ஒரு சிறிய கிராமத்தில் மாலா என்ற ஒரு சிறுமி வாழ்ந்து வந்தாள். அவள் படிப்பில் மிகவும் ஆர்வமுள்ளவள். நல்ல வாழ்க்கை வாழ வேண்டும் என்ற கனவு அவளுக்கிருந்தது. ஆனால், அவளுடைய குடும்பம் மிகவும் வறுமையில் இருந்தது. அப்பா தினக்கூலி வேலை செய்தார். அம்மா வீட்டு வேலை செய்து குடும்பத்தை நடத்தினார். ஒரு நாள் பள்ளியில் ஆசிரியர், “நாளைக்கு எல்லாரும் ஒரு செய்முறைப் பணியை செய்து கொண்டு வரவேண்டும்” என்று கூறினார். மாலாவுக்கும் அதைச் செய்ய வேண்டும் என்ற ஆசை வந்தது. அதற்கு வரைபடக் காகிதம், கலர் பென்சில், பசை உட்பட சில பொருட்கள் வாங்க வேண்டும். மாலா, அம்மாவிடம் கேட்டாள். ஆனால் அம்மா, மெதுவாகச் சொன்னார்: “மாலா… இப்ப வீட்டில் காசு இல்லை.” அந்த வார்த்தைகள் மாலாவின் மனதை மிகவும் வருத்தப்படுத்தின. அடுத்த நாள் பள்ளிக்கு செல்லும் வழியில் ஒரு கடையில் அவளுக்கு தேவையான பொருட்கள் இருந்தது. வறுமையும் ஆசையும் சேர்ந்து அவளுடைய மனதை குழப்பின. ஒரு நிமிடம் அவள் தவறான முடிவு எடுத்தாள். ஒரு வரைபடக் காகிதத்தை எடுத்து பையில் திருடி வைத்துக்கொண்டால். ஆனால், உடனே மாட்டிக்கொண்டாள். அங்கிருந்தவர்கள் அவளை திட்டினர். அந்த அவமானம் அவளுடைய சிறிய இதயத்தை மிகவும் காயப்படுத்தியது. அவள் அழுதாள்.
அந்த நேரத்தில் அவளுடைய ஆசிரியர் அங்கு வந்தார். நடந்ததை கேட்டார். கோபப்படாமல் கடைக்காரருக்கு பணம் கொடுத்தார். பின்னர் மாலாவிடம் அமைதியாகச் சொன்னார்; “வறுமை ஒரு சோதனைதான், ஆனால் தவறு அதன் தீர்வு அல்ல. வாழ்க்கையில் நேர்மையே மனிதனின் உண்மையான செல்வம்.” அந்த நாள் மாலா ஒரு பெரிய பாடத்தை கற்றுக்கொண்டாள். மனித வாழ்க்கையில் சோதனைகள் வரும். சில நேரங்களில் அவை தவறான வழிக்கு அழைக்கும். ஆனால், அந்த நேரத்தில் நாம் எடுக்கும் சரியான முடிவுதான் வாழ்க்கையை மாற்றுகிறது. இறைமக்களே, வேதாகமம் சொல்லுகிறது “நாம் நம்முடைய பாவங்களை ஒப்புக்கொண்டால், அவர் விசுவாசியும் நீதிமானுமாயிருந்து நம்முடைய பாவங்களை மன்னித்து, எல்லா அநியாயத்திலிருந்தும் நம்மை சுத்திகரிப்பார்” (1 யோவான் 1:9) என்பதாக வாசிக்கிறோம். நம்மை மன்னித்து ஏற்கும் கருணையுள்ளம் கொண்ட நம் தெய்வத்தின் துணை நாடினால் எந்தநிலையிலும் நம்மை நல்வழிபடுத்த அவர் வல்லவராக இருக்கிறார். ஆம், விழுந்தவன் எழும்பவேண்டாமா? மனிதன் விழுவது வாழ்க்கையின் முடிவு அல்ல. மனந்திரும்பி மீண்டும் எழுவதுதான் புதிய வாழ்க்கையின் தொடக்கம்.
– அருள்முனைவர். பெவிஸ்டன்.
