ஊத்துக்கோட்டை: தமிழக-ஆந்திர எல்லை பகுதியில் ஊத்துக்கோட்டை பேரூராட்சி உள்ளது. இப்பேரூராட்சியில் வியாபாரிகள், விவசாயிகள் எனப் பல்வேறு தரப்பை சேர்ந்த சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் உள்ள அண்ணாநகர் பகுதியில் உள்ள சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் தமிழ்நாடு மதுவிலக்கு அமல் பிரிவு போலீசாருக்கு ஒரு சோதனைசாவடி மற்றும் போக்குவரத்து சோதனைசாவடி (ஆர்டிஓ செக்போஸ்ட்) என மொத்தம் 2 சோதனைசாவடிகள் உள்ளன. இதில் ஆந்திர மாநிலத்தில் உள்ள நாகலாபுரம், பிச்சாட்டூர், புத்தூர், திருப்பதி, ரேணிகுண்டா போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னைக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் போக்குவரத்து சோதனைசாவடியில் அனுமதி (பர்மிட்) வாங்கி தமிழக மற்றும் ஆந்திர பகுதிகளுக்குச் சென்று வரவேண்டும்.
மேலும், இங்குள்ள மதுவிலக்கு அமல் பிரிவு போலீசாரின் சோதனைசாவடியில், ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்படும் கஞ்சா, மலிவுவிலை மதுபானங்கள், மணல் கடத்தல் போன்றவற்றை தடுத்து பறிமுதல் செய்தல் மற்றும் சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்து உரிய நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே, ஊத்துக்கோட்டையின் மையப் பகுதியில் உள்ள அண்ணா சிலையின் இடதுபுறத்தில் இருந்து ஆந்திர மாநிலத்துக்கு செல்ல மற்றொரு வழி உள்ளது. இவ்வழியே ஆந்திர மாநிலத்தில் உள்ள சத்தியவேடு, தடா, சூளூர்பேட்டை, காளஹஸ்தி போன்ற பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
எனினும், இப்பகுதியில் ஆந்திராவில் இருந்து தமிழகத்துக்கு வரும் அனைத்து வாகனங்களும் ஊத்துக்கோட்டை வழியாகத்தான் சென்று வருகின்றன. எனினம், இப்பகுதியில் எவ்வித சோதனைசாவடியும் இல்லாததால், அவ்வழியே ஆந்திராவில் இருந்து வரும் பல்வேறு வாகனங்களில் உரிய ஆவணங்கள் இன்றி மணல் கடத்தல் மற்றும் கஞ்சா, மதுபானங்கள் உள்பட பல்வேறு போதை பொருட்கள் தமிழகத்துக்கு கடத்தி வரப்படுகின்றன. எனவே, இவற்றை தடுப்பதற்கு ஊத்துக்கோட்டை-சத்தியவேடு சாலையில் கூடுதலாக மற்றொரு சோதனைசாவடி அமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
