போடி, மார்ச் 28: போடி தாலுகா காவல் நிலைய எஸ்.ஐ விஜய் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, போடி அருகே மேலச்சொக்கநாதபுரம் வினோபாஜி காலனி தண்ணீர் தொட்டி, வடக்கு ராஜ வீதியை சேர்ந்த ராகுல்(21) என்பவர், விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரைக் கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனர். நகை, செல்போன் பறிப்பு: போடி அருகே அணைக்கரைப்பட்டி சுபாஷ் சந்திரபோஸ் தெருவை சேர்ந்தவர் சிவஞானம்(34).
இவர் தனியார் நிதிநிறுவனத்தில் மேலாளராக உள்ளார். இவருடன் பணிபுரியும் அனீஸ்குமார் என்பவருடன் கடந்த 23ம் தேதி போடி ரெங்கநாதபுரம் மாநில நெடுஞ்சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்தபோது, காரில் வந்த மர்மநபர்கள் 5 பேர், அவர்களைத் தாக்கி செல்போன் மற்றும் 2 பவுன் செயினை பறித்து விட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து சிவஞானம், போடி தாலுகா காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து நகை பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
