மயிலாப்பூர் கபாலீசுவர் ஆலயத்தில் நடைபெறும் அறுபத்துமூவர் விழா அறுபத்துமூவர் விழா என்றதுமே அன்பர்கள் அடியவர்கள் அனைவரின் நெஞ்சிலும் தோன்றும் காட்சி சென்னை மயிலாப்பூர் அருள்மிகு கபாலீசுவரர் ஆலயத்தில் நடைபெறும் அறுபத்து மூவர் விழாவேயாகும். இது பங்குனி மாதம் உத்திர நாளைக் கடை நாளாகக் கொண்டு ஆலயத்தில் நடத்தப்படும் பெருந்திருவிழாவின் போது எட்டாம் நாள் மாலையில் நடத்தப்படுகிறது. மாலையில் விநாயகர் முன்செல்ல, பெரிய வெள்ளி விமானத்தில் கபாலீசுவரரும் விமானத்தில் பின்னால் கற்பகவல்லியும் பவனிவர, சிங்கார வேலவரான முருகனும், சண்டீசரும் தொடர்ந்து வர, விழா நடைபெறுகிறது. அடியவர்கள் அவரைப் பார்த்த வண்ணமே வீதிகளில் எழுந்தருளுகின்றனர். கேடயம் என்னும் சப்பரங்களில் ஒன்றிற்கு நால்வர் வீதம் 18 சப்பரங்களில் அவர்கள் பவனி வருகின்றனர். இச்சப்பரங்களுடன் திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரும் தனித் தனியாகப் பெரும் பல்லக்குகளில் உடன் வருகின்றனர்.
இத்தலத்து அடியவரான சிவநேசரும் அவரது மகளும் பாம்பு தீண்டி மாண்டு திருஞானசம்பந்தரால் உயிர்ப்பிக்கப்பட்டவளுமான அங்கம்பூர்பாவையாரும் தனித்தனியே விமானங்களில் பவனி வருகின்றனர். இவர்களுடன் முண்டகக் கண்ணி அம்மன், கோலவிழியம்மன், வாசுகி உடனாய திருவள்ளுவர், திரௌபதி அம்மன் எனப் பல்வேறு தெய்வங்களும் பவனி வருகின்றனர். சிந்தாதிரிப்பேட்டையிலிருந்து திருமுருகன் இவ்விழாவுக்கு எழுந்தருளி வீதி வலம் காண்கிறான்.
பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கூடும் விழாவாக இது அமைகிறது. விழாவில் தண்ணீர்ப் பந்தல் என்னும் பெயரில் அரங்குகள் அமைக்கப்படுகின்றன. இவற்றில் மக்கள் நன்மைக்காக நீர், மோர், பானகம், ஐஸ்கிரீம், பிரிஞ்சி, புளி, தயிர் சாதம், பொங்கல் முதலான உணவுப் பொருட்கள் பிஸ்கட், சாக்லெட், மிட்டாய்கள் போன்ற திண்பண்டங்களை அவரவர் சக்திக்கேற்ப வழங்குகின்றனர். குதூகலமான விழாவாக இது அமைகிறது.
இவ்விழா நாளில் காலையில் திருஞான சம்பந்தர் பதிகம் பாடி, எலும்பும் சாம்பலுமாக எஞ்சியிருந்த பூம்பாவையை உயிர்ப்பிக்கும் ஐதீக விழா நடத்தப்படுகிறது. அங்கம் பூம்பாவை திருவுருவத்தை விமானத்தில் வைத்து அலங்கரித்துத் திருக்குளத்தின் மேற்குப் பகுதியில் உள்ள மண்டபத்தில் எழுந்தருள வைத்து திரையிட்டு வைத்திருப்பர். சிவநேசன் செட்டியர் திருஞான சம்பந்தரை எதிர்கொண்டழைக்கும் நிகழ்ச்சியும் சம்பந்தர் அவ்விடம் வந்து மட்டிட்ட புன்னை எனத் தொடங்கும் பாசுரத்தைப் பாடும் நிகழ்ச்சியும் நடைபெறும். ஓதுவார் அந்தப் பதிகத்தை முழுவதுமாகப் பாடுவார். அத்துடன் பெரிய புராணத்தில் இந்நிகழ்ச்சி தொடர்பாக உள்ள செய்யும்களும் ஓதப்படும். பாடல்கள் முடிந்ததும், திரையை விலக்கி அங்கம்பூம் பாவைக்கு தீபாராதனை செய்யப்படும். அப்போது அங்கு மண் சட்டியில் வைக்கப்பட்டிருக்கும் நாட்டுச்சர்க்கரையை எடுத்து மக்களுக்குப் பிரசாதமாக வழங்குகின்றனர். பின்னர், அங்கம்பூம்பாவை, சிவநேசர், திருஞானசம்பந்தர் ஆகிய மூவரும் வடக்கு மாட வீதியாக வலம் வந்து திருக்கோபுர வாயிலில் நிற்பர். பிற்பகல் இவர்களுக்குக் கபாலீசுவரர் காட்சி கொடுக்கும் விழா நடைபெறும். அதைத் தொடர்ந்தே அறுபத்து மூவர் விழா
கொண்டாடப்படுகிறது.
