அதிமுக- பாஜக கூட்டணியில் தமாகாவுக்கு 5 சீட் ஒதுக்கீடு தாமரை சின்னத்தில் போட்டி: ஜான் பாண்டியனுக்கு ஒரு சீட்

சென்னை: மேலிட பாஜ தலைவர்களிடம் ஜி.கே.வாசன் முறையிட்டு தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதை தொடர்ந்து என்டிஏ கூட்டணியில் தமாகாவுக்கு 5 சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் ஜான்பாண்டியன் தலைமையிலான தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு ஒரு சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில், பாஜ கூடுதல் தொகுதிகள் கேட்டு அழுத்தம் கொடுத்ததால் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை இழுபறியில் இருந்து வந்தது. இதையடுத்து, எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட கூட்டணி தலைவர்களை டெல்லிக்கு வரவழைத்து அமித்ஷா முன்னிலையில் தொகுதி பங்கீட்டை ஓரளவு இறுதி செய்தனர்.

நேற்று முன்தினம் அதிமுக தலைமை அலுவலகத்தில் பியூஸ் கோயல் முன்னிலையில் அதிமுக, அமமுக, பாமக ஆகிய கட்சிகளிடையே தொகுதி ஒதுக்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால், ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை. பின்னர் தமாகாவுக்கு வெறும் 2 சீட்ஒதுக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இதனால் ஜி.கே.வாசன் கடும் அதிருப்தி அடைந்ததாக தெரிகிறது. இதை தொடர்ந்து, அதிருப்தியில் இருந்த ஜி.கே.வாசன், முக்கிய நிர்வாகிகளை அழைத்து நேற்று முன்தினம் இரவு ஆலோசனை நடத்தி பாஜ தலைமைக்கு கட்சியினரின் அதிருப்தியை தெரிவிப்பது என்றும் முடிவு செய்ததாக கூறப்படுகிறது. இந்த அளவுக்கு குறைந்த சீட்டை ஏற்றுக் கொண்டு தேர்தலை சந்திக்க முடியாது என்று முடிவுக்கு வந்த நிலையில், நேற்று முன்தினம் பாஜ மேலிட தலைவர்களை தொடர்பு கொண்டு ஜி.கே.வாசன் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதாக தகவல் வெளியானது. இதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியுடன் பியூஸ் கோயல் உள்ளிட்ட மேலிட தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த நிலையில்தான் நேற்று சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்துக்கு சென்று ஜி.கே.வாசன் இந்த பிரச்னை குறித்து விவாதித்தார். அப்போது தொகுதி எண்ணிக்கை உறுதியானதாக கூறப்படுகிறது. பின்னர் தமகாவிற்கு 5 சீட்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இந்த ஒப்பந்தம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, பாஜ தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் ஆகியோர் முன்னிலையில் கையெழுத்தானது. அதன்படி இந்த 5 இடங்களிலும் தமாகா வேட்பாளர்கள், பாஜ கட்சியின் தாமரை சின்னத்தில் போட்டியிடுவார்கள் என்று ஜி.கே.வாசன் தெரிவித்தார். இதனிடையே என்டிஏ கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஜான் பாண்டியன் தலைமையிலான தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு ராஜபாளையம் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

Related Stories: