1. வீட்டு வசதித்துறையுடன் மதுவிலக்கு ஆயத் தீர்வைத் துறையை கையாண்டு, பின்னர் அது உங்களிடமிருந்து விடுவிக்கப்பட்டு மீண்டும் உங்களிடமே ஒப்படைக்கப்பட்டது என மாறிமாறி துறை பொறுப்புகளை நிர்வகிப்பது சவாலாக இல்லையா?
வீட்டுவசதி துறையைப் பொறுத்தவரை நிறைய திட்டங்களை நாங்க செயல்படுத்தி இருக்கோம். 40, 50 ஆண்டுகாலமா இருந்த பல பிரச்சனைகளுக்கு இப்ப தீர்வு காணப்பட்டுள்ளது. சுமார் 40-50 ஆண்டுகளாக விற்பனை ஆகாமல் இருந்த வீடுகளை விற்பனை செய்ய ஏற்பாடு செய்துள்ளோம். சிலவற்றை வாடகை குடியிருப்புகளாக மாற்றி பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளோம்.நிலம் எடுப்பு தொடர்பாக நோட்டீஸ் கொடுத்துவிட்டு, மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்த இடங்களால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டிருந்தனர். இதற்காக இரண்டு ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரிகளைக் கொண்ட குழு அமைக்கப்பட்டு, முதற்கட்டமாக ஒரு பகுதி நிலங்கள் விடுவிக்கப்பட்டுள்ளன. இப்போது 2500 சதுரடி முதல் 3500 சதுரடி வரையிலான கட்டிடங்களுக்கு ஆன்லைனில் ஆவணங்களைச் சமர்ப்பித்தாலே போதும், அனுமதி உடனே கிடைத்துவிடும். இந்த குறுகிய காலத்திற்குள் சுமார் 3 லட்சம் அப்ரூவல்கள் வழங்கப்பட்டுள்ளன. மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை ஒரு சூழலில் என்னிடம் கொடுக்கப்பட்டது, பிறகு மாற்றப்பட்டு மீண்டும் ஒப்படைக்கப்பட்டது. இது ஒரு நிர்வாக நடைமுறைதான். இதில் பெரிய பாதிப்போ அல்லது தொய்வோ ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை. நிர்வாகம் சரியாகத் தான் போய்க்கொண்டிருக்கிறது.
2. அத்திக்கடவு அவிநாசி திட்டம், காளிங்கராயன் கால்வாய் திட்டம் எந்த அளவுக்கு கிடப்பில் இருந்தன. இப்போது உங்கள் பணிகளால், அத்திட்டங்கள் தர உள்ள பயன்கள் என்னென்ன?
அத்திக்கடவு – அவிநாசி திட்டம் 1,045 குளங்களுக்கு பவானி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுப்பதற்காக 118 கி.மீ நீள குழாய்கள் மற்றும் 83 பீடர் லைன்களுடன் திட்டமிடப்பட்டது. ஆரம்பத்தில் 1 முதல் 3 வரையிலான பம்பிங் ஸ்டேஷன்களுக்கு நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் இருந்ததால் திட்டம் தொடங்கப்படாமல் இருந்தது. திமுக அரசு அமைந்தவுடன் விவசாயிகளை நேரில் சந்தித்துப் பேசி நிலத்தைப் பெற்று திட்டத்தை நிறைவேற்றினோம். காளிங்கராயன் கால்வாய் திட்டத்தை பொறுத்தவரை, ஒரு சொட்டு நீர் கூட வீணாகாமல் முழுமையாக விவசாயத்திற்கு பயன்படும் வகையில் சீரமைக்கப்பட்டுள்ளது. இது இப்போது ஒரு பகுதியில் நடக்கிறது, அடுத்தடுத்த ஆண்டுகளில் 5-6 கட்டங்களாக முழுமையாக செய்து முடிக்கப்படும்.
3. அதிமுகவின் கோட்டையாக இருந்த ஈரோட்டை ஏராளமான நலத்திட்டங்களை வழங்கி, திமுகவுக்கான எஃகு கோட்டையாக மாற்றியுள்ள உங்களுக்கு இந்தத் தேர்தலில் உள்ள பாதக சாதகங்கள் என்னென்ன?
தமிழக முதல்வர் எல்லா இடங்களையும் சமமாகத்தான் பார்க்கிறார். ஈரோட்டிற்கு நாங்கள் கேட்ட பல திட்டங்களை செய்து கொடுத்துள்ளார். புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் நீண்ட நாட்களாக பட்டா இல்லாமல் இருந்தவர்களுக்கு, துணை முதல்வர் தலைமையிலான குழு மூலம் ஆய்வு செய்யப்பட்டு தற்போது பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. தந்தை பெரியாரால் ஆரம்பிக்கப்பட்ட சிக்கைய நாயக்கர் கல்லூரியை அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. அங்கு தற்போது பெரிய மைதானம், நூலகம், ஐஏஎஸ் அகாடமி போன்றவை வரவுள்ளன. சுமார் 18,600 மாணவர்கள் அங்கு பயில விருப்பம் தெரிவித்துள்ளனர். ஐடி பார்க் அமைப்பதற்கான வேலைகள் தொடங்கியுள்ளன.
மருத்துவக் கல்லூரியில் இருந்த 550 படுக்கை வசதிகள், தற்போது 1150 படுக்கைகளாக உயர்த்தப்பட்டுள்ளன. பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு விடுதி வசதிகள் மற்றும் அடிப்படைத் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. அந்தியூர்ல 70 ஆண்டுகளுக்கு முன்னாடி ‘கண்டிஷன் பட்டா’ அப்படிங்கிற நிலைமை இருக்கு. அதை ‘அயன் பட்டாவா’ மாற்றி 70 ஆண்டு போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இவ்வாறு பல திட்டங்கள் மக்களை சென்றடைந்துள்ளது. புகழ்பெற்ற திண்டல் முருகன் கோயிலில் புதிய ராஜகோபுரம் அமைத்தல் மற்றும் கும்பாபிஷேகம் போன்ற பணிகள் செப்டம்பர் 22ல் சிறப்பாக நடைபெற்றன. மேலும், மக்களின் கோரிக்கையை ஏற்று மலையில் 207 அடி உயர முருகன் சிலை அமைக்க முதல்வர் ஒப்புதல் அளித்துள்ளார். திருப்பூர் தியாகி குமரனுக்கு இரண்டு இடங்களில் சிலைகள் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
4. விஜய் வருகையினால இளைஞர்கள் பெரும்பாலும் தவெக பக்கம் இருப்பதாக சொல்லப்படுது. இதை எப்படி சமாளிக்கப் போறீங்க?
திமுக இளைஞர் அணி மிகவும் வலுவாக உள்ளது. ஒரு சாதாரண இளைஞர் அணி கூட்டத்திற்கே பல்லாயிரக்கணக்கானோர் திரள்கிறார்கள். ஒவ்வொரு வாக்குச்சாவடி மட்டத்திலும் குறைந்தபட்சம் 20 இளைஞர்கள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையின் கீழ் இளைஞர் அணி மிக வேகமாக வளர்ந்து வருகிறது. கட்சிப் பற்று மற்றும் தலைவர்கள் மீதான நம்பிக்கையால் இளைஞர்கள் ஆர்வத்துடன் கட்சிப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
