திருக்கோவலூர் என்று ஒரு ஊர். உங்களுக்கு இப்பொழுது ஒரு சந்தேகம் வரும் திருக்கோவிலூர் என்று தானே சொல்கிறார்கள் நீங்கள் திருக்கோவலூர் என்று எழுதுகிறீர்களே என்று கேட்கலாம். நான் சொல்லப் போகும் விஷயம் திருக்கோவலூர் அடிப்படையில அமைவதால் திருக்கோவலூர் என்று எழுதியிருக்கிறேன். வைணவத்தில் கோவலன் (ஆயன்) அருள் தரும் இடம் என்பதால், திருக்கோவலூர் என்றுதான் சொல்வார்கள். சைவத்தில் திருக்கோவிலூர் என்று சொல்லும் மரபு இருக்கிறது. இப்பொழுது விஷயத்துக்கு வருவோம். ஒரு மழை நாள் இரவு. மூன்று பெரியவர்கள் (ஆழ்வார்கள்) திருக்கோவலூரில் இறைவனைக் காண வேண்டும் என்று ஒன்றாகக் கூடுகிறார்கள். இருட்டு என்றால் அப்படி ஒரு இருட்டு. ஒரு விளக்கு ஏற்ற வேண்டும் என்று முதல் ஆழ்வார் தமிழ் விளக்கு ஏற்றுகின்றார்.
‘‘வையம் தகளியா’’ என்று பாசுரம் தொடங்குகிறது. அடுத்து ஒரு ஆழ்வார் இன்னொரு விளக்கு ஏற்றுகின்றார்.
‘‘அன்பே தகளியா’’ என்று பாசுரம் தொடர்கிறது. முதல் பாசுரம் புற இருளை அகற்றியது. அடுத்த பாசுரம் அக இருளை அகற்றியது. புறயிருள் அகயிருள் இரண்டும் அகன்ற பின் அந்த இடம் ஒளிமயமாகத் திகழ்ந்தது. அந்த ஒளியில் அவர்கள் தெய்வக் காட்சி கண்டனர்.
‘‘திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்’’ என்ற பாசுரம் பிறந்தது. ஒவ்வொரு ஆழ்வாரும், நூறு நூறு பாசுரங்களாகத் தொடந்து பாடி நிறைவு செய்தார்கள். இதுதான் வைணவ சமய இலக்கியத்தின் மிக முக்கிய நூலான நாலாயிர திவ்ய பிரபந்தத்தின் முதல் மூன்று அந்தாதிகள் பிறந்த கதை. இனி விஷயத்துக்கு வருவோம். ஆன்மிக முன்னேற்றத்தைச் சொல்லித்தரும் பாசுரங்கள் இவை. ஆன்மிகம் என்பது தெய்வதரிசனம் காண்பது. தெய்வத்தைத் தரிசிக்க வேண்டும் என்றால் முதலில் புற இருள் அகல வேண்டும். அது மட்டும் அகன்று விட்டால் போதுமா? போதாது. மன இருள் எனப்படும் அக இருளும் அகல வேண்டும். உள்ளிருக்கும் பரமாத்மா வெளியிலேயே காட்சி தருவதும் வெளியிலே உலகமாக
வியாபித்து இருக்கக்கூடிய பரிபூரணமான பிரம்ம சொரூபம் உட்புறம் காட்சி தருவதுமான காட்சிதான் மெய்யியல் காட்சி.
எது வெளியிலே காண்கிறோமோ, அது உள்ளேயும் காண வேண்டும் எது உள்ளே பார்க்கிறோமோ, அது வெளியிலேயும் பார்க்க வேண்டும். சிலருக்கு வெளிக்காட்சி பரவசமாக இருக்கும். அபிஷேகம் என்ன, அலங்காரம் என்ன, உற்சவங்கள் என்ன, ஊர்வலங்கள் என்ன என்று உருகி உருகிப் பார்ப்பார்கள். ஆனால், உள்ளம் தெளிவின்றி இருளடைந்து இருப்பதால், அவர்களால் யாரிடமும் அன்பாக நடந்து கொள்ள முடியாது. யாரிடமும் அடக்கமாக நடந்து கொள்ளத் தெரியாது. தன் உள்ளே தெய்வம் இருப்பதையும் அவர்களால் அறிய முடியாது.
விக்கிரகமாக மட்டுமே தெய்வம் இருக்கிறது என்கிற முடிந்த முடிவுக்கு வந்து விடுவார்கள். எனவேதான் அந்த இரண்டு விளக்குகளையும் அடுத்தடுத்து ஆழ்வார்கள் ஏற்றினார்கள். முழுமையான இறைவனுடைய காட்சி. அனுபவத்தைக் கண்டார்கள். இறைவன் எல்லா இடத்திலும் இருக்கிறார். எல்லார் மனத்திலும் இருக்கிறார். எல்லா இடத்திலும் இருப்பதை அறிந்து கொள்வதற்கு இயலாமல் நம்முடைய அறியாமை தடை செய்கிறது. உள்ளே இருக்கும் இறைவனை அறிய முடியாமல் நம்முடைய அகங்காரமும், மமகாரமும், பொறாமை, கோபம் முதலிய உணர்ச்சிகளும் தடை செய்கின்றன.
