முதல்வரிடம் வாழ்த்துப் பெற்ற தேமுதிக, மதிமுக வேட்பாளர்கள்

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று நேரில் சந்தித்து தேமுதிக, மதிமுக வேட்பாளர்கள் வாழ்த்து பெற்றனர். திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் மதிமுக இடம் பெற்றுள்ளது. அந்த கட்சிக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 3 இடத்தில் உதயசூரியன் சின்னத்திலும், ஒரு இடத்தில் தனிச்சின்னத்திலும் மதிமுக போட்டியிடுகிறது. அதாவது மொடக்குறிச்சி, மதுரை தெற்கு, கடையநல்லூர் தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்திலும், சீர்காழி (தனி) தொகுதியில் தனிச் சின்னத்திலும் மதிமுக களம் காண்கிறது.

அதன்படி, கடையநல்லூர்-தி.மு.ராஜேந்திரன், மொடக்குறிச்சி – செந்தில் நாதன், மதுரை தெற்கு – பூமிநாதன், சீர்காழி (தனி) – செந்தில் செல்வன் ஆகியோர் வேட்பாளர்களாக போட்டியிடுவார்கள் என்று கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். இந்த நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். அப்போது முதன்மை செயலாளர் துரை வைகோ உடன் இருந்தார். தொடர்ந்து மதிமுக வேட்பாளர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றனர்.

முன்னதாக வைகோ, துரை வைகோ ஆகியோர் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். அதே போல திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் விருத்தாசலம் தொகுதியில் கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்துக்கும், விருதுநகர் தொகுதியில் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரனும் போட்டியிடுகின்றனர். மேலும் தர்மபுரி – இளங்கோவன், சேலம் மேற்கு-அழாகபுரம் மோகன்ராஜ், ஓமலூர்-இளங்கோவன், மயிலம்- வெங்கடேசன், பல்லாவரம்-அனகை.முருகேசன், திருத்தணி – கிருஷ்ண மூர்த்தி, குடியாத்தம் (தனி)-பிரதாப், போளூர்- சரவணன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இவர்களும் நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது பொருளார் எல்.கே.சுதீஷ் எம்பி, தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி ஆகியோர் உடன் இருந்தனர். இதே போல முதல்வர் மு.க.ஸ்டாலினை, திமுக கூட்டணியில் சார்பில் சிவகங்கை தொகுதியில் போட்டியிடும் முக்குலத்தோர் புலிப்படை தலைவர் நடிகர் கருணாஸ் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

Related Stories: