நிம்மதி அருள்வாள் நிசும்பசூதினி

இறைவன் படைப்பில் ஆண், பெண் இருபாலாருமே சம மதிப்பு கொண்டவர்கள். இதை ஆன்மிக ரீதியாக வலியுறுத்தத்தான் சிவபெருமான் அர்த்தநாரீஸ்வரராகவும், மஹாவிஷ்ணு, லட்சுமி நாராயணனாகவும் உருவகப்படுத்தப்படுகிறார்கள். இதனாலேயே ஈசன், ஒரு பெண்ணின் பிரசவ காலத்தில் அவளுடைய தாயைப் போல உருவெடுத்து வந்து, உதவி புரிந்து, தாயுமானவன் ஆனார். அதேபோல திருமாலும் ‘வைகுந்த கமலயா’ என்றழைக்கப்படும் லட்சுமி நாராயணனாகத் திருக்கோலம் பூண்டிருக்கிறார். இந்த சொரூபத்தில், நாராயணன் பரப்பிரம்மமாகவும், மகாலட்சுமி, இயற்கையின் மொத்த வடிவாகவும் காட்சியளிக்கிறார்கள்.

பொதுவாக பெண்ணின் இயல்பு, மென்மையும், நளினமும்தான். போர்க்குணமும் ஆழ்மனதில் உண்டுதான் -ஆனால், உரிய சந்தர்ப்பம் வரும்போதுதான் இது விஸ்வரூபம் எடுக்கும். கொங்கண சித்தரின் செருக்கை அடக்கி அவருக்கு ஞானம் புகட்டியவள் ஒரு பெண்தான். அது என்ன சம்பவம்?

சித்தர் கானகத்தில் ஆழ்ந்த தவத்தில் ஈடுபட்டிருந்த போது அவரது தலைக்கு மேலே பறந்து சென்ற ஒரு கொக்கு அவர் மீது எச்சமிட்டுவிட்டது. அந்த இடையூறால் தவம் கலைந்த சித்தர், கடுங்கோபத்துடன் அந்தக் கொக்கை பார்க்க, அந்தப் பார்வையின் வெப்பத்தில் அது தீய்ந்து கருகி விழுந்தது. சில காலத்துக்குப் பிறகு, அவர் ஒரு வீட்டின் முன் போய் நின்று உணவு யாசித்தார். வீட்டுப் பெண்மணி அப்போது தன் கணவருக்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்தாள்.

ஆனாலும், வாசலுக்கு வந்து, ‘சற்று காத்திருங்கள் முனிவரே. என் கணவருக்கு முழுமையாக உணவு பரிமாறிவிட்டு வந்து உங்களுக்கு அன்னமளிக்கிறேன். கணவருக்கு நான் செய்யும் கடமையை இடையில் துறக்க என்னால் இயலாது’ என்று பணிவாகக் கூறினாள். உடனே கோபமுற்றார் சித்தர். அந்தப் பெண்ணை தீ உமிழும் கண்களால் பார்க்க, அவளோ வெகு அலட்சியமாக, ‘என்னை என்ன அந்த கொக்கு என்று நினைத்தீர்களோ?’ என்று கேட்டு அவரைத் திகைக்க வைத்தாள். கணவனுக்குதான் முதல் உபசாரம் என்ற கற்பு நெறி தவறாத அந்தப் பெண்ணால் சித்தரின் முந்தைய கோபத்தையும், அதனால் ஒரு கொக்கு உயிரிழந்ததையும் அவளால் அறிய முடிந்திருந்தது! அதைக் கேட்ட உடனேயே தன் அகந்தை முற்றிலுமாக அகல, அப்போதுதான் கொங்கணர், பூரண முனிவரானார்.

இந்த வகையில் ஒரு பெண்ணின் ஆற்றலுக்கு அளவீடே கிடையாது. நீறு பூத்த நெருப்பாக அது உள்ளடங்கி இருக்கிறதே தவிர, அது ஆணுக்கு நிகரானது, ஏன் மேலானதும்கூட என்பதுதான் உண்மை. நியாயமான கோபம், அதனால் ஏற்படும் வீரம், அதனால் அதர்மத்துக்குத் துணை போகிறவர்களுக்கு ஏற்படும் அழிவு எல்லாம், ஒரு பூ, புயலானதால் ஏற்படுபவைதான்.

