பாஜ தலைவர்களிடம் நள்ளிரவில் ஜி.கே.வாசன் முறையீடு என்டிஏ கூட்டணியில் தமாகாவுக்கு 5 சீட்? எடப்பாடியுடன் திடீர் சந்திப்பு; அறிவிப்பு வெளியாகும் என தகவல்

சென்னை: மேலிட பாஜ தலைவர்களிடம் ஜி.கே.வாசன் முறையிட்டு தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதை தொடர்ந்து என்டிஏ கூட்டணியில் தமாகாவுக்கு 5 சீட் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. என்டிஏ கூட்டணியில் ஒவ்வொரு கட்சிகளாக நேரில் சந்தித்து கூட்டணியை ஒருங்கிணைத்து வந்த ஜி.கே.வாசனின் கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை. அதிமுக அலுவலகத்துக்கு ஜி.கே.வாசன் வராமல் புறக்கணித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. தமாகாவுக்கு வெறும் 2 சீட்டுகள் மட்டுமே ஒதுக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இதனால் ஜி.கே.வாசன் கடும் அதிருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் பாஜ மேலிட தலைவர்களை தொடர்பு கொண்டு ஜி.கே.வாசன் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இதை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியுடன் பியூஸ் கோயல் உள்ளிட்ட மேலிட தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதற்கிடையே நேற்று முன்தினம் நள்ளிரவு பியூஸ் கோயலை நேரில் சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. இதில் தொகுதி எண்ணிக்கை உறுதியாகியுள்ளது. இதையடுத்து, தமாகாவுக்கு 5 சீட்டுகள் ஒதுக்க அதிமுக முன் வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று பிற்பகல் பசுமைவெளிச்சாலையில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்துக்கு சென்று ஜி.கே.வாசன் இந்த பிரச்னை குறித்து விவாதித்தார். இதை தொடர்ந்தே, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: நான் சென்னையில் நேற்று முன்தினம் இரவு ஒன்றிய அமைச்சரும், தமிழக பாஜ தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயலை சந்தித்தேன். நடைபெற இருக்கின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீட்டில் தமாகாவின் எண்ணிக்கைகள் குறித்து முடிவு எடுக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

* சைக்கிள் சின்னம் தேர்தல் ஆணைய டிஸ்பியூட்டில் இருக்கிறது
பசுமைவெளிச் சாலையில் உள்ள இல்லத்தில் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்த பிறகு ஜி.கே.வாசன் நிருபர்களிடம் கூறியதாவது: தொகுதிகள் எத்தனை என்பது அதிகாரப்பூர்வமாக, கூட்டணி கட்சிகளுககு தலைமை தாங்கும் அதிமுக அறிவிக்கும். என்னுடைய தனி சின்னம் எல்லாம் இப்போது தேர்தல் ஆணையத்தில் பிரச்னையில் இருக்கிறது. பதில் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.தொகுதி தொடர்பான எண்ணிக்கை இறுதி செய்யப்பட்டு விட்டது. அதேபோல தொகுதிகளும் சுமுகமாக இருக்க வேண்டும் என்று பேசிக்கொண்டிருக்கிறோம் என்றார்.

Related Stories: