2021 தேர்தலில் ஹீரோ என்று சொன்னார்கள் இப்போது ஹீரோ-ஹீரோயின் வாக்குறுதிதான் தேர்தல் அறிக்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி

சென்னை: 2021 தேர்தலில் ஹீரோ என்று சொன்னார்கள். இப்போது ஹீரோ-ஹீரோயின் வாக்குறுதிதான் திமுக தேர்தல் அறிக்கை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தேர்தல் அறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார். பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில் வருமாறு: வருமான வரி செலுத்தாத இல்லத்தரசிகளுக்கு கூப்பன் வழங்கப்படும் என்று சொல்லி இருக்கிறீர்கள். அப்படி என்றால் எவ்வளவு இல்லத்தரசிகள் வருவார்கள் என்ற எண்ணிக்கை இருக்கிறதா?

ஏறக்குறைய 2 கோடி இல்லத்தரசிகள் வருவார்கள். அவர்களுக்கு நிச்சயம் இந்த கூப்பன் வழங்கப்படும். ஏற்கனவே நிதி பற்றாக்குறை இருந்த போதெல்லாம், மகளிருக்கு ரூ.1,000, பழைய ஓய்வூதியத் திட்டம் நாங்கள் சொன்ன போது இது சாத்தியம் இல்லை என்று பலர் சொன்னார்கள். அதனையெல்லாம் நிறைவேற்றி காட்டியிருக்கிறோம். இப்போதும் சிலர் உங்கள் சந்தேகத்தின் அடிப்படையில் கேட்கலாம். நிச்சயம் நிறைவேற்றுவோம்.

பொருளாதார வளர்ச்சியில் நம்பர் ஒன் மாநிலம் என்ற பெயரை எடுத்துள்ளோம். அதனால்தான் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு ரூ.1,000, லேப்டாப், காலை உணவுத் திட்டம் என சொல்லாத பல திட்டங்களையும் நிறைவேற்றியுள்ளோம். அதனால் சொல்லப்பட்டிருக்கும் இந்த திட்டங்கள் எல்லாம் நிச்சயம் நிறைவேற்றப்படும். சந்தேகம் வேண்டாம்.

பிற கட்சிகள் பணம் கொடுப்பதாக அறிவித்து இருக்கும் போது, நீங்கள் கூப்பன் கொடுக்க இருக்கிறீர்களே?
மக்கள் விரும்பி என்ன வேண்டுமோ அதை வாங்கி கொள்ளலாம் என்பதற்குதான் கூப்பன் வழங்குகிறோம். 2021 தேர்தலில் ஹீரோ என்று சொன்னார்கள். இப்போது ஹீரோ-ஹீரோயின் வாக்குறுதிதான் திமுக தேர்தல் அறிக்கை.

* ‘ஒரே நாடு ஒரே மொழி’ என்ற திட்டத்தை ஒன்றிய அரசு கைவிட வேண்டும்
திமுக தேர்தல் அறிக்கையில் கூறியிருப்பதாவது: திராவிட மாடல் 2.0 ஆட்சியில், ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதியரசர் குரியன் ஜோசப் தலைமையிலான குழு பரிந்துரைகளை, நாடு தழுவிய விவாதப் பொருளாக்கி, ஒன்றிய அரசின் எதேச்சாதிகாரப் போக்கைத் தடுத்து நிறுத்தி, மாநில உரிமைகளை நிலைநாட்டிட, உடன்பாடான கருத்துள்ள இயக்கங்களுடன் இணைந்து செயல்பட்டு, அதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் திமுக மேற்கொள்ளும். ‘ஒரே நாடு ஒரே மொழி’ என்ற திட்டத்தை ஒன்றிய அரசு கைவிட வேண்டும்.

ஆங்கிலமும், தாய்மொழியும் கொண்ட இருமொழிக் கொள்கைக்கு மாற வேண்டும். ஆங்கிலம் நிரந்தர ஆட்சிமொழிகளில் ஒன்றாக இருக்க வேண்டும். எட்டாவது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளையும் ஆட்சிமொழியாக அறிவிக்க வேண்டும். ஆங்கிலம் மட்டுமே ஒன்றிய – மாநில அரசுகளுக்கு இடையே இணைப்பு மொழியாக இருக்க வேண்டும் என தி.மு.க. தொடர்ந்து போராடும். உயர்நீதிமன்றங்களில் அம்மாநில மொழி, நீதிமன்ற மொழியாகப் பயன்படுத்தப்பட அனுமதிக்க வேண்டும். 1971 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் மட்டுமே நிதிக்குழு பரிந்துரை செய்ய வேண்டும்.

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்பதைக் கைவிட்டு அதற்கான சட்ட முன்வரைவைத் திரும்பப் பெற வேண்டும். கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும். பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமனங்களை மாநில அரசே செய்ய வேண்டும். மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்விக்கான தேசிய நுழைவுத் தேர்வுகள் அனைத்தையும் ரத்து செய்ய வலியுறுத்துவோம். சரக்கு மற்றும் சேவை வரியின் ஒருபக்க சார்பினைக் குறைத்து கூட்டாட்சி சமநிலையை உருவாக்க வலியுறுத்துவோம். சரக்கு மற்றும் சேவை வரி வருவாயில் தற்போது மாநிலங்களுக்கு உள்ள பங்கினை 50 விழுக்காட்டிலிருந்து 70 விழுக்காடாக உயர்த்த வலியுறுத்துவோம்.

* குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் விரைவில் தண்டனை பெற்று தர கூடுதல் போக்சோ நீதிமன்றம்
திமுக தேர்தல் அறிக்கையில், பள்ளி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் முதலமைச்சர், “படியுங்கள், படியுங்கள், படிப்பில் மட்டும் கவனம் செலுத்துங்கள், உங்களது மற்ற தேவைகள் அனைத்தையும் நான் பார்த்துக் கொள்கிறேன். கல்விதான் யாராலும் பறிக்க முடியாத சொத்து” என்று சொல்லி வருகிறார். குழந்தைகளுக்குத் தாயும் – தந்தையுமாக இருக்கிறார்.

இதன் தொடர்ச்சியாக திராவிட மாடல் 2.0 ஆட்சியில். பள்ளியில் இடைநிற்றல் இல்லா மாநிலமாகத் தமிழ்நாட்டை உயர்த்துவோம். குழந்தைகள் பாதுகாப்பிற்கான சிறப்புச் சட்டம் இயற்றப்பட்டு குழந்தைநலத் தமிழ்நாடு உருவாக்கப்படும். குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை நிகழ்த்துபவர்களுக்கு விரைவில் தண்டனை பெற்றுத் தரும் வகையில் போக்சோ நிதிமன்றங்கள் கூடுதலாக உருவாக்கப்படும். குழந்தைகள் பாதுகாப்புக்கான அனைத்து அமைப்புகளும் முழு அளவில் செயல்படுவது உறுதி செய்யப்படும்.

அனைத்துக் குழந்தைகளுக்கும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் கிடைப்பதை உறுதி செய்வோம். குழந்தைத் தொழிலாளர் அறவே இல்லாத மாநிலமாகத் தமிழ்நாட்டை மாற்றுவோம். குழந்தைகளுக்குப் பாலின நீதிக்கல்வி, குழந்தை உரிமைக்கல்வி, அரசமைப்பு பற்றி அறிமுகக் கல்வி போன்றவை பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும். தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தனது கடமைகளைச் செம்மையாக நிறைவேற்றிடும் வண்ணம் உரிய முறையில் வலுப்படுத்தப்படும். குழந்தைகளுக்கான உதவி எண் 1098 செயல்பாடு உலகத்தரத்திற்கு உயர்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

* ஓய்வு பெற்ற போலீசாருக்கு நலவாரியம்
போலீஸ்துறையில் குறிப்பிட்ட கால இடைவெளியில் பல்வேறு பதவி உயர்வுகள் தாமதமின்றி வழங்கப்படும். பழைய போலீஸ் குடியிருப்புகளுக்கு பதில் புதிய குடியிருப்புகள் கட்டி தரப்படும். குடியிருப்புகளின் எண்ணிக்கையை உயர்த்தி பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஓய்வு பெற்ற போலீசாருக்காக நலவாரியம் அமைக்கப்படும் என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளது.

* புதிய கல்விக் கொள்கையை என்றும் ஏற்க மாட்டோம்
இந்தியா முழுமைக்கும் ஒரே கல்விக் கொள்கை என்பதை ஏற்காத தமிழ்நாடு போன்ற மாநிலங்களின் நிதி ஒதுக்கீட்டை சட்டத்திற்கு புறம்பாக நிறுத்தி வைக்கும் ஒன்றிய அரசின் போக்கினை தி.மு.க. தொடர்ந்து எதிர்க்கும். புதிய கல்விக் கொள்கை என்ற போர்வையில் மும்மொழிப் பாடத்திட்டத்தை அனைத்து மாநிலங்களும் ஏற்க வேண்டும் என்று எதேச்சாதிகாரப் போக்குடன் ஒன்றிய அரசு செயல்படுகிறது.

இருமொழிக் கொள்கையைக் கடைப்பிடித்து ஒன்றியத்திலுள்ள மாநிலங்களிலேயே வளர்ந்த முன்னணி மாநிலமாக உயர்ந்துள்ள தமிழ்நாட்டின் மீது இத்தகைய இந்தி மொழித் திணிப்பை நுழைக்கும் ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையை என்றும் ஏற்க மாட்டோம் என்று திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

* இடஒதுக்கீட்டை முழுமையாக நடைமுறைப்படுத்திட நடவடிக்கை
இடஒதுக்கீட்டை முழுமையாக எல்லா நிலைகளிலும் நடைமுறைப்படுத்திட அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம். உயர்நீதிமன்ற நீதியரசர்கள் நியமனத்தில் சமூகநீதியை நிலைநாட்டிட இடஒதுக்கீடு முறையைக் கொண்டு வருவதற்குத் தேவையான அரசியல் சட்டத்திருத்தம் மேற்கொள்ள ஒன்றிய அரசை வலியுறுத்துவோம்.

ஒன்றிய அரசின் உயர்பதவிகளிலும், பொதுத்துறை நிறுவனங்கள், ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., எய்ம்ஸ், தேசிய சட்டப்பள்ளிகள் போன்ற உயர்கல்வி நிறுவனங்களிலும் மண்டல் கமிஷன் பரிந்துரைப்படி இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படாத அநீதியை எதிர்ப்போம். சட்டபூர்வமாகத் தரப்பட்டுள்ள இடஒதுக்கீடு எண்ணிக்கையானது முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும்; அது தொடர்ந்து கண்காணிக்கப்படும்.

ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் ஆகிய மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை உயர்த்தப்படும். ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் பெண்களுக்கான தொழில்வாய்ப்புகளைப் பெருக்குவதற்கான திட்டங்கள் விரிவுபடுத்தப்படும்.

தமிழ்நாட்டிலுள்ள மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீடு நடைமுறையை மாற்றி, அதற்குப் பதிலாக மாநில அரசின் இடஒதுக்கீடு கொள்கையைப் பின்பற்றிட ஒன்றிய அரசை வலியுறுத்துவோம். தேசிய மக்கள்தொகைக் கணக்கெடுப்புடன் எடுக்கப்படவுள்ள சாதிவாரிக் கணக்கெடுப்பின் தரவுகளின் அடிப்படையில் உரிய பிரதிநிதித்துவம் கிடைப்பதற்கான வழிவகை செய்யப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: