பங்குனி உத்திர திருவிழாவையொட்டி பழனி முருகன் கோயிலில் வழிபாட்டு கட்டணம் ரத்து: கோயில் நிர்வாகம் நடவடிக்கை

 

திண்டுக்கல்: பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு, பழனி முருகன் கோயிலில் மார்ச் 31, ஏப்ரல் 1 ,2 ம் ஆகிய மூன்று நாட்களுக்கு சிறப்பு கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டு, அனைத்து பக்தர்களும் கட்டணமின்றி (Free Darshan) சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி முருகன் கோயிலில் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழநி திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா இன்று காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஏப்.1-ம் தேதி நடைபெற உள்ளது.

சேவல், மயில், வேல், பாம்பு, சூரியன், சந்திரன் படங்கள் பொறிக்கப்பட்ட கொடிக்கு பூஜை செய்யப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது. மூலவர், உற்சவர், விநாயகர், மயில், துவார பாலகர்களுக்கு காப்பு கட்டப்பட்டது. தொடர்ந்து, மூலவர், முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

இதையடுத்து, வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமாரசுவாமி பட்டக்காரர் மடத்திற்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்றது. பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு ஈரோடு மாவட்டம் கொடுமுடி காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து, பக்தர்கள் பழநி மலைக்கோயிலில் தண்டாயுதபாணி சுவாமிக்கு அபிஷேகம் செய்து வழிபடுவது வழக்கம். அதன்படி, திரளான பக்தர்கள் இன்று அதிகாலை முதலே தீர்த்த காவடி எடுத்து வந்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.

10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் காமதேனு, ஆட்டுக்கிடா, வெள்ளி யானை, தங்க குதிரை உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். விழாவின் ஆறாம் நாளான மார்ச் 31-ம் தேதி இரவு 7 மணிக்கு மேல் திருக்கல்யாணமும், இரவு 9 மணிக்கு மேல் சுவாமி மணக்கோலத்தில் வெள்ளித்தேரில் உலா வருவார். விழாவின் முக்கிய நிகழ்வாக ஏப்.1-ம் தேதி பங்குனி உத்திரத்தன்று, நண்பகல் 12 மணிக்கு தேரேற்றம், மாலை 4.30 மணிக்கு மேல் கிரிவலப்பாதையில் தேரோட்டம் நடைபெறுகிறது. ஏப்.4-ம் கொடியிறக்குதலுடன் விழா நிறைவடைகிறது.

இந்நிலையில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு பழனியில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால், குறிப்பிட்ட நாட்களுக்கு கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அனைவருக்கும் விரைவான தரிசனம் கிடைக்கவும் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கோவிலுக்கு பக்தர்கள் பெருமளவில் திரள வாய்ப்பு இருப்பதால், கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன

Related Stories: