பகவான் மகாவிஷ்ணு எடுத்த பத்து அவதாரங்களில் மிகவும் உன்னதமான, தனி மனித ஒழுக்கத்தின் மாண்பை உணர்த்திய உயர்ந்த அவதாரமாக ஸ்ரீராமவதாரம் விளங்குகிறது.ஸ்ரீராமாவதாரத்தில் அயோத்தியை ஆண்ட தசரத மகாராஜனுக்கு புத்திரனாகப் பிறந்தார் ராமபிரான். தசரத மகாராஜா தன்மகன் ராமருக்கு அயோத்தி மன்னராக மகுடம் சூட்டிய போது- கைகேயின் சூழ்ச்சியால் ராமபிரான் பரதன் கையில் ஆட்சியை ஒப்படைத்துவிட்டு 14 ஆண்டுகள் ராமர் வனவாசம் புறப்பட்டார். இப்படி அயோத்தி முதல் ராமேஸ்வரம் வரை அவர் காலடி பட்ட புனித தலங்கள் பற்றி சில தலங்களை குறித்து குறிப்புகளாக பார்ப்போமா!
அயோத்தி: ராமஜென்ம பூமி என்றழைக்கப்படும் அயோத்தி ராமர் காலடி பட்ட புனித பூமியாகும். ராமாயணத்தை தமிழில் எழுதிய கம்பர் வட இந்திய மொழியில் எழுதிய துளசிதாசர் இவர்களுக்கு இந்த இதிகாசத்தை எழுதிட உத்வேகம் அளித்த இடம் அயோத்தி. உ.பி.யின் வாரணாசியிலிருந்து லக்னோ செல்லும் ரயில் மார்க்கத்தில் உள்ளது அயோத்தி நகரம்.
பக்ஸர்: விஸ்வாமித்திர முனிவர் தன்னுடைய யாகத்திற்கு இடையூறு செய்த தாடகை எனும் அரக்கியை அழிப்பதற்காக ராமரையும் லட்சுமணரையும் காட்டு வழியாக இந்த இடத்திற்கு அழைத்து வந்தார். அப்போது அவர்களுக்கு பலை, அதிபலை என்று இரண்டு முக்கியமான மந்திரங்களை இங்கு உபதேசித்தார். பீகார் தலை நகர் பாட்னாவிலிருந்து மொகல் சராய செல்லும் ரயில் மார்க்கத்தில் உள்ளது பக்ஸர் பக்ஸருக்கு சித்தாசிரமம், வேத சிரா, கிருஷ் என்ற பெயர்களும் உண்டு.
அகல்யா குண்ட்: பல்லாண்டு காலம் ‘கல்’லாகக் கிடந்தவள் அகல்யை. காட்டிற்கு ஸ்ரீராமபிரான் வனவாசம் வந்த போது அவரது பாதம் கல் மீது பட்டது. அப்போது கல்லாக இருந்த அகல்யை சாப விமோசனம் பெற்று பெண்ணானதாக புராணம் கூறுகிறது. இந்த அற்புதம் நிகழ்ந்த இடம் ‘அகல்யா குண்ட்’ என்று பெயர் பெற்றது. சீதாமடி – தர்பங்கா ரயில் மார்க்கத்தில் ‘கம்தவுல்’ என்ற ரயில் நிலையத்திற்கு அருகில் அஹியாரி’ என்ற இடம் உள்ளது. அங்கிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் ‘அகல்யா குண்ட்’ இருக்கிறது.
ஜனக்பூர்: அழகிய மிதிலையை ஆண்ட ஜனகர் பெயரால் அவர் ஆட்சி செய்த இடம் ஜனக்பூர் என்று அழைக்கப்பட்டு வருகிறது. இங்கிருந்த மைதானத்தில் தான் சீதாவை கரம்பிடிக்க ராமர் சிவதனுசு’ என்ற வில்லை முறித்த சம்பவம் நிகழ்ந்ததாம். சீதாமடி என்ற இடத்திலிருந்து 40 கி.மீ. தொலைவில் ‘ஜனக்பூர்’ உள்ளது.சித்திர கூட்: மத்திய பிரதேசத்தில் ஜான்சி ரயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து. ஜபல்பூர் செல்லும் ரயில் மார்க்கத்தில் சென்றால் ‘சித்திர கூட்’ என்ற ரயில் நிலையம் உள்ளது.
அங்கிருந்து ஜீப் மூலமாக மலைப் பாதையில் சென்றால் வருகிறது ‘சித்திரக் கூட்’ என்கிற சித்திரக் கூடம். ராமபிரானின் 14 ஆண்டு கால வனவாசத்தில் இந்த இடம் மிக முக்கியமானதாகும். இந்த சித்திரக் கூட் பகுதியில் ராமபிரான் – சீதை, லட்சுமணன் மூவரும் சில மாதங்கள் தங்கி ஓய்வு பெற்றனர். ஸ்ரீராமர் நீராடிய குளம் கூட இங்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பஞ்சவடி: அயோத்தியிலிருந்து வனவாசத்திற்குப் பயணித்தபோது ராமபிரான் சில முனிவர்களை சந்திக்கிறார். அவர்கள் ஓரிடத்தில் அவரைத் தங்கும்படி கூற ராமரும் அந்த இடத்தில் தங்குகிறார். ஐந்து ஆலமரங்கள் அவ்விடத்தில் இருந்த படியால் அந்த இடம் ‘பஞ்சவடி’ என்ற பெயர் பெற்றது. மும்பையிலிருந்து புசாவல் செல்லும் ரயில் மார்க்கத்தில் நாசிக் ரோட் என்ற ரயில் நிலையத்தில் இறங்கி 8 கிலோ மீட்டர் பயணித்தால் ‘பஞ்சவடி’ என்ற இடத்தை அடையலாம்.
கிஷ்கிந்தா:- ஸ்ரீராமரின் வாழ்வில் வானரங்களின் பெரும் பங்கு இருப்பது அனைவரும் அறிந்ததே வானரங்களின் அரசனான வாலியும், அவன் இறந்த பிறகு சுக்ரீவனும் அரசாட்சி செய்த இடம் கிஷ்கிந்தா. ராமாயண காவியத்தில் கிஷ்கிந்தா காண்டம்’ என்ற பகுதியே உள்ளது. ராமர் வாழ்க்கையில் பிரசித்தி பெற்ற இந்த இடம். கர்நாடக மாநிலம் கூப்ளி – பெல்லாரி வழித் தடத்தில் ஹான்ஸ்பேட் என்ற இந்த இடம்தான் கிஷ்கிந்தா ராஜ்யம் இருந்த பகுதி.
ராமேஸ்வரம்: ஸ்ரீராம பிரான் இராவணனோடு போர் புரிய இலங்கைக்கு செல்ல பாலம் அமைத்த இடம் ராமேஸ்வரம். ராமேஸ்வரம் கடலில்தான் பாலம் வைத்து இலங்கை சென்று வெற்றிக் கொடி நாட்டினார். பின்னர் ராவணனைக் கொன்ற பாவம் தீர கடற்கரையில் மணலில் சிவலிங்கம் செய்து சிவபெருமானை வணங்கினார். இங்குள்ள ராமநாதர் கோயிலில் மூலவராக ராமர் வீற்றிருப்பதாக தல புராணம் சொல்லுகிறது.ஸ்ரீராமர் தன் வாழ்க்கையில் அயோத்தி முதல் ராமேஸ்வரம் வரை பயணித்த புனித இடங்களைப் பற்றிய இக்கட்டுரையை ஸ்ரீராம நவமி நன்னாளில் படித்து மகிழுங்கள்.
அயன்புரம் த. சத்திய நாராயணன்