இத்தகையப் பெண்களை தெய்வமாகவே போற்றி வழிபடுவது நம் தமிழ் பண்பாடாக இருக்கிறது. சில சரித்திரச் சான்றுகள், பல புராண கதைகள் என்று அந்தப் பெண் தெய்வம் ஒவ்வொன்றுக்கும் நியாயமான பின்னணி இருக்கும். அதனாலேயே மூத்தவர்கள் சொன்னவற்றை அப்படியே ஏற்றுக் கொண்டு, இளைய சமுதாயத்தினரும் ஏற்கெனவே பின்பற்றப்பட்டு வரும் அதே சம்பிரதாயப்படி பெண் தெய்வங்களை வணங்கி நலம் பெறுகிறார்கள்.

நிசும்பசூதினி-அத்தகைய காவல் தெய்வங்களில் ஒருவள். கி.பி, எட்டாம் நூற்றாண்டிலிருந்தே இந்த அம்மன் கொண்டாடப்பட்டு வருகிறாள். அருப்புக்கோட்டை அருகே கமுதி மேலராமநதி கிராமத்தில் அதற்கான ஆதாரம் கிடைத்திருக்கிறது. இந்த அம்மன், தலையில் அடர்ந்த கேசம், மார்பில் நாக கச்சை அணிந்து, எட்டுக் கைகளுடன் காட்சி தருகிறாள். திரிசூலம், உடுக்கை, கேடயம், மணி ஆகியவற்றை ஏந்தியிருக்கிறாள். கழுத்தில் மாலையும், இடுப்பில் மேகலையும், பட்டாடையும் அணி செய்கின்றன. நிசும்பன் என்ற அரக்கனை வதம் செய்ததால் ‘நிசும்பசூதினி’ என்று பெயர் பெற்றிருந்தாலும், மேலராமநதி கிராமத்து மக்கள், ‘வாழவந்த அம்மன்’ என்றும் பெயரிட்டு, அன்னையை வணங்கி வருகிறார்கள். மக்களை வாழ்விக்க வந்த அம்மன் என்றும் பொருள் கொள்ளலாம்.

தஞ்சை மாநகரில் சோழ மன்னர்களின் இஷ்ட தெய்வமாக நிசும்பசூதினி விளங்கியிருக்கிறாள். தாங்கள் ஈடுபடும் போரில் வெற்றி காண்பதற்கு இந்த அம்மனை மன்னர்கள் வேண்டிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் விருப்பம் ஈடேறியதால், அன்னைக்குக் கோயில் கட்டித் தம் நன்றிக் கடனைச் செலுத்தியிருக்கிறார்கள். கி.பி. 850ம் ஆண்டிலிருந்தே இந்தக் கோயிலின் சரித்திரம் தொடங்குகிறது. அப்போதைய மன்னன் விஜயாலய சோழன்.

‘எங்கெங்கு நோக்கினும் சக்தியடா’ என்பது போல, தன் நாட்டில் எட்டு திக்குகளிலும், திசைக்கு ஒன்றாக எட்டு காளி கோயில்களை நிர்மாணித்தான். அப்போது வடக்கு திசை நோக்கியவாறு ஒரு கோயிலை அமைத்து, காளியைத் தனக்கும் தன் குடும்பத்தார் மற்றும் தன் நாட்டு மக்கள் அனைவருக்கும் அருள் வழங்குமாறு வேண்டிக் கொண்டான். அப்போது அம்மனும், சும்பன் மற்றும் நிசும்பன் சகோதர அரக்கர்களை மாய்த்த போர்க் கோலத்தில் மன்னனுக்குக் காட்சி அளித்தாள்.

அந்த உருவையே அப்படியே பிரதிஷ்டை செய்து கோயிலை உருவாக்கினான், விஜயாலய சோழன். உலகப் புகழ் வாய்ந்த தஞ்சை பெருவுடையார் கோயிலை நிர்மாணித்த ராஜராஜ சோழன், அவனுடைய முந்தைய தலைமுறை மன்னர்கள், அவனுக்குப் பிந்தைய ராஜாதிராஜன் மற்றும் அவனுடைய வாரிசுகளுக்குப் போர் வெற்றிகளை அளித்துப் பேரருள் புரிந்திருக்கிறாள், நிசும்பசூதினி.

போரில் வெற்றி காண்பதாகிய, வன்முறையின் பலன் கிட்ட அம்மன் அருள் பாலிக்கிறாள் என்றால் என்ன பொருள்? அநீதியும், அதர்மமும் அழிய வேண்டும் என்ற நோக்கம்தான். இந்தப் பொதுநல எண்ணத்தில் அம்பிகை சும்பன் மற்றும் நிசும்பனை வதம் செய்து உலகுக்கு நன்மை ஒளி தோன்றச் செய்தாள். ஸ்ரீ தேவி மஹாத்மியம் இந்த அசுரர்களுடன் பார்வதி என்ற துர்க்கை என்ற அம்பிகை போரிட்ட காட்சிகளை நுணுக்கமாக விவரிக்கிறது. அசுரர்களின் சகாக்கள், உறவினர்கள் என்று அனைவரையும் அழித்தொழித்த சம்பவங்கள் பிரமிப்பை உண்டு பண்ணுகின்றன. நிறைவாக, நிசும்பன் தன் இறுதி முயற்சியாக அம்பிகையின் சிம்ம வாகனத்தைத் தாக்கினான்.

உடனே வெகுண்டாள் அம்பிகை. எந்த ஆணாலோ அல்லது அரக்கர் வம்சத்தாலோ தாம் இறப்பை எய்திவிடக் கூடாது என்று வரம் பெற்றிருந்த சும்ப – நிசும்பனை, பெண்ணாகி வந்த பராசக்தி மாய்த்தாள். தன் சூலாயுதத்தால் நிசும்பனுடைய முடிவைத் தீர்மானித்தாள். அசுரர்களுக்கு முன்னே சூரியன், சந்திரன் மற்றும் அக்னியைத் தன் முக்கண்களாகக் கொண்டு, மென்மையான கரங்களில் பாசம், அங்குசம், வில், மலர், அம்பு ஆகியன திகழ, சிரசில் பிறை சந்திரனைச் சூடி, கம்பீரத் தோற்றம் காட்டினாள்.

இந்தக் காட்சியை, ‘‘சூலஹஸ்தம் ஸமாயாந்தம் நிசும்ப அமரார்தனம் ஹ்ருதி விவ்யாத சூலேன வேகாவித்தேன சண்டிகா’’ என்று வர்ணிக்கிறது தேவி மஹாத்மியம். இனி தஞ்சாவூர், பூமால் ராவுத்தன் கோயில் தெருவில் அருளாசி வழங்கும் நிசும்பசூதினி என்ற வடபத்ரகாளியை தரிசிப்போமா? சுமார் ஏழடி உயரத்தில் வீறு கொண்டு நிற்கிறாள் அன்னை. எட்டு கரங்கள் சூலம், வில், மணி, கத்தி, பாசம், கேடயம் மற்றும் கபாலம் ஆகியவற்றை ஏந்தியிருக்கின்றன. தலையில் கேசம் மேல் நோக்கி தீப்பிழம்புகள் போல நீட்டிக் கொண்டிருக்கிறது.

இடது பக்கமாக தலையை சாய்த்திருக்கிறாள். வலது காதில் பிரேத குண்டலமும், இடது காதில் பெரிய அளவு குழையையும் அணிந்திருக்கிறாள். மண்டை ஓடுகளைக் கோத்த பூணூல் அவளுடைய மார்பகத்துக்குக் குறுக்காகச் செல்கிறது. இடது கரம் தன் காலடியில் வீழ்ந்து கிடக்கும் அரக்கனைச் சுட்டிக் காட்டுகிறது. வலது பாதமோ துண்டிக்கப்பட்ட பெரியதான ஒரு தலை மீது பதிந்திருக்கிறது. சற்று உற்றுப் பார்த்தால் அந்த வலது காலை, அம்பிகை பலமாக அழுத்தி ஊன்றியிருப்பது புலனாகும்!

ஒரே பிராகாரம் கொண்ட சிறிய கோயில்தான்; ஆனாலும், இதன் தொன்மைச் சிறப்பு அளப்பறியது. சோழ மன்னர்களுக்கே குலதெய்வமாக விளங்கிய அன்னையின் கோயிலல்லவா! தொடர்ந்து ஒன்பது வாரங்கள் இந்த அன்னையை வழிபட்டு வருவது பல தோஷங்களை நீக்கும் என்று அனுபவப்பட்ட பக்தர்கள் கூறுகிறார்கள். அந்த ஒன்பது வாரங்களும் வெள்ளி, ஞாயிறு அல்லது செவ்வாய்க் கிழமைகளில் ராகு காலத்தில் வந்து அர்ச்சனை செய்து தரிசிக்கலாம்.

இதனால் தார தோஷம், செவ்வாய் தோஷம், களத்திர தோஷம் மற்றும் ராகு-கேது கிரக தோஷங்கள் எல்லாம் நிவர்த்தியாகும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. அதேபோல பணி, தொழில் இவற்றில் ஏதேனும் முன்னேற்றக் குறுக்கீடுகளோ, வஞ்சகம் சூழ்தலோ இருக்குமானாலும், இதே ஒன்பது வார வழிபாட்டில் அன்னை மனம் குளிர்ந்து, தீயவற்றைப் பொசுக்கி, நன்மைகள் பெருகச் செய்வாள் என்கிறார்கள். பிரச்னை பெரிதாகவோ, தீருமா என்ற மலைப்புக்குள்ளாக்குவதாகவோ இருக்குமானால் அத்தகைய பக்தர்கள் அம்பிகைக்கு பசுப்பாலால் அபிஷேகம் செய்தால் நிவர்த்தி காண முடியும்.

தஞ்சை நகரைச் சுற்றி எட்டு திக்குகளில் அமைந்திருக்கும் எட்டு காளி கோயில்களையும் இங்கே ஒருசேர தரிசிக்கலாம். ஆமாம், இந்தக் கோயிலிலுள்ள தூண்களில் அந்த எட்டு திக்கு அம்மன்களையும் கண்டு மகிழலாம். பண்டைய நாட்களில்தான் மன்னர் -போர் என்ற சூழ்நிலை இருந்தது, அதனால் அரசர்கள் நிசும்பசூதினியை வழிபட்டு அவள் அருளிய ஆற்றலால் எதிரிகளையும், பகைவர்களையும் வென்றார்கள்; ஆனால் இக்காலத்தில் அப்படி ஒரு சூழலே இல்லையே என்ற கேள்வி எழலாம்.

அப்போது நேருக்கு நேர் போர்; இப்போதோ மனசுக்குள்ளேயே போர்! வஞ்சகம், சூழ்ச்சி, காழ்ப்புணர்ச்சி, ஏமாற்றம், கோழைத்தனம் எல்லாம் மனசுக்குள்ளேயே குடி கொண்டு இயல்பான வாழ்க்கைக்கு இயைந்து போக இயலாமல் நம்மைத் தடுக்கின்றனவே! அசுரர்களை அழித்தது போல இந்த அசுர குணங்களை அழிப்பதுதான் அம்மன் நிசும்பசூதினியின் இப்போதைய அருள். அன்னையை வழிபடுவதால் மனம் மற்றும் உடல் ரீதியான சோர்வு, அயர்ச்சி, அவநம்பிக்கை, தயக்கம் ஆகியவற்றிலிருந்து விடுபட்டு புத்துணர்வு பெறலாம்; புது வாழ்க்கை தொடங்கலாம்.
(தொடரும்)

ப்ரபுசங்கர்

Related Stories: