ராம நாமம், சைவ&வைணவ ஒற்றுமைக்கோர் உதாரணம். திருமாலின் ‘ஓம் நமோ நாராயணாய’ என்ற அஷ்டாட்சர மந்திரத்திலுள்ள ‘ரா’வும், எந்நாட்டவர்க்கும் இறைவனாம் பரமேஸ்வரனின் ‘நமசிவாய’ என்ற பஞ்சாட்சர மந்திரத்திலுள்ள ‘ம’வும் சேர்ந்து அமைந்ததே ‘ராம’நாமம். இந்த தாரக நாமத்தை, காசியில் உயிர் விடுபவர்களின் காதுகளில் தனது திருவாயாலே எடுத்துரைத்து அவர்கள் மோட்சம் பெற வழிவகுக்கிறார் சிவபெருமான்.
மற்றைய பல திருவிழாக்களைப் போல நாட்டின் ஒரு பகுதிக்குரிய திருவிழாவாக இல்லாமல், இந்தியாவில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையும் மற்றும் உலகளாவிய நிலையிலும் ஸ்ரீராமநவமி கொண்டாடப்படுகிறது. இச்சமயத்தில், தமிழ்நாட்டில் சில தலங்களில் கோயில் கொண்டு அருள்பாலிக்கும் ராமபிரானை தரிசிக்கலாமா?
மதுராந்தகம்
சென்னையிலிருந்து திண்டிவனம் பாதையில் அமைந்துள்ளது மதுராந்தகம். இங்கே, கொள்ளை அழகுடன் பேரருள் புரிகிறார் ஏரிகாத்த ராமன். பெருமழை பிடித்தொழுக, ஊரெல்லாம் வெள்ளக்காடாகிவிட்டது. மிகப் பெரிய பரப்பளவுள்ள மதுராந்தகம் ஏரியில் நீர்மட்டம் அபாய கட்டத்திற்கு உயர்ந்து ஏரியே உடைப்பெடுத்துவிடுமோ என்று மக்கள் அஞ்சி ஊரைவிட்டே வெளியேறிவிடத் துடித்தார்கள். அப்போது அந்தப் பகுதியில் கலெக்டராகப் பணியாற்றிய ஆங்கிலேய அதிகாரி செய்வதறியாது திகைத்தார். இயற்கையின் சீற்றத்துக்கு எப்படி பதில் சொல்வது, மக்களை எப்படிக் காப்பது என்று பெரும் கவலையில் ஆழ்ந்தார்.
அவருக்கு ஆட்சி நடைமுறையில் உதவி வந்த சில தமிழ் அதிகாரிகள் அவரிடம், மதுராந்தகம் ராமரை வேண்டிக்கொண்டால் அவர் அந்த அபாயத்திலிருந்து அனைவரையும் காப்பாற்றுவார் என்று யோசனை தெரிவித்தார்கள். ஆங்கிலேயருக்கு அதில் உடன்பாடில்லை. ராமர் அவர்கள் சொல்லும் அளவுக்கு அத்தனை பராக்கிரமசாலியாகவா இருப்பார்? இத்தனைக்கும் ஆன்மிக உணர்வுக்கும் அவரவர் உள்ளத்துக்கும் மட்டுமே தெரியக்கூடிய ராமர், பிறர் கண்களுக்கு வெறும் கற்சிலையாகவே காட்சியளிக்கும் அவர், எப்படி இந்த சீறும் இயற்கையைக் கட்டுப்படுத்தமுடியும்? ஒவ்வொரு விநாடிக்கும் அதன் ஆர்ப்பாட்டம் அதிகரித்துக்கொண்டே போகிறதே, மனித முயற்சிகளைப் பரிகாசம் செய்யக்கூடிய இந்த அட்டகாசத்தை கோயிலில் குடிகொண்டிருக்கும் ஒரு சிலை எப்படி தடுத்து நிறுத்த முடியும்? கலெக்டர் அலட்சியமாக அவர்களுடைய யோசனையை விலக்கினார். ‘வேறு ஏதாவது பேசுங்கள்,’ என்றுசொல்லி அவர்களை அனுப்பி வைத்தார்.
அன்றிரவு, என்ன செய்வது, எப்படிச் செய்வது என்று பரிதவித்தபடி தூக்கமே பிடிக்காமல் படுக்கையில் படுப்பதும், எழுந்து உட்காருவதும், அறையிலேயே நடப்பதும், சாளரத்தின் வழியாக கொட்டித் தீர்க்கும் மழையையும், மேலே மேலே ததும்பி, ஏரிக்கரையினின்று வெளியேற முயற்சிக்கும் தண்ணீரையும் பார்த்துப் பார்த்துப் பெருமூச்சு விட்டார். அப்போது அந்த ஏரிக்கரைமீது இரண்டு பேர் நெடிதுயர்ந்த தோற்றத்தினராய், ஒருவர்பின் ஒருவராக நடந்து வந்து கொண்டிருப்பதை மின்னல் ஒளியில் பார்த்தார், கலெக்டர்.