நான் கண்ட காட்சி ஒன்று. தெய்வத்துக்கு மிக அருகாமையில் நின்று கைங்கரியம் செய்யக் கூடிய வாய்ப்பினைப் பெற்ற ஒரு பெரியவர். வேதங்களைச் சொல்வது என்ன? பாடுவது என்ன? விளக்கங்களைச் சொல்வது என்ன? அடடா… நிபுணர். ஒரு முக்கியமான நபர் ஒரு மாலை எடுத்துக் கொண்டு வருகின்றார். உடனே இவர் ஓடிப்போய் அவரிடத்தில் வணக்கமாகப் பேசி, மிகவும் மரியாதையாக அவரை அழைத்து வந்து, அவர் தந்த மாலையை இறைவனுக்குச் சூட்டி, மறுபடியும் அவருக்கு ஒரு மாலையைப் போட்டு அவர் போகின்றவரை, வேறு யாரும் தரிசனம் செய்ய முடியாத அளவுக்கு இடைஞ்சல் செய்து அவரிடம் நல்ல பெயர் வாங்கிக் கொண்டார்.
இங்கு கவனிக்க வேண்டும். இறைவனிடம் நல்ல பெயரை வாங்குவதைவிட, முக்கிய பிரமுகரிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதே அவருடைய நோக்கமாக இருந்தது. சரி போகட்டும். இப்பொழுது ஒரு வயதான அம்மாள் கையில் பத்து அல்லது பதினைந்து ரூபாய் மதிப்புள்ள பூவை வைத்துக் கொண்டு சாமி என்று அழைத்தார். இதுவரை புன்னகையுடன் பேசிய அவருடைய முகத்தோற்றம், சட்டென்று மாறியது. எரித்து விடுவதைப் போல் அந்த அம்மாவைப் பார்த்தார். என்ன என்பது போல் கண்ணாலேயே கேள்வி கேட்டார்.
‘‘சாமிக்கு இந்த பூ’’ என்று அந்த அம்மையார் பவ்யமாக சற்று வளைந்து கைகளால் கொடுக்கின்ற பொழுது, அந்த அம்மாள் கொடுத்த பூவை தன் கையால் வாங்குவதற்குகூட அவர் விரும்பாமல்,
“அங்கே வைத்துவிட்டு போ…’’ என்று குரலிலும் தன்மை இல்லாமல், அலட்சியமும் கட்டளையிடும் தொனியும் நிறைந்த உரத்த குரலில் பேசிவிட்டுப் போய்விட்டார். அந்த அம்மாவுக்கு ஒரு மாதிரியாக ஆகிவிட்டது. அவர் சட்டென்று விலகி வேறு ஒருவரிடம் கொடுத்து பூவோடு பூவாகச் சேர்த்துவிட்டு, சுவாமிக்குப் பெரிதாக ஒரு கும்பிட போட்டுவிட்டுச் சென்றுவிட்டார். இது போல பல சம்பவங்களை நீங்களும் பல்வேறு இடங்களில் பல்வேறு விதமாகப் பார்த்திருக்கலாம்.
புற இருளும் அகலாத, அக இருளும் அகலாத ஒருவர், என்னதான் வேத பாராயணத்தில் வல்லவராக இருந்தாலும் விளக்கம் சொல்வதில் வித்வானாக இருந்தாலும், எப்படி நடந்து கொள்கிறார் என்று பார்த்தோம். பூஜை செய்வது எப்படி என்று பலர் புத்தகம் போட்டு இருக்கிறார்கள். வைணவமாக இருந்தாலும், சைவமாக இருந்தாலும் இப்படித்தான் பூஜை செய்ய வேண்டும்; இந்தப் பாடல்களை இந்தந்த சந்தர்ப்பங்களில் பாட வேண்டும். அபிஷேகம் செய்யும் பொழுது என்ன சொல்ல வேண்டும், நிவேதனம் செய்யும் பொழுது என்ன பாடல் பாட வேண்டும், ஆரத்தி எடுக்கும் பொழுது என்ன பாடல் பாட வேண்டும் என்றெல்லாம் அச்சு போட்டு இருக்கிறார்கள். அதை மனப்பாடம் செய்து கொண்டு, நாம் பூஜை செய்துவிட்டு, முறையாகப் பூஜை செய்து விட்டோம், சிறந்த ஆன்மிகவாதியாக மாறிவிட்டோம் என்று நினைத்துக் கொள்கின்றோம். ஆனால், எத்தனைப் பாடல்களை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்? எப்படி பூஜை செய்கிறீர்கள் என்பதன் அடிப்படையில் உங்கள் ஆன்மிக முன்னேற்றம் கிடையாது.
நீங்கள் மற்றவர்களிடம் எப்படி நடந்து கொள்கிறீர்கள்? பிறரை எப்படி மதிக்கிறீர்கள்? பிறருடைய தவறுகளை எப்படி மன்னிக்கிறீர்கள்? பிறருக்கு எப்படி உதவுகிறீர்கள்? பிறருடைய கஷ்டங்களைப் பார்த்து எப்படி மனம் நெகிழ்கிறீர்கள்? என்ற உணர்வுதான் படிப்படியான ஆன்மிக வளர்ச்சி. இந்த மன நிலையை அடைந்து கொண்டே வந்தால், நீங்கள் செய்கின்ற பூஜையின் பலன் உங்களுக்கு கிடைத்துக் கொண்டே இருக்கிறது என்று பொருள். நூறு பாசுரங்கள் அல்லது 100 தேவாரப் பதிகங்கள் மனப்பாடமாகச் செய்வதைவிட, ஒரே ஒரு பாடலை நீங்கள் பாடுவதோடு, அந்தப் பாடலின் கருத்துக்குப் பொருந்துவது போல் உங்கள் வாழ்க்கையிலும் கடைபிடிக்க ஆரம்பித்து விட்டால், ஆன்மிகம் உங்களுக்கு வசப்பட்டுவிட்டது. நீங்கள் ஆன்மிகத்தில் முன்னேறிவிட்டீர்கள் என்று பொருள்.
