மாறி உள்ளது. மேற்குவங்க தேர்தல் அந்த மாநிலத்துக்கு மட்டுமல்ல, முழு நாட்டுக்கும் முக்கியமானது. நாட்டின் முழு பாதுகாப்பும் இந்த தேர்தலுடன் இணைக்கப்பட்டுள்ளது. எல்லையோர பகுதிகளில் வேலிகள் அமைக்க திரிணாமுல் அரசு நிலம் வழங்கவில்லை. இதற்கு காரணம், ஊடுருவல்காார்களின் வாக்கு வங்கியை உருவாக்க திரிணாமுல் காங்கிரஸ் விரும்புகிறது.
மேற்குவங்கத்தில் மே 6ம் தேதி பாஜ ஆட்சி அமையும். ஆட்சி அமைத்த 45 நாள்களுக்குள் எல்லையில் வேலி அமைக்க தேவையான நிலத்தை ஒன்றிய அரசுக்கு ஒதுக்கி, வேலிகளை அமைத்து, ஊடுருவல்களை தடுப்போம்” என்று தெரிவித்தார்.