யார் அவர்கள்? மதுராந்தகம் கோயிலில் உள்ள சிலைகள் போலவே இருக்கிறார்களே! சிலைக்கு உயிர் வந்துவிட்டதா? இடது கையில் வில்லேந்தி, வலது கையில் அம்பு ஏந்தி, ‘போதும் இயற்கையே, உன் ஆரவாரத்தை நிறுத்து,’ என்று ஆணையிடுவதுபோல வானத்தைப் பார்த்தபடி அவர்கள் உறுதியாக நடந்து வந்து கொண்டிருந்தார்கள். என்ன அதிசயம்! மின்னல் மறைந்தது, இடி ஒடுங்கியது. கருமேகங்களோ அப்பாவியாக வெண்மை வண்ணத்துக்கு மாறின. மழை முற்றிலுமாக நின்றுவிட்டது. தேங்கிய உபரி நீரெல்லாம் பள்ளம் நோக்கிப் பாய ஏரியின் நீர் மட்டமும் ஒரு கட்டுப்பாட்டுக்கு வந்தது.
உடல் சிலிர்த்தார் கலெக்டர். உடனே தன் அதிகாரிகளைக் கூப்பிட்டார். ‘நீங்கள் சொன்னது அப்படியே உண்மை. உங்கள் ராமன், தன் இளவல் லட்சுமணனுடன் இந்த ஏரிக்கரை மீது நடந்து சென்று இயற்கையை எல்லை மீறாதபடி தடுத்து நிறுத்தியிருக்கிறார். உங்களுடைய பக்திக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்,’ என்று பெருந்தன்மையுடன் கூறியதோடு, அந்த ராமர் கோயிலை புனரமைக்கவும், அக்கோயிலின் வழிபாடுகளுக்கு எந்த இடையூறும் வராதபடியும் சில ஏற்பாடுகளைச் செய்தார்.
உடனிருந்த தமிழ் அதிகாரிகளுக்கு மகிழ்ச்சி. உடனே அவர்கள், ‘ஐயா, இந்த அற்புதம் உங்கள் பக்தியாலும் ஏற்பட்டதுதான். ஆமாம், வெள்ளம் சூழ்கிறதே, மக்கள் பரிதவிக்கிறார்களே, இவர்களைக் காப்பாற்ற வேண்டுமே என்ற இரவெல்லாம் தூங்காமல் வேதனைப் பட்டீர்களே, அந்த வேதனை வெறும் சோக உணர்வல்ல, மக்கள் நல்வாழ்வை நாடிய ஆழ்ந்த தியானம், மிகப் பெரிய யாகம். அந்த ‘பக்தி’ காரணமாகத்தான் ராமபிரானும் உங்களுக்குக் காட்சியளித்திருக்கிறார். பிறர் நலனுக்காகத் துடிதுடிக்கும் உள்ளம் எந்த மதத்துக்குச் சொந்தமானதென்றாலும், அந்த உணர்வுக்கு உரிய மரியாதை செலுத்த எந்த மதக் கடவுளும் முன்வரத்தான் செய்வார்,’ என்று சொல்லி அவரைப் போற்றினார்கள். அப்படி, உள்ளமுருக தன்னை ஒருமுறை யார் நினைத்தாலும் அவர் துயர் துடைக்க ஓடோடி வருவான் இந்த மதுராந்தக ராமன்.
திருவஹிந்திரபுரம்
தென்னாற்காடு மாவட்டத்தில் கடலூர் அருகே அமைந்துள்ள தேவனாதப் பெருமாளின் திருச்சந்நதியிலே கோயில் கொண்டிருக்கிறான் இந்த கோசலை மைந்தன். கோசலைக்குப் பிறந்தாலும், சிற்றன்னை கைகேயியின் உத்தரவுக்கு உடனே தலை வணங்கி, பெரியவர்களை மதிக்கவேண்டிய பண்பை இளைஞர்களுக்கு உணர்த்திய உத்தமன் அவன். தன் மனைவிக்குத் தான் அளித்த வரங்கள் இப்படி தன்னையே தாக்கும் என்பதை எதிர்பாராத தசரதனை கேள்விகேட்டு வேதனைப்படுத்தாமல் உடனே காடேகிய, தந்தை சொல் தாண்டாத தவப் புதல்வன் அவன்.
‘நாளை உனக்கு பட்டாபிஷேகம்,’ என்று பெருமை பொங்க, தன் தலை தடவி தகவல் தெரிவித்த தந்தையாரைப் பணிவுடன் வணங்கி, எந்த உணர்வோடு ஆசி பெற்றானோ, அதே உணர்வு சிறிதும் குறையாமல்தான், ‘நீ ஆரண்யம் புக வேண்டும், உன் தம்பி பரதன் ஆட்சி பீடத்தில் அமரவேண்டும்,’ என்று தசரதன் சொன்ன வாசகங்களை அவன் எதிர்கொண்டான். அவனுடைய தாமரை முகம், ‘பதவி’ என்றபோது பிரகாசிக்கவும் இல்லை; ‘துறவு’ என்றபோது வாடிவிடவும் இல்லை,’ என்கிறார் கம்பர். அப்படி ஒரு மந்தஹாசவதனனை திருவஹிந்திரபுரத்தில் தரிசிக்கலாம். இந்த ராமனிடம் பெரிதும் ஈடுபாடு கொண்டிருந்தார், ஸ்வாமிதேசிகன்.
ராமனுடைய வீரதீர பராக்கிரமங்களை நினைத்து நினைத்து உருகி அந்த சம்பவங்களில் அப்படியே தோய்ந்து போனவர் அவர். எங்கே பணிவு காட்டவேண்டுமோ அங்கே பணிவையும், எங்கே வீரத்தைக் காட்ட வேண்டுமோ அங்கே வீரத்தையும் காட்டி, மனித குலத்துக்கு ஒரு முன்னோடியாகத் திகழ்ந்தவன் அவன். சக்கரவர்த்தித் திருமகனாக இருந்தாலும், சாமானியர்களும் போற்றும் பெருந்தகையாக விளங்கியவன். அத்தகைய பண்பாளனின் காதையை, ‘ரகுவீரகத்யம்’ என்ற மிகவும் பிரபலமான வடமொழி பாடல் தொகுப்பாக ஸ்வாமிதேசிகனைப் பாடச் செய்தவன்.
எத்தனைபேர் எத்தனை வகையாகவும் ராமாயணத்தைச் சொன்னாலும், அதைக் கேட்பதில் யாருக்கும் அலுப்போ, அயர்ச்சியோ ஏற்படுவதில்லை என்றால் அதுதான் ராமனின் தனிச் சிறப்பு. அப்படி சிறப்பு பெற்ற செல்வன் கோயில் கொண்டிருக்கும் தலம்தான் திருவஹிந்திரபுரம்.
திருவல்லிக்கேணி
சென்னையின் புகழுக்கு ஒரு காரணமாக விளங்குகிறது திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி திருக்கோயில். ஆமாம், 108 திவ்ய தேசங்களில் இக்கோயிலும் ஒன்று. திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற அற்புதத் தலம். இந்தத் திருக்கோயிலில் எழுந்தருளியுள்ளார் ராமன். தனியொரு வனாகத் தன்னை எப்போதும் அடையாளம் காட்டிக்கொள்ளாத இந்தப் பெருந்தகை, இக்கோயிலிலும், சீதை லட்சுமணன் சகிதமாகவே தரிசனம் தருகிறான். அவர்கள் மட்டுமா, சகோதரர்கள் பரதன், சத்ருக்னனுடனும் சேர்ந்து குடும்ப சகிதமாய் காட்சியளிக்கிறான்.
யாரையும் விலக்காத, அனைவரையும் அரவணைத்துக்கொள்ளும் பண்பு கொண்டவன் ராமன். தன் சிற்றன்னை சுமித்திரையின் மகனான லட்சுமணனை எப்போதும் தன்னுடனேயே இருத்திக்கொண்டான். கைகேயியின் மகனான பரதன், தனக்கு மாற்றாக அயோத்தியை ஆளப்போகிறான் என்று அறிவிக்கப்பட்டபோதும் அவன் மீது எந்த துவேஷமும் கொள்ளாமல் அவனுக்காக நாட்டையே விட்டுக்கொடுக்க முன்வந்தான். சுமித்திரையின் இன்னொரு மகனான சத்ருக்னன், பரதனோடு இணைந்திருந்தாலும், தனக்கும் அவன் தம்பிதான் என்று அவனையும் விட்டுக் கொடுக்காத பேரருளாளன் அவன். அதனால்தான் இந்த திருவல்லிக்கேணி திருத்தலத்தில் அவன் பரதன், சத்ருக்னனுடன் சேர்ந்து தரிசனம் தருகிறான்.
இப்படி சகோதரர் சகிதமாக ராமன் காட்சி தருவதற்கு இத்தலத்தில் இன்னொரு காரணமும் இருக்குமோ என்று பெரியவர்கள் திகைப்புடன் ஊகிப்பார்கள். அது என்ன காரணம்? இந்தத் திருத்தலத்தில், பார்த்தசாரதி சுவாமி கோயிலுக்கருகே அமைந்துள்ளது ‘கோமுட்டி பங்களா’ என்று ஒரு பகுதி. இது, அயோத்தி ராமனின் சொத்து என்கிறார்கள்! அதாவது தனக்கு உரியதான ஒரு சொத்து தனக்கு மட்டுமல்ல, தன் ரத்த பந்தங்களுக்கும் உரியதுதான் என்று விளக்குவதுபோல, ராமன் தன் சகோதரர்களான பரதன், லட்சுமணன், சத்ருக்னனுடன் சேர்ந்து இங்கே குடிகொண்டிருக்கிறானோ? அப்படித்தான் எண்ணத் தோன்றுகிறது. தனக்கில்லாவிடினும் பிறர்க்கு அளித்திடும் பெருந்தகையாளன் அல்லவா ராமன்?
பிரபுசங்கர்
