சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் நீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு: எஸ்டிபிஐ கட்சி தலைவர் வரவேற்பு

சென்னை: சாத்தான்குளத்தில் தந்தை, மகன் கொலை வழக்கில் நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளதாக எஸ்டிபிஐ கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது. எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்ட அறிக்கை: கடந்த 2020ம் ஆண்டு, தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் பென்னிக்ஸ் காவல் சித்ரவதை மூலம் கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையே உலுக்கியது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 போலீசாரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் வழங்கியுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பை எஸ்டிபிஐ கட்சி வரவேற்கிறது. அதிகார மிரட்டல்களும், சீருடை பலமும் உண்மையை என்றென்றும் மறைத்துவிட முடியாது என்பதற்கு இந்த தீர்ப்பு ஒரு மிகச்சிறந்த சான்றாகும்.

மக்களைப் பாதுகாக்க வேண்டிய காவலர்களே, சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு ஒரு குடும்பத்தையே அழித்த செயல் மன்னிக்க முடியாத மாபெரும் குற்றமாகும். இந்த தீர்ப்பு, அதிகாரத் துஷ்பிரயோகத்தில் ஈடுபடும் எந்தவொரு அரசு ஊழியரும் சட்டத்திற்கு மேலானவர் அல்ல என்பதை உரக்கச் சொல்கிறது. பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இது ஒரு முதற்கட்ட வெற்றியாகும். வரும் 30ம் தேதி அறிவிக்கப்பட உள்ள தண்டனை விவரங்கள், இனிவரும் காலங்களில் இதுபோன்ற மனித உரிமை மீறல்களில் ஈடுபட நினைக்கும் எவருக்கும் ஒரு பாடமாகவும், எச்சரிக்கையாகவும் அமைய வேண்டும்.

இந்த விவாகரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு எஸ்டிபிஐ கட்சி ஆரம்பம் முதலே உறுதுணையாக இருந்து வருகிறது. மனித உரிமைகளைக் காலில் போட்டு மிதிக்கும் இத்தகைய லாக்-அப் மரணங்கள் இனி தமிழகத்தில் எங்கும் நிகழக் கூடாது. காவல்துறையில் ஒரு சில அதிகாரிகளால் நிகழ்த்தப்படும் இத்தகைய அராஜகங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் தமிழக அரசு கடுமையான சட்ட நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: